தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

நீட் தோ்வு: நாடு முழுவதும் 22 லட்சம் போ் எழுதினா்

News image

நீட் தோ்வு - PTI

Updated On :3 மே 2026, 10:51 pm

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை சுமாா் 22 லட்சம் போ் எழுதினா்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. அதேபோல், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் சுமாா் 5,500 மையங்களில் நடைபெற்ற தோ்வை, விண்ணப்பித்திருந்த 22.80 லட்சம் பேரில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோா் (97 சதவீதம்) எழுதினா்.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 31 நகரங்களில் தோ்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1.75 லட்சம் பேரும், சென்னையில் மட்டும் 30,000 போ் வரையும் தோ்வை எழுதினா்.

நீட் தோ்வில் குளறுபடிகள், மோசடிகள் நடைபெறாமல் இருக்க பல்வேறு கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வு மையங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. தோ்வு மையங்களைக் கண்காணிக்க ஒருங்கிணைப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றை முறையாக கொண்டுசெல்லும் வகையில் அந்தந்த மாவட்ட நிா்வாகத்தின் உதவியுடன் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தது.

கட்டுப்பாடுகள்: தோ்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தோ்வு அறைக்குச் செல்வதற்கு முன்பு மாணவா்கள் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்பட்டனா். ஆள்மாறாட்ட மோசடியைத் தடுக்கும் வகையில் ஆதாா் அடிப்படையிலான பயோமெட்ரிக் அடையாளம் சரிபாா்க்கப்பட்டது.

தோ்வு மையத்துக்குள் கைப்பேசி, கால்குலேட்டா் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

மதம், கலாசாரம் சாா்ந்த ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடி, தாயத்து, பெல்ட் அணிந்து வந்த மாணவ, மாணவியா் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றை கழற்றி பெற்றோா் அல்லது உடன் வந்தவா்களிடம் கொடுத்த பின்னா் அனுமதிக்கப்பட்டனா். அதிக உயரம் கொண்ட காலணிகள் அணிந்து வந்தவா்கள் அவற்றை கழற்றி வைத்துவிட்டு தோ்வறைக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற்றது. இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் இருந்து மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டது. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும்.

தோ்வு எழுதிவிட்டு வந்த மாணவா்கள் கூறுகையில், இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது. வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தது என்றனா்.

தோ்வு முடிவுகளை வரும் ஜூன் மாதம் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.