சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கைஅரசு மருத்துவமனையில் தடையற்ற சேவைகள்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அருண்ராஜ் உத்தரவுஇந்தியா, லத்தீன் அமெரிக்காவுடன் புதிய கூட்டணி: இஸ்ரேல் பிரதமர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

கானுயிர்கள் மட்டுமல்லாமல், புல், பூண்டு, பூச்சிகள் என மனித இனத்தின் வளர்ச்சியால் பாதிக்கப்படாதவையே இல்லை எனலாம்.

Lions

பிரதிப் படம்

Updated On :

அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித இனத்தின் அன்றாட வாழ்க்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வசதிகள் நிறைந்ததாக மாற்றி இருக்கின்றன. அதன் எதிர்மறைத் தாக்கமாக கானுயிர்களின் இனப்பெருக்கம் குறைந்து வருவதுடன், பல தாவர இனங்களும் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. கானுயிர்கள் மட்டுமல்லாமல், புல், பூண்டு, பூச்சிகள் என மனித இனத்தின் வளர்ச்சியால் பாதிக்கப்படாதவையே இல்லை எனலாம்.

இதைக் கருத்தில் கொண்டுதான் 2025-26-இல் 'ஐ.யூ.சி.என்.' எனப்படும் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் அபுதாபியில் உலகப் பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தது. 1,400-க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்துகொண்ட, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருங்கிணைக்கப்படும் இந்த மாநாட்டில், இயற்கைப் பாதுகாப்பில் உள்ள பிரச்னைகள் அலசப்பட்டன.

அதனடிப்படையில் இந்தியாவில் உள்ள அழிவின் விளிம்பில் உள்ள சுமார் 11,000 தாவரங்களும், விலங்கினங்களும், அடையாளம் காணப்பட்டு, அவை 'தேசிய சிவப்புப் பட்டியல் வரைபடம்' (நேஷனல் ரெட் லிஸ்ட் ரோட் மேப்) என்று மதிப்பீடு செய்யப்பட்டன. அவற்றில் 7,000 வகையான தாவரங்களும், 4,000 வகையான உயிரினங்களும் அடங்கும். 2030-க்குள், அழிவின் விளிம்பில் உள்ள அனைத்துத் தாவரங்களும், உயிரினங்களும் பட்டியலிடப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பூமியின் மொத்த நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு வெறும் 2.4% தான் என்றாலும்கூட, உலகில் உள்ள 8% தாவரங்களும், 7.5% உயிரினங்களும் இங்கு இருக்கின்றன. உலகில் 36 பல்லுயிர் பெருக்க மையங்களில் நான்கு இங்கே அமைந்திருக்கிறது என்பதுடன், பல்வேறு விதமான தாவரங்களும், உயிரினங்களும் காணப்படும் 17 பிரதேசங்களில் இந்தியத் துணைக் கண்டமும் ஒன்று.

அத்துடன் நின்றுவிடவில்லை; இந்தியாவில் காணப்படும் 28% தாவரங்களும், 30% உயிரினங்களும் உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. அதனால்தான் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஐயூசிஎன் சிறப்புப் பட்டியல் தரவுகளின்படி, இந்தியாவில் பட்டியலிடப்பட்டிருக்கும் 7,516 உயிரினங்களில், 1,012 அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன.

இன்னும்கூடப் பெரும்பான்மையான தாவரங்களும், உயிரினங்களும் அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்படவில்லை. வெறும் 7.2% அளவுதான் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், 1,102 உயிரினங்கள் அழிவை எதிர்கொள்கின்றன என்றால், தேடல் அதிகரிக்க, அதிகரிக்க இன அழிப்புக்கு உள்ளாகும் உயிரினங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

இந்தப் பின்னணியில்தான், இந்திய அரசின் முயற்சிகளை நாம் கவனிக்க வேண்டும். வன விலங்குகள் சரணாலயங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம், அடையாளம் காணப்பட்டிருக்கும் 24 உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்களை மீட்டெடுக்கும் திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது. அதன்படி, உயிரினங்களின் வாழ்விடங்களை மேம்படுத்துவது, பாதுகாப்பது, அங்கே வாழும் மக்களின் துணையுடன் ஆய்வுகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை அந்தத் திட்டம் ஒருங்கிணைக்கிறது.

தாவரங்களும், உயிரினங்களும் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் உலகளாவிய அளவில், விஞ்ஞானிகள், சூழலியல் நிபுணர்கள், அரசுகள், இயற்கைப் பாதுகாப்பில் அக்கறையுள்ள தன்னார்வலர்கள் கைகோத்து செயல்படத் தொடங்கி இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் அழிவின் விளிம்பில் இருந்து பல உயிரினங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடாவில் மட்டுமே காணப்படும் 'வரகுக்கோழி' (இந்தியன் பஸ்டார்ட்) பத்தாண்டுகளுக்குப் பிறகு முட்டையிட்டுக் குஞ்சு பொரித்திருக்கிறது. ஸ்பெயின், போர்ச்சுகலில் மட்டுமே காணப்படும் சைபீரியன் காட்டுப்பூனைகள், ஆப்பிரிக்காவின் 'வளைவாள் கொம்புமான்', கஜகஸ்தானின் 'சைகா மறிமான்' உள்ளிட்டவை இன அழிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு, இனப்பெருக்கத்துக்கு நகர்ந்திருப்பது ஆறுதலளிக்கும் மாற்றம்.

இந்திய வரகுக்கோழி மட்டுமல்ல, மணிப்பூரின் சதுப்பு நிலங்களில் காணப்படும் 'சங்காய் மான்' இனமும், காஷ்மீரக் காடுகளின் 'ஹாங்குல்' எனப்படும் மானும் கடுமையான முயற்சிக்குப் பிறகு காப்பாற்றப்பட்டிருக்கின்றன. பல்வேறு பாம்பு, கீரி, பச்சோந்தி, உடும்பு வகைகள் அடையாளம் காணப்பட்டு அவை அழிந்து விடாமல் பாதுகாக்கப்படுகின்றன.

2020-இல் 674-ஆக இருந்த குஜராத்தின் கிர் காடுகளில் காணப்படும் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 2025-இல் 891-ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல, அஸ்ஸாமின் போபித்தோரா வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள காண்டாமிருகங்களும், குறிப்பாக ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கும் மிகுந்த பாதுகாப்பு தரப்பட்டு, கொம்புக்காக வேட்டையாடப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

மேகாலயாவின் 'மேகச் சிறுத்தைகள்', இமயமலையில் மட்டுமே காணப்படும் 'பனிச் சிறுத்தைகள்,' நீலகிரி வரையாடு, வரிக்குதிரை, சிங்கவால் குரங்கு உள்ளிட்டவை மறுவாழ்வு பெற்றிருக்கின்றன. அடையாளம் காணப்பட்டிருப்பது மிக, மிகக் குறைவுதான் என்பதால், நாம் பல்லுயிர்ப் பெருக்கத்தை உறுதிசெய்ய இன்னும் பல காத தூரம் நடந்தாக வேண்டும்; தளர்ந்துவிடக் கூடாது!

பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

திருக்குறள் (எண் 322) அதிகாரம்: கொல்லாமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.