தேங்கி நிற்கும் திட்டங்கள்!

மழை பெய்தும் கெடுக்கும்; பெய்யாமலும் கெடுக்கும் என்பது விவசாயிகளின் அனுபவ மொழி. விவசாயிகள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்காக மழையை வேண்டும்போது அது பெய்வதில்லை; இப்போது அறுவடை நேரத்தில் விடாமழை பெய்து வீ
Updated on
3 min read

மழை பெய்தும் கெடுக்கும்; பெய்யாமலும் கெடுக்கும் என்பது விவசாயிகளின் அனுபவ மொழி. விவசாயிகள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்காக மழையை வேண்டும்போது அது பெய்வதில்லை; இப்போது அறுவடை நேரத்தில் விடாமழை பெய்து வீணாக்கிக் கொண்டிருக்கிறது. கைக்கு வந்தது வாய்க்கு எட்டாத நிலை.

 முதியவர்க்குத் தெரியும், அந்தக் காலங்களில் மாதக்கணக்கில் இரவும், பகலும் விடாமழை பெய்யும்; அப்போதுகூட வெள்ளம் வந்தது குறைவுதான். இப்போது ஓரிரு நாள்கள் மழைக்கே வெள்ளம் கரைபுரண்டு, மக்கள் வாழ்க்கையை முடக்கி விடுகிறதே, எப்படி?

 "மழைநீரைச் சேமிப்போம்' என்பது அரசாங்கத்தின் வெற்று விளம்பரமாகவே உள்ளது; "ஆறுகளை இணைப்போம்' என்பதும் அப்படித்தான். மழைவெள்ளத்தைத் தேக்கி வைப்பதற்கு எவ்விதத் திட்டமும் இல்லை; மாறாக ஏரிகள் வீட்டுமனைகளாயின; மணல் கொள்ளைகளால் ஆறுகள் வலுவிழந்தன. பல ஆண்டுகளாக மராமத்துப் பணிகள் சரிவர நடைபெறவில்லை.

 இப்போது தமிழ்நாடு தண்ணீர்த் தேவைக்காக மும்முனைத் தாக்குதலைச் சந்தித்துக் கொண்டுள்ளது. காவிரி நீருக்காகக் கர்நாடகம்; முல்லைப் பெரியாறு அணை நீருக்காகக் கேரளம்; பாலாற்று நீருக்காக ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களுடன் மோதும் நிலை உருவாகியுள்ளது.

சமரசம் செய்ய வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையிலும் மழைநீரின் முக்கியத்துவம் உணரப்படவில்லை என்றால் எப்படி?

"நீர் இன்றி அமையாது உலகு' என்று பாடினார் திருவள்ளுவர். உலகத்தின் இயக்கமே தண்ணீரையே அடிப்படையாகக் கொண்டது. ஒரு தேசத்தின் பண்பாடும், நாகரிகமும் தண்ணீரையே ஆதாரமாகக் கொண்டது. உலக நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரை ஓரமே உருவானதற்குக் காரணம் இதுவே.

 இதற்கும் இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வளங்கள் குறைகின்றன; வறட்சிகள் வளர்கின்றன. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடுகள் இல்லை; ஏழையர், செல்வர் என்ற பேதங்களும் இல்லை; தண்ணீரைத் தேடி அலையாதவர்கள் இல்லை.

 "பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கக் கூடாது' என்ற பழைய மொழி வழக்கொழிந்து போனது. தண்ணீரைப் பணத்தைப்போல செலவழிக்க வேண்டும் என்ற புதிய மொழி நடைமுறைக்கு வந்துவிட்டது. காரணம் என்ன? மனிதன் இயற்கையைப் புறக்கணித்ததன் விளைவுகள்.

 காடுகள் அழிக்கப்படுவது, மழைநீரைத் தேக்கி வைக்காமல் வீணாக்குவது, ஆற்றுநீரை ஆலைக் கழிவுகளால் அசுத்தப்படுத்துவது, ஊருக்குள் இறால் பண்ணைகளையும் உப்பளங்களையும் உருவாக்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துவது, சுற்றுச்சூழல் இயக்கங்களின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்வது என்னும் காரணங்களால் நீர் ஆதாரங்கள் குறைந்துகொண்டே போகின்றன.

 ஆனால், இதைப் பயன்படுத்தும் மக்கள்தொகை பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தலைகீழ் விகிதமே தண்ணீர்ப் பஞ்சத்தின் காரணம்.

 அக்காலத்தில் தமிழ்மன்னர்கள் நீர்வளம் பெருக்கி நிலவளம் காப்பதையே குடிமக்களுக்குச் செய்யும் கடமையாகக் கொண்டிருந்தனர். குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் என்னும் நீர்ப்பாசனத் திட்டங்கள் எல்லாம் அரசர்கள் காலத்தில் ஆக்கப்பட்டவையே! கரிகாலன் புகழ்பெற்ற கல்லணையைக் கட்டுவதற்கும் காரணம் இதுவே.

