முதல்வர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்திருப்பதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழகமும் ஆறுதல் பெருமூச்சு விடுகிறது. அதிமுகவில் பிளவு என்பது விமர்சிக்கப்பட்டாலும்கூட உதிரிக் கட்சிகளின் தயவில் "நித்திய கண்டம் பூரண ஆயுசாக' தொடர வேண்டிய தர்மசங்கடத்திலிருந்து ஆட்சி காப்பாற்றப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவையில் முதல்வரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்கள் "ஆதரவு' என்கிற பெயரில் முதல்வருக்கும் ஆட்சிக்கும் ஏற்படுத்தும் தர்மசங்கடங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த தர்மசங்கடங்களேகூட ஆட்சிக்கு வலு சேர்ப்பதாகவே அமையக்கூடும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க எதிர்க்கட்சியான திமுகவும், ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் திமுகவின் சில கூட்டணிக் கட்சிகளும் நிர்ப்பந்தித்திருக்கின்றன. அதை முதல்வர் ஜோசப் விஜய் எப்படி கையாளப் போகிறார் என்பதில்தான் அவரது வெற்றி வியூகம் கட்டமைக்கப்படும்.
திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் வெளிநடப்புச் செய்திருக்கின்றன; அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவும், பாமகவும் நடுநிலை வகித்திருக்கின்றன.
திமுக கூட்டணியில் இப்போதும் தொடர்வதாகக் கூறிக்கொள்ளும் இடதுசாரிக் கட்சிகள் (4), விடுதலைச் சிறுத்தைக் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), ஆகியவற்றுடன் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அமமுகவின் ஒற்றை உறுப்பினர், தவெக ஆட்சி தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருக்கிறார்கள். அதிமுகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 உறுப்பினர்கள் கட்சிக் கொறடாவின் வழிகாட்டுதலை மீறி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
குதிரை பேரம் நடந்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக ஆகியவற்றால் முன்வைக்கப்படுகிறது. அப்படி குதிரை பேரம் நடந்திருந்தால், தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை வழங்காத வாக்காளர்கள்தான் குற்றவாளிகள். ஆட்சி அமைக்க இயலாமல் மீண்டும் தேர்தலுக்கு வழிகோலியிருந்தால், தவெகவை வாக்காளர்கள் மன்னித்திருக்க மாட்டார்கள்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது வரையிலான காலகட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அணுகுமுறையும், செயல்பாடுகளும், தமிழகத்தில் நிலைநாட்டப்பட்டிருக்கும் வழக்கங்களிலிருந்து மாறுபடுகிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இறை மறுப்புக் கொள்கையைப் புறந்தள்ளி ஆண்டவன் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதும்; கரை வேஷ்டி கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து கோட்டும்} சூட்டுமாக மேடை ஏறியதும் மாற்று அணுகுமுறையின் வெளிப்பாடு.
அதிமுகவின் அதிருப்தி அணியினரைச் சந்தித்து விட்டு, முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் தவிர்த்தது, ஒரு வகையில் சந்தர்ப்பவாதம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், வலிய வரும் ஆதரவை இழப்பது புத்திசாலித்தனமல்ல என்பதை நாம் உணர வேண்டும். மாற்று அரசு அமைப்பதில் முனைப்புக் காட்டாமல், ஆரம்பத்திலேயே தவெக அரசுக்கு அதிமுக ஆதரவுக்கரம் நீட்டியிருந்தால், இதற்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டிருக்கும்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினில் தொடங்கி, தேர்தலில் எதிர்த்துக் களமாடி சட்டப்பேரவையில் ஒரே ஒரு இடம்கூடப் பெற முடியாத நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரை, எல்லா தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது தமிழக அரசியலில் புது வசந்தம் வீசத் தொடங்கி இருப்பதன் தொடக்கம். முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்திருக்கும் இந்த நாகரிகம், நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்கூட.
நீண்ட அரசியல் பாரம்பரியமும், சட்டப்பேரவை அனுபவமும், அனைத்துக் கட்சியினரையும் தனது நட்பு வட்டத்துக்குள் வைத்திருக்கும் அணுகுமுறையும் கொண்ட ஜே.சி.டி. பிரபாகரை சட்டப்பேரவைத் தலைவராக்கி இருப்பது, முதல்வரின் முதலாவது வெற்றி. எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டு, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக செயல்பட்டு, தனது பொது வாழ்க்கையில் அப்பழுக்கில்லாத நல்ல பெயரை சம்பாதித்திருக்கும் ஜே.சி.டி. பிரபாகரைவிட, அவைத் தலைவர் பதவிக்குத் தகுதியான ஒருவர் இந்த சட்டப்பேரவையில் இருக்க வழியில்லை.
அவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை நடத்திய விதம், முந்தைய சட்டப்பேரவைத் தலைவரில் இருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. அதிகம் பேசாமல், அனைவருக்கும் பேச வாய்ப்பளித்தது; ஒரு சில தவறுகள் நேர்ந்தபோது சுட்டிக்காட்டித் திருத்தியது; அதிமுகவின் அதிருப்தியாளர்களுக்கு வாய்ப்பளித்ததற்கு அவர் சொன்ன காரணம்- எல்லாமே அவையின் மாண்பும், செயல்பாடும் கட்டிக் காக்கப்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
"ஜோசப் விஜய் எனும் நான்' என்பதில் தொடங்கி "இது சிறுபான்மை அரசுதான்; சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் அரசு' என்று விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றியது வரையில், தனது "சர்க்கார்' ஏதோ நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல என்பதை ஆணித்தரமாக நிறுவி இருக்கிறார் முதல்வர்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை சவாலில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய்யை எதிர்கொள்கிறது அரசியல் ரீதியான சவால்களும்; நிர்வாகம் சார்ந்த சவால்களும்... முதல்வர் ஜோசப் விஜய் அரசின் ஏற்றம் தரும் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தமிழகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை நிகழ்வுகள் - முழுவிவரம்
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
ஜா vs ஜெ; இபிஎஸ் vs ஓபிஎஸ்; இபிஎஸ் vs வேலுமணி! மீண்டும் மீண்டுமா?

தமிழக பேரவையில் ஜோசப் விஜய் தவிர்த்து மேலும் 9 விஜய் எம்எல்ஏக்கள்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

