அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அங்கம்-வங்கம்-கலிங்கம்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பிளவுபடுத்தப்பட்ட பண்டைய அங்க தேசம் (பிகார்), வங்க தேசம் (மேற்கு வங்கம்), கலிங்க தேசம் (ஒடிஸா) ஆகிய மூன்றும் இப்போது பாஜகவின் ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களாக மாறி இருக்கின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையில் இன்று பாஜக ஆட்சி அமைய இருக்கிறது. மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் 294 இடங்களில் 207 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. 2016-இல் வெறும் மூன்று இடங்களை மட்டுமே வென்ற பாஜக, 2021-இல் 77 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உயர்ந்து இப்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருப்பதை வரலாற்றுச் சாதனை என்றுதான் கூற வேண்டும்.

ஒன்றுபட்ட வங்காளம், பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் பிகார், ஒடிஸா, வங்காளம் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பிளவுபடுத்தப்பட்ட பண்டைய அங்க தேசம் (பிகார்), வங்க தேசம் (மேற்கு வங்கம்), கலிங்க தேசம் (ஒடிஸா) ஆகிய மூன்றும் இப்போது பாஜகவின் ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களாக மாறி இருக்கின்றன.

திரிபுரா, அஸ்ஸாம் மாநிலங்களை போலல்லாமல், மேற்குவங்கத்தில் பாஜக தனது செல்வாக்கை உடனடியாக நிலைநாட்டி விடவில்லை. கடந்த 10 ஆண்டுகள் இதற்காக அந்தக் கட்சி கடுமையாக உழைத்திருப்பது மட்டுமல்லாமல், அடித்தட்டிலிருந்து மேல் நிலை வரையில் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு தனது வெற்றியைக் கட்டமைத்திருக்கிறது.

ஆட்சிக்கு எதிரான மனநிலை தேர்தலில் பிரதிபலிக்கும் என்பது உண்மை. அது மறையக்கூடும், பிளவுபடக்கூடும் அல்லது ஒன்றுபட்டு ஆட்சிக்கு எதிரான சூழலை உருவாக்கக் கூடும். எதுவாக இருந்தாலும் அதைத் திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்வதில்தான் ஓர் அரசியல் கட்சியின் வெற்றி அடங்கி இருக்கிறது.

நடந்து முடிந்த தேர்தலின் மிக முக்கியமான அம்சம் பாஜகவின் அமைப்பு ரீதியான கட்டமைப்பு. வாக்கு விகிதத்தை இடங்களாக மாற்றுவது எளிதல்ல. குறைந்த வாக்கு வித்தியாசம், அதிகரித்த வாக்குப் பதிவு, வாக்குச் சாவடி அளவிலான தேர்ந்த கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை நடந்து முடிந்த மேற்கு வங்க தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டமைத்த வியூகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

பவானிபூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான காரணத்தை அந்தத் தொகுதிலேயே தங்கியிருந்து பலரைச் சந்தித்து ஆய்வு செய்து தெரிந்து கொண்டார் அமித் ஷா. இறந்து போனவர்களும், போலி வாக்காளர்களும் பவானிபூர் தொகுதியில் கணிசமாக இருந்தது கண்டறியப்பட்டது.

எஸ்.ஐ.ஆர். மூலம் அகற்றப்பட்ட 47,000 வாக்காளர்கள் அதை உறுதிப்படுத்தினர். அதேபோல, திரிணமூல் காங்கிரஸாக்கு எதிராக வாக்களிக்கக் கூடியவர்கள் தடுக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மாநிலம் தழுவிய அளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நேரடியாகக் களமிறங்கி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளரை நியமித்தார். பாஜக தொண்டர்கள் அனைவரும் முற்பகல் 11 மணிக்குள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு அனைவரும் வாக்காளர்களை அதிக அளவில் வாக்களிக்கச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் அவர் இட்டிருந்த கட்டளை.

அமித் ஷா வாக்குச்சாவடி அளவிலான தரவுகளைச் சரிபார்த்தது மட்டுமல்லாமல், மாவட்ட ரீதியாக தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் அடிப்படையில் தொகுதி வாரியான தேர்தல் உத்தியை முன்னெடுத்தார்.

எந்தவொரு தொகுதியும் அவர் பார்வையிலிருந்து விடுபடவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாகக் கருதி அதற்கான உத்தி கையிலெடுக்கப்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாக்குச்சாவடி வாரியான திட்டமிடல் மட்டுமல்லாமல், ராணுவ ரீதியிலான கட்டுப்பாட்டுடன் தொண்டர்கள் தயார்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டனர். உள்ளூர் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இதற்கு முன்பு மேற்கு வங்கம் சந்திக்காத அளவில் கட்சிக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டது. அதைப் பார்த்து தேர்தல் உத்தியிலும் உட்கட்சி கட்டமைப்பிலும் தேர்ந்த இடதுசாரிகளே வியப்பில் சமைந்தனர் என்று சொல்லப்படுகிறது.

அத்துடன் நின்றுவிடவில்லை அமித் ஷாவின் முனைப்பு. அமைதியாக சமூகக் கூட்டணிகளை ஆங்காங்கே உருவாக்கினார். பட்டியலினத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சில பிரிவினர் ஆகியோருக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மீது ஏற்பட்டிருந்த அதிருப்தியைப் பயன்படுத்தி பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க முற்பட்டது அவரது சாதுர்யம். தொகுதிவாரியாக உள்ளூர் பிரச்னைகள், வருத்தங்கள் கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு அதனடிப்படையில் பாஜகவின் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

'வங்காளிகளின் கெளரவம்' என்கிற முழக்கத்தை முன்வைத்து திரிணமூல் பிரசாரம் செய்தபோது, மம்தா ஆட்சியில் சட்ட விரோதமாக ஊடுருவும் வங்கதேச ஊடுருவல்காரர்களால் மேற்கு வங்கத்தின் மக்கள்தொகை பகுப்பு மாற்றம் காண்கிறது என்கிற பரப்புரையை முன்வைத்ததும் பாஜகவின் வெற்றிக்கு முக்கியமான காரணம். பாஜகவின் மேற்குவங்க வெற்றி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துல்லியமான தேர்தல் உத்திக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.