 "காடு கொன்று நாடாக்கிக், குளம் தொட்டு வளம் பெருக்கி...' என்று பட்டினப்பாலை பாடுகிறது. வரலாற்றுச் சின்னங்களாக இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பன அவர்களின் கோட்டை கொத்தளங்கள். கோட்டைகளைச் சுற்றி ஆழமான அகழிகள். பகைவர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகவும், பகைவர்கள் முற்றுகை இடும் காலங்களில் தங்களுக்கு வேண்டிய தண்ணீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும்தான்.

 இன்றும் பண்பாட்டுப் பாசறைகளாகத் திகழ்வன கோயில்களே! ஊருக்கு நடுவே கோயில்களும், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கோயில் குளம் மற்றும் தெப்பக்குளம். அந்தக் குளங்களுக்கு நடுவே கிணறுகள். இவையனைத்துமே நீர் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.

 இவ்வாறு பராமரிக்கப்பட்டு வந்த நீர் ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன.  காலப்போக்கில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன; பாசன வாய்க்கால்கள் பராமரிப்பின்றித் தூர்ந்தன; வயல் வெளிகள் வீட்டுமனைகளாயின. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப் பெருக்கானது; மக்களையும், வீடுகளையும், பயிர்களையும் அழித்துவிட்டு யாருக்கும் பயன் இன்றி கடலில் சென்று கலக்கிறது.

 இப்போதும் இந்த நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

காவிரி டெல்டாப் பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 இந்த மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாகத் தேங்கி நிற்கிறது. சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. மழையால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டிருக்கிறது.

 மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிரம்பியுள்ளது. இது கட்டப்பட்டு 76 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை 36 முறை அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.

 திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அணைகள், ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து உபரிநீர் கரைபுரண்டு ஓடுகிறது.

 கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி முதலிய கடலோர மாவட்டங்களில் விரைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணம் அங்கே ஆக்கிரமித்துள்ள ஏராளமான இறால் பண்ணைகளே! இந்த இறால் பண்ணைகள் நிலத்தடி நீரைக் கெடுப்பதோடு, கடலின் முகத்துவாரங்களையும் அடைத்துக் கொள்கின்றன.

 இவற்றைத் தடுக்கும்படி நீதிமன்ற ஆணைகள் இருந்தபோதும், அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது இல்லை; எல்லாமே பணம்படுத்தும் பாடுதான்!

 இவற்றையெல்லாம் கூறுவதற்குக் காரணம் என்ன? ஆண்டுதோறும் மழையும் வருகிறது; வெள்ளமும் வருகிறது. அதன்பிறகு வறட்சியும் வருகிறது. மழைக்காலத்தில் மக்களுக்கு வெள்ளத்தால் துயரம்; கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் துயரம். இதனைச் சரிசெய்யத் திட்டம் வேண்டாமா?

 தண்ணீருக்காக நதிநீர் இணைப்புத் திட்டங்களைத் தேடுகிற நாம் கிடைக்கிற நீரைத் தேக்கி வைத்திட வேண்டாமா? மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாகக் கடலில் சென்று கலந்திடச் செய்யாமல் தடுத்துத் தேக்கி வைத்தால் பயிர்களையும் பாதுகாக்கலாம்; உயிர்களையும் பாதுகாக்கலாம்; தண்ணீர்ப் பஞ்சத்தையும் தடுக்கலாம்.

 வறட்சி நிவாரணங்களுக்கும், வெள்ள நிவாரணங்களுக்கும் வேலையில்லை. இதனால்  பெரும்பணம் மிச்சமாகும். அதனைக் கொண்டு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றலாம். இழப்பீடு கேட்டு மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய அவசியமும் ஏற்படாது. இதுபற்றிய சிந்தனையே இப்போது அவசர அவசியத் தேவை.

 ""மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்'' என்று தண்ணீரின் புகழ்பாடியது சிலப்பதிகாரம். "வான்சிறப்பு' என்று மழையைப் போற்றியது திருக்குறள். மழைநீர் சேமிப்புத் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? அரசாங்கத்துக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டாமா?

 நாடே ஆவலோடு எதிர்பார்த்திருந்த "கங்கை காவிரி இணைப்புத் திட்டம்' கைவிடப்பட்டது. தென்னக நதிகளை இணைக்கும் திட்டமும் பேச்சோடு போய்விட்டது. தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டமும் அப்படியே இருக்கிறது. மழைநீரைத் தேக்கும் திட்டங்களையாவது விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இல்லாவிட்டால் விவசாயிகளின் எதிர்காலமும், நாட்டின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com