நோபல் விருதுக்காக, இலவு காத்த கிளியாகக் காத்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் சட்டை செய்யாமல் 85 வயது சர்வதேச சட்ட வல்லுநர் நவநீதம் நவி பிள்ளையை இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதாளராக அறிவித்திருக்கும் நார்வே நோபல் குழுவை ஒட்டுமொத்த மனித இனமும் கரவொலி எழுப்பிப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் விருதுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட 208 தனி நபர்களின் பெயர்களும், 79 அமைப்புகளின் பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதை நார்வே நோபல் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ் தலைமையிலான 6 பேர் குழு ஆய்வு செய்து, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம் நவி பிள்ளையை அமைதிக்கான நோபல் விருதுக்குத் தேர்வுசெய்திருக்கிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான விருதை ஸ்வீடன் நாட்டிலுள்ள அமைப்புகள் தேர்வு செய்து அறிவிக்கின்றன. மக்கள் அமைதிக்கான நோபல் விருதாளரை நார்வே நாட்டின் நோபல் குழு அறிவிக்கிறது. 1901-இல் நிறுவப்பட்ட அமைதிக்கான நோபல் விருது, இதுவரை 105 முறை வழங்கப்பட்டிருக்கிறது.
92 ஆடவர், 19 மகளிர், 28 அமைப்புகள் இந்த விருதைப் பெற்றிருக்கின்றன. 1960 வரையில் அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதனால்தான் நான்கு தடவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டும் மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கப்படவில்லை. 1960-இல் தென்னாப்பிரிக்காவின் மனித உரிமைப் போராளி ஆல்பர்ட் ஜான் லுதுலிக்கு வழங்கப்பட்டதற்குப் பிறகுதான், அமைதிக்கான நோபல் விருது சர்வதேசப் பரிமாணம் அடைந்தது.
19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மெட்ராஸ் ராஜதானியின் திண்டுக்கல்லில் இருந்து தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் நவநீதம் பிள்ளை. டர்பன் நகரில் நாராயணசாமி நாயுடு, சாந்தம்மா தம்பதியரின் 5-ஆவது மகளாகப் பிறந்தார். 'பேருந்து ஓட்டுநராக இருந்தபோதும், தனது எட்டு குழந்தைகளையும் படிக்க வைத்து, அதன் மூலம் நிறவெறியை எதிர்த்துப் போராட வழிகோலினார் எனது தந்தை'' என்று அடிக்கடி பெருமிதத்துடன் நினைவுகூர்வார் நவநீதம் பிள்ளை.
டர்பன் நகரத் தமிழர்களின் பங்களிப்பால் தனது சட்டப்படிப்பை அமெரிக்காவில் மேற்கொண்டு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்ற நவநீதம் பிள்ளை, அங்கேயே குடியேறி வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பவில்லை.
மாறாக, தனது தாய்நாடான தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பி, நிறவெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரலெழுப்பும் வழக்குரைஞராகத் துணிந்தார். 1962-ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். 'எனது கணவர் பரஞ்ஜோதி அந்தோணி பிள்ளையும், நிறவெறிக்கு எதிராகக் குரலெழுப்பும் போராளியாக இருந்தார் என்பதுதான் எனது பலம்' என்று பதிவு செய்கிறார் நவநீதம் பிள்ளை.
அரசியல் கைதிகளுக்கு சட்ட ஆலோசனை கிடைக்க, நிறவெறி தென்னாப்பிரிக்காவில் வழிகோலிய பெருமை அவரைச் சாரும். சித்திரவதை, தனிமைச் சிறை உள்ளிட்ட மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்பட்ட நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளின் உரிமைகளுக்கான அவரது போராட்டம் குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் அவர் நெல்சன் மண்டேலாவின் கவனத்தை ஈர்த்தார்.
மண்டேலாவின் வழக்குரைஞராக, அவரது விடுதலைக்காக வாதாடினார். 1967-இல் நேட்டாலில் வழக்குரைஞராகப் பணியாற்றிய முதல் பெண்மணி என்கிற பெருமை பெற்றாலும், இந்தியரான அவர் நீதிபதிகளின் சேம்பருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதே நவநீதம் பிள்ளை 1995-இல் தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானபோது புதிய வரலாறு படைக்கப்பட்டது.
எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்ட 1994 ருவாண்டா இனப் படுகொலை குறித்த விசாரணை கமிஷனில் அவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2003-இல் சர்வதேசக் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதி, 2008 முதல் 2014 வரை ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் என்று நிறவெறி, இனவெறி, மனித உரிமை மீறல், அதிகார அத்துமீறல், போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக பல வழக்குகளில் அவர் வழங்கிய தீர்ப்புகள், இப்போது உலகளாவிய நீதிமன்றங்களில் முன்மாதிரியாகத் திகழ்கின்றன.
ஹிட்லரின் நாஜி ஆட்சியில் நடந்த படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 'நியூரம்பெர்க்' விசாரணைதான் நவநீதம் பிள்ளையை மனித உரிமை மீறலுக்கும், இனப் படுகொலைகளுக்கும் எதிரான போராளியாக மாற்றியது.
அவருக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்ட அறிவிப்பு வெளியானபோது, நியூரம்பெர்க் விசாரணை நடந்த அறை எண் 600-இல் அவர் இருந்தது அவரையே வியப்பில் ஆழ்த்தியது. நோபல் விருதுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் நவநீதம் பிள்ளை. அந்த விருதின் மரியாதையையும், கெளரவத்தையும் அதிகரித்திருக்கிறது, அதிபர் டிரம்ப்பின் அழுத்தத்துக்கு அடிபணியாத நோபல் விருதுக் குழு!
நோபல் விருதுக் குழுவின் துணிச்சலையும், அவர்கள் தேர்ந்தெடுத்த விருதாளரையும் நினைத்து 125 ஆண்டுகளுக்கு முன்பு அமைதிக்கான விருதை ஏற்படுத்தக் காரணமான ஆல்ஃபிரட் நோபல் பெருமிதம் அடைவார்!
*********
திருக்குறள் (எண் 1025) அதிகாரம்: குடிசெயல் வகை
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாகச் சுற்றும் உலகு.
குற்றம் இல்லாதனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

