2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

முரண்பாடுகளுக்கு இடையே...

எரிசக்தி விநியோகமும், விநியோகச் சங்கிலித் துண்டிப்பும் உயர்ந்து நிற்கும் நேரத்தில், 18-ஆவது 'பிரிக்ஸ்' மாநாடு தில்லியில் கூடியதைப் பற்றி...

பிரிக்ஸ் மாநாட்டில்... - @narendramodi

Published On :

உலக அமைதியையும், ஒழுங்கையும் சிதைக்கும் விதத்தில் போர்களும், அதன் விளைவாக எரிசக்தி விநியோகமும், விநியோகச் சங்கிலித் துண்டிப்பும் உயர்ந்து நிற்கும் நேரத்தில், 18-ஆவது 'பிரிக்ஸ்' மாநாடு தில்லியில் கூடிக் கலைந்திருக்கிறது.

பொருளாதார ரீதியாக உலக வர்த்தகம் தடுமாறிக் கொண்டிருக்கும் மிகவும் சிக்கலான நேரத்தில் இந்தியாவின் தலைமையில் 'பிரிக்ஸ்' மாநாடு கூடியதும், தலைவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றதும், சாதாரணமாகக் கடந்துபோகக் கூடியது அல்ல. 'பிரிக்ஸ்' அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு 2012, 2016, 2021 ஆண்டுகளில் 'பிரிக்ஸ்' அமைப்பு கூடியதற்கும், இப்போதைய உச்சி மாநாட்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. அப்போது, 'பிரிக்ஸ்' என்பது பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இடம் பெற்ற குழுவாக மட்டுமே இருந்தது.

2024-இல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் இணைந்த நிலையில், 'பிரிக்ஸ்' விரிவாக்கம் பெற்றது. 2025-இல் இந்தோனேசியாவும் இணைந்த நிலையில் 'பிரிக்ஸ்' என்பது மிக வலிமையான சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. 'பிரிக்ஸ்' அமைப்பின் 11 உறுப்பினர் நாடுகள் உலக மக்கள்

தொகையில் சுமார் பாதியைக் கொண்டிருக்கின்றன. உலக ஜிடிபியில் 40%, உலக வர்த்தகத்தில் கால் பங்குக்கும் அதிகமாக இந்தக் குழுவின் வலிமை உயர்கிறது. ஐந்து நாடுகள் கொண்ட 'பிரிக்ஸ்' இப்போது 11 நாடுகள் அங்கம் வகிக்கும் வலிமையான அமைப்பாக மாறியிருப்பதை உலகம் உணராமல் இல்லை.

உலகில் எரிசக்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானவை மட்டுமல்ல, ஆப்பிரிக்க, தென்கிழக்கு ஆசியப் பொருளாதாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகத் திகழ்கிறது 'பிரிக்ஸ்'. அதனால் மட்டுமே, இந்த அமைப்பு முரண்பாடுகள் இல்லாத, நட்புறவு நாடுகளின் கூட்டமைப்பு என்று சொல்லிவிடவும் முடியாது. உறுப்பு நாடுகளுக்கு இடையே காணப்படும் முரண்பாடுகள் மட்டுமல்லாமல், அவற்றின் சர்வதேச நயதந்திர அணுகுமுறைகளும் (டிப்ளோமேடிக் ரிலேஷன்ஸ்) வேறுபடுகின்றன.

உக்ரைனிலும்,மேற்காசியாவிலும் தொடரும் போர்களும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே காணப்படும் எல்லையோர உரசல்களும், ஈரானுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் உள்ள பதற்றமான சூழலும் 'பிரிக்ஸ்' அமைப்பு ஓர் ஒற்றுமையான அமைப்பு என்கிற தோற்றத்தை ஏற்படுத்த விடாமல் செய்கின்றன. இதன் முக்கிய உறுப்பு நாடுகள் சர்வதேசப் பிரச்னைகளை வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ரஷியாவுக்கும் சீனாவுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு மாற்று சக்தியாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குப் போட்டியான அமைப்பாக 'பிரிக்ஸ்' காட்சி அளிக்க வேண்டும்; இந்தியா, பிரேஸிலைப் பொருத்தவரை தெற்குலக நாடுகளின் குரலாக, அதே நேரத்தில் மேலை நாடுகளுக்கு எதிரான அமைப்பு என்கிற தோற்றம் ஏற்பட்டு விடாமல், 'பிரிக்ஸ்' இயங்க வேண்டும்.

