டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்: தள்ளிப்போகும் மூன்றாண்டு சட்டப் படிப்பு சேர்க்கை?

இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதன் எதிரொலியாக மூன்றாண்டு எல்.எல்.பி. (சட்டப்படிப்பு) சேர்க்கை தள்ளிப்போகும் நிலை

News image
Updated On :29 ஜூன் 2017, 8:18 pm

இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதன் எதிரொலியாக மூன்றாண்டு எல்.எல்.பி. (சட்டப்படிப்பு) சேர்க்கை தள்ளிப்போகும் நிலை உருவாகியிருப்பதாக சட்டப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகததால் விண்ணப்ப விநியோகத்தை மேலும் 10 நாள்களுக்கு நீட்டிக்க சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பிளஸ்-2 முடித்தவர்களுக்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி. படிப்புகளுக்கும், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான மூன்றாண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கையையும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
பொதுவாக அனைத்து சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வும் ஜூலை இறுதிக்குள் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும்.
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த (ஹானர்ஸ்) சட்டப் படிப்புகளுக்கு ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் நடத்தப்படும் ஐந்தாண்டு பி.ஏ.-எல்.எல்.பி. படிப்புக்கு ஜூலை இரண்டாவது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும். அதையடுத்து, மூன்று ஆண்டு பி.எல்.
படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். இந்தப் படிப்புகளுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட்டு விடும்.
ஆனால், கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள் இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் செய்து வருவதால், மூன்றாண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு தொடங்குவதிலும், குறித்த நேரத்தில் வகுப்புகளைத் தொடங்குவதிலும் ஒவ்வொரு ஆண்டும் சிக்கல் நீடித்து வருவதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் ஜூன் இறுதிக்குள் வெளியிடப்பட்டுவிட வேண்டும். ஆனால், நிகழாண்டில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் என அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பட்டப் படிப்பு தேர்வு முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை.
இதனால், இந்த ஆண்டும் எல்.எல்.பி. சேர்க்கை குறித்த நேரத்தில் நடத்துவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியிருப்பதாக சட்டப் பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பாலாஜி கூறியது:
ஏற்கெனவே அறிவித்தபடி, மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவு செய்யப்பட இருந்தது. ஆனால், இளநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகளை பல்வேறு பல்கலைக்கழகங்கள் இன்னும் வெளியிடவில்லை. இதனால், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, மூன்றாண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை மேலும் 10 நாள்களுக்கு நீட்டிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது என்றார்.
ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடும் நடைமுறை வருமா?
இதுகுறித்து தமிழ்நாடு உயர் கல்வி மன்ற முன்னாள் உறுப்பினர் செயலர் கரு.நாகராஜன் கூறியது:
பல ஆண்டுகளாக இந்தச் சிக்கல் இருந்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகளை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் வெவ்வேறு நாள்களில் வெளியிடுவது, தாமதப்படுத்துவது போன்ற காரணங்களால் பி.எட்., சட்டப் படிப்பு சேர்க்கைகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
இந்தச் சிக்கல்களைப் போக்குவதற்காக சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார், பாரதிதாசன், மனோன்மணீயம் சுந்தரனார் என அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவை ஒரே நேரத்தில் வெளியிடச் செய்வதற்கான முயற்சியை தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொண்டது.
ஆனால், அதன்பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டுவிட்டது. மாநிலம் முழுவதும் கல்லூரிகள் ஒரே நேரத்தில் திறக்கப்படுவது சாத்தியமாகும்போது, தேர்வு முடிவை ஒரே நேரத்தில் வெளியிட வைப்பதும் சாத்தியம்தான். எனவே, இதற்கான முயற்சியை மீண்டும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.