நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது.. மறக்காமல் இதைச் செய்ய வேண்டும்!

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பெற்றோர் மறக்காமல் செய்ய வேண்டிய விவரங்கள்
file photo
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதுDPS
Updated on
2 min read

தமிழகத்தில் அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலும், சிபிஎஸ்இ படத்திட்டத்திலும் பயின்று வரும் +2 மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

பிளஸ் 2 தேர்வெழுதிய பிறகு, அடுத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டும். தற்போது ஜேஇஇ - முதன்மை நுழைவுத் தேர்வு எழுதி முடித்தவர்களும் இருப்பார்கள்.

எம்பிபிஎஸ் பயில விரும்புவோர் ஏற்கனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பார்கள். அதில்லாமல் ஏராளமான பொதுவான நுழைவுத் தேர்வுகளும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகளும் உதாரணமாக விஐடி, எஸ்என்யு போன்ற பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது, பல்வேறு விஷயங்களிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதில் முக்கியமானது மிகச் சரியான இணையதளத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்பதை அறிந்து கொள்வது.

சில பல்கலைக்கழகங்கள் சென்னை, தில்லி என பல்வேறு நகரங்களில் செயல்படும். இவற்றுக்கான மாணவர் சேர்க்கை முறை, நுழைவுத் தேர்வுகள் எல்லாம் தனித்தனியாகவே நடத்தப்படும். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்களின் பல்கலைக்கழகங்கள் ஒரே இணையதளத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இது ஏன் இவ்வாறு அமைந்துள்ளது என்று மக்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதாவது, ஒரு பல்கலைக்கழகத்தின் இணையதளத்துக்குள் சென்று நாம் சென்னையில் இருக்கும் பல்கலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கிளிக் செய்திருப்போம். ஆனால் நாம் கிளிக் செய்வதற்கு ஒரு சில விநாடிகள் முன், அந்தப் பக்கமானது ரிஃபிரஷ் ஆகி வந்திருக்கும். நமக்கு முன் இருப்பது தில்லி அல்லது வேறு நகரத்தின் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கும் பக்கமாக இருக்கும். உண்மையில் முதல் முறையாக அந்த பல்கலைக்கழகத்தின் இணையதளத்துக்குள் செல்லும்போது இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கும் என்பதை யாராலும் உணர முடியாது. இது கிட்டத்தட்ட தூண்டில் போட்டு மீன்களைப் பிடிக்கும் முயற்சியாகவே, ஏமாந்த பெற்றோர் கூறுவார்கள்.

அதாவது, தில்லி, சென்னை பல்கலைக்கழகங்கள் என்று தெரியாமல் நாம் விண்ணப்பிக்க என்ற வாய்ப்பைத் தேர்வுவிடுவோம். விண்ணப்பத்தை முழுக்க பூர்த்தி செய்து நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தும்போதுகூட நமக்கு சந்தேகம் இருக்கும். ஆனால் அதை சரி செய்துகொள்ள மாட்டோம். காரணம் சென்னையில் உள்ள பல்கலைக்கு 1500 கட்டணம் என்றால், தில்லி பல்கலை நுழைவுத் தேர்வு கட்டணமே அதிகம். அப்போதும் சந்தேகம் வரும்.

ஆனால், கட்டணத்தை செலுத்தும் வரை, நாம் சென்னைக்கு மாற்றாக வேறு நகரத்தில் உள்ள இதே பல்கலைக்கு விண்ணப்பிக்கிறோம் என்பது தெரிய வராது. சரி பணத்தை செலுத்திவிட்டோம். தவறுதான் கேட்டால், திருப்பித் தருவார்கள்தானே என்று நினைக்கலாம். ஆனால், முதலை வாய்க்குள் சென்றது போல்தான் இந்த கட்டணம், ஒருகாலத்திலும் இந்தத் தொகையை திரும்பப் பெறவே முடியாது. நாம் எத்தனை மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் செய்தாலும் எல்லாவற்றுக்கும் பதில் வருமே தவிர, பணம் ஒருபோதும் வரவே வராது.

