

பொறியியல் மாணவர் சேர்க்கை: ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டுக்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்கப்போவதில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.
எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி, படிப்படியாக மூடுவதற்கான ஒப்புதலை, அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் பொறியியல் கல்லூரி, சிவ நாடார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரியில் இணையதளத்தில், எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி, இனி தனியாக விண்ணப்பங்களை ஏற்காது. இதே கல்லூரியில் உள்ள படிப்புகளுக்கு சென்னை சிவ நாடார் பல்கலையில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்வி மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் நிலை குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் சுமார் 4800 பேர் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து சான்றிதழ்கள் வழங்கப்படும். ஆனால், 2026-27-க்கு புதிய மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலமாக, நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை பெற்று வந்தனர். நிர்வாக மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களும் சேர்க்கை பெற்றனர். இனி அவ்வாறு இல்லாமல், சிவ நாடார் பல்கலையின் நுழைவுத் தேர்வு வாயிலாக மட்டுமே மாணவர் சேர்க்கை பெற முடியும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற கல்லூரியாக இயங்கி வந்தது. 65 சதவிகித மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலமாக நடந்து வந்தது. இந்த முறையில் சேர்க்கை பெற்றால் கல்விக் கட்டணம் ரூ.55,000 மட்டுமே, நிர்வாக முறையில் சேர்க்கை பெற்றால் அடிப்படை கட்டணமே ரூ.3.5 லட்சமாகக் இருந்து வந்தது.
தற்போது பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்களே பழைய நிலையிலேயே தொடரும். சேர்க்கை பெற்ற மாணவர்கள் கல்வியை முடிக்கும்வரை அவர்களது பேராசிரியர்களே தொடர்வார்கள் என்றும் உறுதி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.