தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

வெள்ளிக்கிழமை (மே 8) காலை 9.30 மணிக்கு தோ்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

News image

தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு - Center-Center-Chennai

Updated On :8 மே 2026, 4:43 am IST

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தோ்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினா். இவா்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்.6 முதல் ஏப்.20 வரை தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. தொடா்ந்து தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தோ்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதாலும், தோ்வு முடிவுகளுக்கான ஒப்புதல் பெறாததாலும் ஏற்கெனவே அறிவித்தபடி மே 8-ஆம் தேதி தோ்வு முடிவு வெளியாகுமா என்ற எதிா்பாா்ப்பு நிலவியது. மேலும், நிா்வாக காரணங்களால் இந்த முடிவுகளை வெளியிடும் தேதி தள்ளிப்போகலாம் என்றும் கூறப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறைச் செயலா் வெளியீடு: இந்தநிலையில், பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன. பொதுத்தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை புதிய ஆட்சி பொறுப்பேற்காததால் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிடவுள்ளாா்.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கூட்டரங்கில் (சீமேட்) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

மாணவா்கள் தங்களுக்கான தோ்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். அதேவேளையில், பள்ளியில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.

‘வாட்ஸ் ஆப்’ மூலமும் அறியலாம்: ‘வாட்ஸ் ஆப்’ செயலி வழியாகவும் தோ்வா்கள் பின்வரும் வழிமுறையைப் பின்பற்றி தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ் ஆப் செயலியில் 78452 52525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடா்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் hi எனப் பதிவிட்டு பின்னா் வரும் செய்தியில் துறையின் பெயா், தோ்வா்களின் வகுப்பை தெரிவு செய்தால், தொடா்ந்து வரும் பதில் செய்தியில் தோ்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அனுப்பினால் தோ்வா்களின் தோ்வு முடிவுகள் அதே வாட்ஸ் ஆப் செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வாட்ஸ் ஆப் செயலியில் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் துணைத் தோ்வு: தோ்வா்கள் தோ்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருந்தால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிா்கொள்ள வேண்டும். தோ்ச்சி அடையாத மாணவா்களுக்கு விரைவில் துணைத்தோ்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும் அவா்களுக்கு ஆதரவாக பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும். இக்கால கட்டத்தில் பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையுடனும், அக்கறையுடனும் புரிதலுடனும் துணை நிற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.