ஒருவர் இப்படி தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்ததும், அடுத்த சிக்கல் என்னவென்றால், உண்மையிலேயே சென்னையில் உள்ள அதே பல்கலைக்கு நாம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதே.

அதாவது நாம் விண்ணப்பிக்க விரும்பும் பல்கலையின் நுழைவுத் தேர்வுக் கட்டணம் என்னவோ ரூ.1,500 ஆகக் கூட இருக்கலாம். ஆனால் தவறுதலாக பதிவு செய்த பல்கலையின் கட்டணம் ரூ.2,500 அல்லது ரூ.3,000 ஆகக் கூட இருந்திருக்கும். சோகத்திலும் இது பெரும் சோகமாக இருக்கும்.

எனவே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பெரும்பாலும் கணினிகளைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு முறையும் எந்த யுஆர்எல்-இல் இருக்கிறோம் என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். விண்ணப்பங்களை எங்கு வேண்டுமானாலும் சப்மிட் செய்துவிட்டு பிறகு தொடரும் வாய்ப்பு இருக்கும். எனவே, அதையும் ஒருமுறை பயன்படுத்தி சென்னை அல்லது நாம் தேர்வு செய்யும் நகரில் உள்ள பல்கலைக்குத்தான் லாக் இன் செய்திருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கடந்த காலங்களில் இதுபோன்று பல நூறு மாணவர்கள் தவறாக வேறு நகர பல்கலைக்கு பணம் செலுத்தி, திரும்பக் கிடைக்காமலும், பணம் செலுத்திவிட்டோமே என்று அந்தத் தேர்வையும் செலவழித்து எழுதியிருப்பதும், சிலர் தேர்வெழுதிவிட்டோம், இடம் கிடைத்துவிட்டது என்பதற்காக சோறு, தண்ணீர் இல்லாமல், மிக மோசமான காற்று மாசு மற்றும் வெப்பநிலை இருக்கும் அந்தப் பல்கலைக்குச் சென்று படித்து வரும் நிலையும் காணப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் தில்லியில் இருக்கும் அந்த பல்கலையில் பயில்கிறார்கள் என்றால், அவர்கள் அனைவரும் இப்படி ஏமாற்றப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் ஒரு பல்கலைக்கு விண்ணப்பிக்கும்போது கவனமாக செயல்படவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு ஏமாந்த பெற்றோரின் கேள்வி என்னவென்றால், எந்த வகையிலும் சேர்க்கை முறையில் தொடர்பில்லாத ஆனால், ஒரே பெயர் இருக்கிறது என்பதற்காகவாவது அந்த பல்கலைக்கழகங்கள் ஒரே நுழைவுத் தேர்வை நடத்தலாம். ஆனால், அவ்வாறு இல்லாமல் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்தும்போது, இணையதளத்தை மட்டும் ஒன்றாக வைத்திருப்பதும், இதுபோன்ற தவறுகள் ஏதோ ஒருவர் செய்தால் தெரியாமல் நடந்த தவறாக இருக்கலாம் என்று விட்டுவிடலாம் ஆனால் ஒரு ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் எவ்வாறு தவறுதலான நகரத்தைத் தேர்வு செய்வார்கள், அவ்வாறு செய்யும்போது இதில் வேண்டும் என்றே தொழில்நுட்ப சிக்கல் ஏற்படுத்தப்பட்டிருப்பதையே காட்டுகிறது என்பதால் பல்கலைக்கழகங்களும் மனம் மாறி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பதே, ஏற்கனவே படிக்க வைத்து கட்டணங்களை கொள்ளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சில ஆயிரம் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஏற்கனவே ஏமாந்த பெற்றோர்கள் தரப்பில் ஒரே கோரிக்கைதான், இதுபோன்று மீண்டும் யாரும் ஏமாறக் கூடாது என்பதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com