'பிரிக்ஸ்' உறுப்பு நாடுகள் தொடர்புடைய சர்வதேசப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் இரண்டும் அமெரிக்க உறவு குறித்து மட்டுமல்ல, பரஸ்பரம் நேரடியாகத் தாக்குதலில் ஈடுபடுவது வரை மோதல் போக்கைக் கடைப்பிடிக்கின்றன. ஏனைய உறுப்பு நாடுகளின் இஸ்ரேல் நிலைப்பாட்டை, இந்தியா வழிமொழியத் தயாராக இல்லை.

அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்து விடாமல், அதே நேரத்தில் அதற்கு மாற்றாக சர்வதேச அளவில் ஓர் அமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியா கவனமாக இருக்கிறது. 'பிரிக்ஸ்' தில்லி பிரகடனம் இந்தியாவின் நயதந்திரத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். மேற்காசியப் போருக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு, ஐ.நா.

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் உள்ளிட்ட 140 அம்சங்கள் கொண்ட 'பிரிக்ஸ்' தில்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த 45 பக்கப் பிரகடன ஆவணம் பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதும் இந்தியாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. 1967-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரையறைகளின் அடிப்படையில் சுதந்திரமான பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் இரு நாடுகள் தீர்வைப் பின்பற்றுவது; காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மனிதநேய உறவுகளை மேற்கொள்வது; உலக வர்த்தக அமைப்பின் விதிகளைப் பின்பற்றாமல் சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் தன்னிச்சையான வரிவிதிப்புகளுக்கு கண்டனம்; கார்பன் எல்லை வரிவிதிப்புகளுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவை அந்தப் பிரகடனத்தின் முக்கியமான அம்சங்கள்.

ஜம்மு- காஷ்மீர் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன் நின்றுவிடவில்லை பிரகடனம். எல்லை கடந்த பயங்கரவாதம், பயங்கரவாத நிதி உள்பட அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எந்தவித சமரசமுமின்றி ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது; பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை வேட அணுகுமுறையை 'பிரிக்ஸ்' நிராகரித்திருக்கிறது.

ரஷிய அதிபர் புதினுடனான பிரதமர் மோடியின் சந்திப்பும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான இரு தரப்புப் பேச்சுவார்த்தையும்தான் 18-ஆவது 'பிரிக்ஸ்' மாநாட்டின் ஹைலைட். கருத்து வேறுபாடுகளுக்கும், முரண்பாடுகளுக்கும் இடையே சுமுகமான நட்புறவையும் தொடர முடிந்திருக்கிறது என்பதுதான் இந்த அமைப்பின் வெற்றி!

******

புண‌ர்‌ச்சி பழ​கு​த‌ல் வே‌ண்டா; உண‌ர்‌ச்​சி​தா‌ன்

ந‌ட்பு​ஆ‌ம் கிழமை தரு‌ம்.

ந‌ட்பு‌ச் செ‌ய்​வ​த‌ற்​கு‌த் தொட‌ர்​பு‌ம் பழ‌க்​க​மு‌ம் வே‌ண்​டி​ய​தி‌ல்லை; ஒ‌த்த உண‌ர்‌ச்​சியே ந‌ட்பு ஏ‌ற்​ப​டு​வ​த‌ற்கு வே‌ண்​டிய உரி​û‌ம​க​û‌ள‌க் கொடு‌க்​கு‌ம்.

திரு‌க்​கு​ற‌‌ள் (எ‌ண் 785) அதி​கா​ர‌ம்: ந‌ட்​பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.