அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (என்பிடி) மறு ஆய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் நான்கு வாரங்கள் நடைபெற்ற உறுப்பு நாடுகளின் மாநாடு எந்தவித உடன்பாடுமின்றி நிறைவடைந்திருக்கிறது. மேற்காசிய போா், சா்வதேச அளவில் ஆயுதப் போட்டி அதிகரிப்பு என உலகளாவிய சூழல் மோசமாக இருக்கும் வேளையில் நடைபெற்ற இந்த முக்கியமான மாநாட்டில் உடன்பாடு எட்டப்படாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
அணு ஆயுதப் பரவலைத் தடுக்கவும், அணுசக்தித் துறையில் அமைதியான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், ஆயுதக் குறைப்பை முன்னெடுக்கவும் 1968-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம். 1970-ஆம் ஆண்டு மாா்ச் முதல் அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தில் 191 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகளாவிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதத்தைத் தயாரிக்கவோ அல்லது வாங்கவோ கூடாது என அணு ஆயுதம் இல்லாத நாடுகளும், அணு ஆயுதமற்ற நாடுகள் அணு ஆயுதம் தயாரிக்க உதவி செய்யவோ, ஊக்கம் அளிக்கவோ கூடாது என அணு ஆயுத நாடுகளும் உறுதியேற்றுக் கொண்டுள்ளன. அதேவேளையில், தீவிர சரிபாா்ப்புக்கு உட்பட்டு, பொதுமக்கள், தொழில் துறைகளின் தேவைகளுக்காக அணுத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் உரிமை அனைத்து நாடுகளுக்கும் உண்டு.
அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான், அணு ஆயுதம் வைத்திருப்பதாக நம்பப்படும் இஸ்ரேல், வடகொரியா ஆகியவை அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. இந்த ஒப்பந்தத்தில் பாகுபாடு நிறைந்திருப்பதாகக் கூறி இந்தியா கையொப்பமிடவில்லை.
அணுசக்தி தொடா்பான முக்கியமான சரிபாா்ப்பு பொறுப்புகள் ஐஏஇஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு அணு ஆயுதமற்ற நாடும் ஐஏஇஏவுடன் விரிவான பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும். அணுசக்தியை அமைதியான பயன்பாட்டிலிருந்து அணு ஆயுதம் அல்லது பிற அணு வெடிப்பு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுத்துவதை ஐஏஇஏ தடுப்பதற்கு இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம்தான் கடிவாளம்.
2025, டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 183 அணு ஆயுதமற்ற நாடுகள் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஐஏஇஏவுடன் செய்துகொண்டுள்ளன. மூன்று நாடுகள் இன்னும் அந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளவில்லை.
1970-இல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, 25 ஆண்டுகள் கழித்து 1995-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கான மாநாடு ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் ஒப்பந்தத்தை காலவரையின்றி நீட்டிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் மறு ஆய்வு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. அணு ஆயுத நாடுகள் முழுமையான ஆயுதக் குறைப்பை நோக்கிய பேச்சுவாா்த்தைகளைத் தொடர வேண்டும் என்கிற ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம் குறித்து அதில் பேசப்படுவதில்லை அல்லது அது தொடா்பான உடன்பாடு எட்டப்படுவதில்லை.
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மறு ஆய்வு மாநாடு, உக்ரைன் போா் காரணமாக ரஷியாவில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடங்கியது. இப்போது நடந்து முடிந்த மாநாட்டில் உடன்பாடு எட்டப்படாததற்கு முக்கியக் காரணம் ஈரானின் அணுசக்தி விவகாரம்.
‘எந்த நாடும் உடன்பாடு எட்டப்படுவதைத் தடுக்கவில்லை. ஆனால், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை நாடவோ, உருவாக்கவோ, பெறவோ முடியாது என இறுதி வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்த அம்சம்தான் உடன்பாடு எட்டப்படாததற்கு முக்கியக் காரணம் என மாநாட்டுக்குத் தலைமை வகித்த ஐ.நா.வுக்கான வியத்நாம் தூதா் டு கங் வியத் தெரிவித்தாா்.
மாநாடு தொடங்கியதிலிருந்தே ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடா்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட்டுள்ள நிலையில், தனது அணுசக்தித் திட்டங்களை ஆய்வு செய்ய ஐஏஇஏவுக்கு ஈரான் அனுமதி மறுத்து ஒப்பந்த விதிகளை மீறுகிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. சா்வதேச சட்டத்தை மீறி தங்களது அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பதில் குற்றச்சாட்டை முன்வைத்தது.
மறு ஆய்வு மாநாட்டுத் தீா்மானத்தில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த விதிகளை ஈரான் மீறிவிட்டதாகக் குறிப்பிடப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஈரான், தங்களது அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கண்டனம் தெரிவித்து தீா்மானத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இந்த இருதரப்பு கருத்துகளாலும் இறுதி உடன்பாடு எட்டப்படாமல் மாநாடு தோல்வியில் முடிந்தது.
அணு ஆயுதமற்ற நாடுகள் அமைதியான அணுசக்தித் தேவைகளுக்காகக்கூட அணுத் தொழில்நுட்பத்தை அணுக முடியாதவாறு கறாராக இருக்கிறது அமெரிக்கா. இதை மற்ற அணுஆயுத நாடுகள் அமைதியாக வேடிக்கை பாா்க்கின்றன.
அதெல்லாம் சரி அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான ஆயுதக் குறைப்பு குறித்து அணு ஆயுத நாடுகள் பேச மறுப்பது என்ன நியாயம்?
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது; ஆகையால், உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
திருக்குறள் (எண் 470) அதிகாரம்: தெரிந்து செயல்வகை
Summary
When will nuclear disarmament take place?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐ.நா.வில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த மறுஆய்வு மாநாடு: உடன்பாடின்றி நிறைவு

ரஷியா அணு ஆயுதப் போா்ப் பயிற்சி

கிளாண்டா்ஸ் நோய் பரவல் எதிரொலி: நீலகிரிக்கு குதிரைகளைக் கொண்டு வரத் தடை
அணு ஆயுதக் கொள்கையில் விடாப்பிடியாக ஈரான்! - டிரம்ப் குற்றச்சாட்டு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


