ஒன்று முதல் பிளஸ் 2 வரை வரைவுப் பாடத் திட்டம் தயார்

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரைவுப் பாடத் திட்டப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது.
Updated on
1 min read

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரைவுப் பாடத் திட்டப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது.
மாறுபட்ட அறிவியல் தொழில்நுட்பச் சூழல், மாணவர்கள் சந்தித்து வரும் கல்வி சார்ந்த பல்வேறு சவால்களைக் கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை வடிவமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து உயர்நிலைக் குழு, கலைத் திட்டக் குழு என இரு குழுக்கள் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டப்பணிகள் கடந்த ஜூன் மாத இறுதியில் தொடங்கின. இப்பணிகள் தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த சில நாள்களில் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படவுள்ளது. 
புதிய பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவன அதிகாரிகள் கூறியது:
புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க பல்வேறு மாநிலங்களிளின் பாடத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தமிழக அளவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கருத்தரங்கம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன. இதற்கிடையே இரு குழுக்களும் 10 முறை கூடி பாடத்திட்டம் குறித்து விவாதித்தன. தற்போது சர்வதேச மற்றும் தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் உள்பட 70-க்கும் மேற்பட்ட பாடங்களுக்கு வரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
சிறப்பம்சங்கள்?: புதிய பாடத் திட்டத்தில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு, மொழித்திறன், பொது அறிவு, தொலைநோக்குப் பார்வை, கணக்கியல் நுணுக்கங்கள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வகுப்பறைச் சூழல், கற்பித்தல் முறை, வினாக்களுக்கான மதிப்பெண் முறை ஆகியவற்றில் பல மாற்றங்கள் இருக்கும். அடுத்த சில நாள்களுக்குள் வரைவுப் பாடத்திட்டம் வெளியிடப்படும். 
இது குறித்துக் கருத்துக் கூற பொதுமக்கள், கல்வியாளர்கள், நிபுணர்களின் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் www.tnscert.org  என்ற வலைதளத்தில் பாட வாரியாக வெளியிடப்படும்.
பாடத்திட்டத்தில் விடுபட்ட அம்சங்கள், தவறுகள், கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கலாம். அவை ஏற்கத் தகுந்ததாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும். இந்தப் பணிகள் முடிவுற்றதும் டிசம்பர் மாதத்தில் புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்றவாறு பாடநூல்கள் எழுதும் பணி தொடங்கும். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தியபடி தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பாடத் திட்டம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். 
2,000 ஆசிரியர்களின் பங்களிப்பு: பயிற்சிக்குப் பின்னர் வரும் 2018-2019-ஆம் கல்வியாண்டில் முதல் கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின் மூலம் கற்பித்தல் தொடங்கும். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வல்லுநர்களின் உழைப்பில் உருவான புதிய பாடத் திட்டம் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com