பிரான்ஸில் விலைவாசி உயர்வு, பள்ளிகளின் மோசமான உள்கட்டமைப்பைக் கண்டித்து நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை, கொள்ளை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அக்டோபர் 24-ஆம் தேதி தலைநகர் பாரீஸ் உள்பட பல நகரங்களில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் பெரும்பாலும் அமைதியாக நிறைவடைந்தது. தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், இடதுசாரி அரசியல் குழுக்கள் இணைந்து இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. அதிகரித்துவரும் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்க வேண்டும்; கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், வீடுகளுக்கான வாடகையைக் குறைக்க வேண்டும், தொழிலாளர்களின் ஊதியம், ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.
பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததைக் கண்டித்து கடந்த செப்டம்பர் இறுதியில் முதலில் மாணவர்கள் மூலம் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் பின்னர் தொழிற்சங்கத்தினரும், பொதுமக்களும் இணைந்து கொண்டனர். பிரான்ஸின் மிகப் பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதன் தீவிரத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
2027-ஆம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தீவிரமடைந்துவரும் இந்தப் போராட்டங்கள் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு முக்கியமான அரசியல் சவாலாக உருவெடுத்திருக்கிறது. தொடர்ந்து இருமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால், அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டப்படி மூன்றாவது முறையாக மேக்ரான் தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும், அவரது மறுமலர்ச்சி கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதல் ஆசிரியர்களைப் பணியமர்த்தப்போவதாகவும், பள்ளி தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாடுகளில் மாணவர்களையும் ஈடுபடுத்தப்போவதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், பல்கலைக்கழகப் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்படும் என்ற திட்டத்தையும் அரசு கைவிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்குப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்பது தெரியவில்லை.
பிரான்ஸில் நடைபெற்றுவரும் போராட்ட வன்முறைக்கு முஸ்லிம் குடியேறிகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருப்பதை அதிபர் மேக்ரான் நிராகரித்திருக்கிறார். 'முஸ்லிம்களும், குடியேறிகளும் நாட்டை ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறப்படும் தகவல்கள் அப்பட்டமான பொய். வெளிநாடுகளிலிருந்து திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
தேர்தல் களத்தில் உள்ள தலைவர்கள் இந்த போலித் தகவல்களை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துகின்றனர்' என அவர் கூறியுள்ளார். குடியேற்றக் கொள்கையால் வெளிநாட்டுக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே பிரான்ஸின் இப்போதைய நிலைக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டை முழுமையாக ஏற்க இயலாது, முற்றிலும் புறந்தள்ளவும் முடியாது. ஏனெனில், பிரான்ஸில் 92 லட்சம் வெளிநாட்டுக் குடியேறிகள் உள்ளனர். மொத்த மக்கள்தொகையான 7 கோடியில் இது சுமார் 13 சதவீதமாகும்.
வெளிநாட்டுக் குடியேறிகளில் சுமார் 49 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அடுத்தபடியாக ஐரோப்பா (32%), ஆசிய (13.5%) நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். குடியேற்றக் கொள்கையில் பிரான்ஸ் மிகவும் மிதமாக நடந்துகொள்வதால் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் குடியேறி சொந்த நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு உள்பட பல உரிமைகள் பறிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிரெஞ்சு பொதுக் கருத்து ஆய்வு நிறுவனம் (ஐஎஃப்ஓபி) நடத்திய கருத்துக்கணிப்பின்படி, பிரான்ஸ் மக்கள்தொகையில் ஆழமான மாற்றம் நிகழ்ந்து வருவதாக சுமார் 60 சதவீத பிரெஞ்சு குடிமக்கள் கருதுகின்றனர். இது தேசிய அடையாளம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு குறித்த தீவிர அரசியல் பிளவுக்கு வித்திட்டுள்ளது. குடியேற்ற சட்டத்தில் 2024-ஆம் ஆண்டு சில மாற்றங்களை பிரான்ஸ் அரசு கொண்டு வந்தது. இருப்பினும், மரின் லெ பென் போன்ற தீவிர வலதுசாரி தலைவர்கள் இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என வாதிடுகின்றனர்.
அதேவேளையில் குடியேற்றத்துக்கு எதிரான கருத்துகளுக்கு சாதகமாக அரசு செயல்படுவதாகவும், பிரான்ஸின் மனிதாபிமான மரபுகளைச் சிதைப்பதாகவும் மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி அரசியல்வாதிகளும் குற்றஞ்சாட்டுகின்றனர். குடியேற்றக் கொள்கையில் உறுதியான முடிவை எடுக்க முடியாமல் தவித்து வருகிறது பிரான்ஸ். பிரான்ஸில் நடைபெற்று வரும் இந்தத் தொடர் போராட்டங்கள் நாட்டின் சுற்றுலாத் துறையில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
பிரான்ஸின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுற்றுலாத் துறை 9 சதவீதம் வரை பங்களிக்கிறது. அதாவது 275 பில்லியன் யூரோ வரை சுற்றுலாத் துறையின் மூலம் வருமானம் கிடைக்கிறது. சுமார் 10 சதவீத வேலைவாய்ப்பையும் சுற்றுலாத் துறை வழங்குகிறது. இந்தப் போராட்டங்கள் தொடர்வது சுற்றுலாத் துறையிலும், வேலைவாய்ப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பிரான்ஸுக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.
*****
திருக்குறள் (எண் 620) அதிகாரம்: ஆள்வினை உடைமை
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்.
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


