அண்ணா பல்கலை.க்கு தடையில்லை: சென்னைப் பல்கலை.யிலும் பட்டமளிப்பு விழா நடத்தப்படுமா?

துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில்,
அண்ணா பல்கலை.க்கு தடையில்லை: சென்னைப் பல்கலை.யிலும் பட்டமளிப்பு விழா நடத்தப்படுமா?
Updated on
2 min read

துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பட்டமளிப்பு விழா நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கியப் பல்கலைக்கழகங்களில் பல மாதங்களாக துணைவேந்தர் இல்லை. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சில மாதங்களாக இல்லை.
இந்நிலையில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவை நடத்த சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேதியும் இறுதி செய்யப்பட்டது. ஆனால், பேராசிரியர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா நிறுத்தப்பட்டது. இதுவரை நடத்தப்படவில்லை. இதுபோல, அண்ணா பல்கலைக்கழகமும் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்து, வெள்ளிக்கிழமை (மே 19) நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு அந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பட்டமளிப்பு விழாவுக்குத் தடைவிதிக்க மறுத்து, வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதனால், திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
இதுபோல, 9 மாதங்களுக்கு மேலாக பட்டச் சான்றிதழைப் பெற முடியாமல் காத்திருக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகமும் பட்டமளிப்பு விழா நடத்துமா? என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ஒருவர் கூறியது:
பல்கலைக்கழகத்தின் கீழ் மூன்று மாவட்டங்களில் இயங்கி வரும் கல்லூரிகளில் ஆயிர்க்கணக்கான மாணவர்கள் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பட்டங்களை முடித்து 9 மாதங்களுக்கு மேலாக பட்டச் சான்றிதழைப் பெற முடியாமல் காத்துக்கிடக்கின்றனர்.
இதனால், அவர்கள் வேலைவாய்ப்பு, பட்ட மேற்படிப்பு வாய்ப்புகளில் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே அண்ணா பல்கலைக்கழகத்தைப் போல சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பட்டமளிப்பு விழா நடத்தவேண்டும் என்றார்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக நிர்வாக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும், பல்கலைக்கழக பேராசிரியர் பேரவை பொதுச் செயலாளருமான எஸ்.எஸ்.சுந்தரம் கூறியதாவது: பட்டச் சான்றிதழில் யார் கையெழுத்திட வேண்டும் என்பது சென்னைப் பல்கலைக்கழக விதி புத்தகம் பாகம் -2 இல் 16-ஆவது பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பட்டச் சான்றிதழில் துணைவேந்தர் மட்டுமே கையெழுத்திட வேண்டும். இதனடிப்படையிலேயே, தமிழக ஆளுநரிடம் முறையிடப்பட்டு பட்டமளிப்பு விழா நிறுத்தப்பட்டது. இது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மாறுபடும். எனவே, சென்னைப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்த இயலாது என்றார்.
பட்டச் சான்றிதழில் ஐஏஎஸ் அதிகாரி கையெழுத்திடலாமா?
சென்னை உயர் நீதிமன்றம் தடையில்லை என தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட உள்ளது.
இதில் 1.20 லட்சம் மாணவர்கள் பட்டச் சான்றிதழைப் பெற உள்ளனர். இந்தச் சான்றிதழ்களில் துணைவேந்தருக்குப் பதிலாக, உயர் கல்வித் துறைச் செயலராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியான சுனில் பாலிவால் கையெழுத்திட உள்ளார்.
இவ்வாறு அளிக்கப்படும் பட்டச் சான்றிதழ் செல்லாது. இது பட்டம் பெறும் மாணவர்களைத் தான் பாதிக்கும் என்கின்றனர் பேராசிரியர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது: பட்டச் சான்றிதழில் துணைவேந்தர் கையெழுத்திடுவதுதான் மரபு. அவர் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா நடத்துவது எதிர்பாராதது.
இருந்தபோதும், மூத்த பேராசியர் ஒருவரை இடைக்காலத் துணைவேந்தராக நியமித்து, பட்டமளிப்பு விழாவை நடத்தியிருக்கலாம். துணைவேந்தர் பொறுப்பில் இருந்து இந்தப் பேராசிரியர் பட்டச் சான்றிதழில் கையெழுத்திடும்போது எந்த சர்ச்சையும் எழாது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com