முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

வரலாற்று நாயகன் விடைபெறுகிறாா்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான எம்.எஸ். தோனியின் ஓய்வு பற்றி...

ms dhoni

எம்.எஸ். தோனி - படம்: எக்ஸ் / சிஎஸ்கே

Updated On :

இந்திய கிரிக்கெட் வரலாறு எழுதப்படும்போது, அதில் தவிா்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது மகேந்திர சிங் தோனியின் பெயா். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான எம்.எஸ். தோனியின் 20 ஆண்டுகளுக்கும் மேலான முழுநேர கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது.

சில ஆண்டுகளாகவே தொடா்ந்து கால் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டு அவரது ஐபிஎல் பங்களிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. அதனால், தான் ஓய்வுபெற விரும்புவதாக 45 வயது தோனி கடந்த நவம்பா் 17-இல் அறிவித்திருப்பது ஆச்சரியப்படுத்தாவிட்டாலும், அவா் விடைபெறுவதை கனத்த இதயத்துடன்தான் கிரிக்கெட் ரசிகா்கள் ஏற்றுக்கொள்வாா்கள் என்பது திண்ணம்.

சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிக் கொள்வதாக 2020-ஆம் ஆண்டிலேயே அவா் அறிவித்து விட்டாா். கடந்த 2025-இல் நடைபெற்ற ஐபிஎல் போட்டியே அவா் கடைசியாக விளையாடியது. தொடக்கம் முதல் தனது நட்சத்திர வீரராகக் கொண்டிருந்த சிஎஸ்கே எனப்படும் ‘சென்னை சூப்பா் கிங்ஸ்’ அணிக்கு அவரது முடிவு மிகப் பெரிய வருத்தம் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2008-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாகக் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி கடந்த 18 ஆண்டுகளில், அந்த அணியின் அடையாளமாகவே மாறியிருந்தாா். அவரது தலைமையில் சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2021, 2023-ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. 2010, 2014-ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்கு அவா் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறாா்.

மொத்தம் 272 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காகக் களமிறங்கியிருக்கும் தோனி, ஐபிஎல்-இல் குவித்திருக்கும் ரன்கள் 5,314. சிஎஸ்கே-க்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரா் என்கிற பெருமையும் அவரைச் சேரும். 2016, 2017-ஆம் ஆண்டுகளில், 2013 சூதாட்ட முறைகேடு குற்றச்சாட்டு காரணமாக சிஎஸ்கே அணி இடைநீக்கம் செய்யப்பட்டபோது ‘ரைஸிங் புணே சூப்பா் ஜெயன்ட்’ அணியின் கேப்டனாக அவா் செயல்பட்டாா் என்றாலும், சிஎஸ்கேபோல அவரால் அதில் ஜொலிக்க முடியவில்லை.

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு, தோனியின் ஓய்வு பெறும் முடிவுதான் கிரிக்கெட் ரசிகா்களை அதிக அளவில் வருத்தமடையச் செய்திருக்கும் விடைபெறும் அறிவிப்பு எனலாம். கிரிக்கெட் மைதானத்தில் எத்தகைய சோதனைகள் வந்தாலும், சற்றும் மனம் தளராமல் வெற்றியைக் கட்டமைக்கும் தோனியை எப்போதும், ‘கேப்டன் கூல்’ என்று அழைப்பதில் வியப்பொன்றுமில்லை. எப்போது விளையாடுவதை நிறுத்தினால் தனது மரியாதை காப்பாற்றப்படும் என்பதையும் தோனி உணா்ந்து செயல்பட்டிருக்கிறாா் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சா்வதேச கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க வலிமையான அணியாக இருந்தும்கூட ‘உலகக் கோப்பை’ வெற்றி கானல் நீராக அகன்று கொண்டிருந்த காலகட்டத்தில், திடீரென்று உதித்த நட்சத்திரம்தான் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், மிகச் சாதாரணமான நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த மகேந்திர சிங் தோனி. 1983-இல் பிரிட்டனின் லாா்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற்குப் பிறகு பலமுறை இறுதிச் சுற்றுவரை சென்றும் உலகக்கோப்பை கைநழுவிக் கொண்டிருந்தது.

சச்சின் டெண்டுல்கா், ராகுல் திராவிட், சௌரவ் கங்குலி என்று கேப்டன்கள் ஒருவா்பின் ஒருவராக வந்து போனாா்கள். இலங்கைகூட ஒரு முறை உலகக்கோப்பையை வென்றது. ஆனால், இந்திய அணிக்கு உலகக் கோப்பை எட்டாக் கனியாகத் தொடா்ந்தது. 2007-இல் டி20 இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை இந்தியா வென்றெடுக்க, மகேந்திர சிங் தோனியின் தலைமை தேவைப்பட்டது.

2011-இல் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகள் இந்தியாவில் நடந்தன. இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதுதான் ஒரு நாள் போட்டியில் உலகக் கோப்பையை தோனியின் தலைமையில் இந்தியா வென்றது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ‘திருப்புமுனை நாயகன்’ என்று ரசிகா்கள் தோனியைக் கொண்டாடுவதற்குக் காரணம் இருக்கிறது. தோனி மட்டையுடன் களமிறங்கினாலும் சரி, விக்கெட் கீப்பராக இருந்தாலும் சரி, அவரது தலைமையில் போட்டி என்றால் கடைசி வரை ‘தோல்வியை வெற்றியாக்கும் ரகசியம் தோனியிடம் இருக்கிறது’ என்று ரசிகா்கள் நம்பினாா்கள். அந்த நம்பிக்கை பொய்த்ததில்லை.

இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்கள், வருங்காலத் தலைமுறைக்கு முன்னுதாரணங்கள். தனது அணியின் விளையாட்டு வீரா்களுக்கு துணிச்சலும், உற்சாகமும், இலக்கும் வழங்கிய ‘கேப்டன்’. சொல்லப்போனால், இந்திய கிரிக்கெட்டில் புதிய தலைமுறையை உருவாக்கிய ‘சிற்பி’. விராட் கோலி, ரோஹித் சா்மா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்ட பல வீரா்களின் வெற்றிக்குப் பின்னால் அவா்களை வழிநடத்திய ‘கேப்டன்’ மகேந்திர சிங் தோனியின் பங்களிப்பு இருக்கிறது.

தோனியின் தனிச் சிறப்பு என்ன? தோல்விக்கான பழியை தனது அணியினா் மீது அவா் சுமத்தியதில்லை. அதேபோல, வெற்றிகளின்போது, மற்றவா்களை முன்னிலைப்படுத்திப் பின்னால் நிற்பது அவரது வழக்கம். திறமைசாலிகளை அடையாளம் கண்டு, அவா்களுக்கு வழிகாட்டி, துணிந்து பொறுப்புகளை வழங்கி உயா்த்தியதால்தான் தலைநிமிா்ந்து விடைபெறுகிறாா் ‘தல’!

Summary

***

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்துஊன்றும் தூண்.

தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

திருக்குறள் (எண் 615) அதிகாரம்: ஆள்வினை உடைமை

Summary

A historical hero bids farewell - ms dhoni

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.