ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மீட்டெடுக்கப்படும் சோழர்தம் பெருமை

வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் ஒருபகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது.

News image

சோழர் கால செப்பேடுகள்.

Updated On :20 மே 2026, 3:31 am IST

வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் ஒருபகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த 300 ஆண்டுகளாக சிறைபட்டிருந்த இந்த செப்புப் பட்டயங்கள், மத்திய அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளின் காரணமாகவும், கடந்த 2023-இல் யுனெஸ்கோ அமைப்பு கொடுத்த அழுத்தம் காரணமாகவும் தற்போது விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதன்முதலாக கால் பதித்தது டச்சு கிழக்கிந்திய கம்பெனிதான். நாகையில் வந்திறங்கிய டச்சுக்காரர்களின் வரலாற்று அடையாளமாக இப்போதும் தரங்கம்பாடி கடற்கரையில் அவர்கள் கட்டிய கோட்டை திகழ்கிறது. டச்சு கிழக்கிந்திய நிறுவனம்17-ஆம் நூற்றாண்டில் நாகையில் ஆதிக்கம் செலுத்தியபோது, 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில அரசு ஆவணங்களைக் கைப்பற்றி நெதர்லாந்துக்கு எடுத்துச் சென்றது.

அந்த ஆவணங்களில் ஒன்று, ஆனைமங்கலத்தைச் சுற்றியுள்ள 26 கிராமங்களை நாகை பெளத்த விகாரத்துக்கு ராஜேந்திர சோழன் வழங்கிய தகவலைப் பதிவு செய்கிறது. சைவனாகிய ராஜேந்திர சோழன், நாகை பெüத்த விகாரத்துக்கு கிராமங்கள் தானமாக வழங்கியதை இந்த செப்புப் பட்டயங்கள் கூறுவதால், சோழ மன்னர்கள் அனைத்து மதங்களையும் அரவணைத்துச் சென்றவர்கள் என்பது தெரிய வருகிறது.

இந்திய கோயில்கள், அரண்மனைகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கலைப்பொருள்கள் மேற்கத்திய நாடுகளின் அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேமிப்பில் உள்ளதாக யுனெஸ்கோ மதிப்பிட்டுள்ளது. இவற்றில் ஹிந்து, ஜைனம் மற்றும் பெüத்தம் தொடர்பான சிலைகள், ஓவியங்கள், அரச ஆவணங்கள் பெருமளவில் உள்ளதாகத் தெரிகிறது.

இந்த கலைப்பொருள்களை கேட்டுப் பெறும் முயற்சி 1950-களில் தொடங்கியது என்றாலும், 2014 வரை வெறும் 13 பொருள்கள் மட்டுமே மீட்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 650-க்கும் அதிகமான கலைப்பொருள்கள் மத்திய அரசால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவில் இருந்து மட்டும் 550-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப் பொருள்களும், மற்றவை ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014-இல் பொறுப்பேற்ற பிறகு சோழ வம்சத்தைச் சேர்ந்த 11-ஆம் நூற்றாண்டின் நடராஜர் சிலை, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையையும் ஆஸ்திரேலியா முதன்முதலாக திருப்பிக் கொடுத்தது. அதேபோல, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அற்புதமான மணற்கல் சிற்பமான "பேரட் லேடி' சிற்பத்தை ஒப்படைக்குமாறு 2014-இல் கனடாவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், கடந்த 2015-இல், "பேரட் லேடி' சிற்பத்தை அன்றைய கனடா பிரதமர் ஸ்டீபன் ஜே ஹார்பர் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.

2015 அக்டோபரில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அந்த நாட்டில் இருந்த மகிஷாசுரமர்தினி சிலையை இந்தியா வந்தபோது பிரதமரிடம் ஒப்படைத்தார். இதேபோல, ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலை, கனடாவிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமான அன்னை அன்னபூரணி சிலை, அமெரிக்காவிலிருந்து சோழர்கால பார்வதி, ஸ்ரீதேவி வெண்கலச் சிலைகள், புத்தர் சிலைகள், செப்புப் பட்டயங்கள் என மீட்கப்பட்ட கலைப் பொருள்களின் பட்டியல் நீள்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் மேற்கத்திய நாடுகளுக்கான ஒவ்வொரு அரசுமுறைப் பயணத்தின்போதும், இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கலைப்பொருள்கள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள பண்டைய தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் ராஜேந்திர சோழனின் செப்புப் பட்டயம் அந்தப் பட்டியலில் இணைகிறது.

அதை விடுத்து, மத்திய அரசோடு தமிழக அரசுக்கு எத்தனை கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இதுபோன்ற நேரங்களில், அதோடு இணக்கமாகச் சென்று நமது வரலாற்றுப் பெருமைகளை கேட்டுப் பெற்று, நமக்கு வசதியான ஓரிடத்தில் அவற்றை காட்சிப்படுத்த துணிவதே புத்திசாலித்தனமாக இருக்கும்.

இதுவரை மீட்கப்பட்ட தமிழகப் பொருள்கள் குறித்த எந்தத் தகவலையும் மத்திய அரசு மறைக்கவில்லை. அவ்வப்போது அதை வெளிப்படையாக அறிவிக்கிறது. தமிழகத்தின் பழம்பெருமை என்பது பாரதத்தின் (இந்தியாவின்) பழம்பெருமையே. அதை மறைக்கவோ, சிதைக்கவோ மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பார்கள் என்ற எண்ணம், நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகவே அமையும்.

வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்தியக் கலைப் பொக்கிஷங்களை அடையாளம் கண்டு திரும்பப் பெறும் முயற்சியில் தொய்வின்றி ஈடுபட்டுவரும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் ஆய்வகம் மற்றும் மத்திய புலனாய்வுத் துறை உள்ளிற்றை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். தமிழகத்தின் கோயில்களிலிருந்து திருடிச் செல்லப்பட்ட ஐம்பொன் சிலைகளையும், விக்கிரகங்களையும் மீட்டெடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் தமிழக காவல் துறைக்கும் இந்த நேரத்தில் நாம் நன்றி சொல்ல மறக்கலாகாது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருள்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி, அவை தாயகம் வந்தடைய காரணமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசைப் பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.