
கேரளம்
பாஜகவுக்கு ஓரிடம்கூட கிடைக்காது! பினராயி விஜயன் சிறப்பு நேர்காணல்!
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அளித்த நேர்காணல் பற்றி...

கேரள முதல்வர் பினராயி விஜயன்
EPS
கேரளத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்காது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகின்றது.
இந்த நிலையில், கேரள தேர்தல் குறித்து ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு அந்த மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
இடது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க காத்திருக்கிறது. மக்களிடையே ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கலாம், கட்சிக்குள் பிரச்னைகள் உள்ளன. இந்த நிலையில், எந்த அடிப்படையில் ஆட்சியில் தொடர்வோம் என நம்புகிறீர்கள்?
மாநிலம் முழுவதும் நாங்கள் பயணம் செய்கிறோம். ஆனால், ஆட்சிக்கு எதிரான மனநிலையைக் காண முடியவில்லை. தங்களின் எதிர்பார்ப்புகளை பெருமளவு அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது என்பதே மக்களின் உணர்வாக உள்ளது.
கேரளம் மிகக் குறைவான ஊழலுடைய மாநிலமாக இருக்கிறது. இடது ஜனநாயக முன்னணி மட்டும் இல்லையெனில், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. நாங்கள் 'லைஃப் மிஷன்' வீட்டுவசதித் திட்டத்தையும், 'ஹரிதா கேரளம்' திட்டத்தையும் தொடங்கினோம். எல்லாவற்றையும் செய்துவிட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், உங்களால் மாற்றத்தை காண முடியும்.
பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால், வேறு அரசாங்கம் வேண்டும் என நினைக்கும் பிரிவினருக்கு உங்கள் கருத்து என்ன?
நீங்கள் தற்போது காணும் மாற்றங்கள் தன்னிச்சையாக நிகழ்ந்தவை அல்ல. கேரளத்தில் எந்த புதிய திட்டமும் வராது என்ற எண்ணம் இருந்தது.
தற்போது வளர்ச்சி நிகழ்ந்துவிட்டது, அதனால் அரசாங்கத்தை மாற்றிவிடலாம் என்று மக்கள் நினைப்பார்களா?
மக்கள் அப்படி நினைப்பதில்லை. இதுபோன்ற மாற்றங்களை இடது ஜனநாயக முன்னணியால் மட்டுமே கொண்டுவர முடியும் என்பது மக்களுக்கு தெரியும்.
உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, அரசாங்கத்துக்கு எதிராக சிறுபான்மையினர் ஒன்று திரண்டுள்ளார்கள் என்பது எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது. அதை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
உள்ளாட்சித் தேர்தல்கள், உள்ளாட்சி அமைப்புகளை மதிப்பிடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். இது மாநிலம் முழுவதற்கும் பொருந்தாது. எங்களுக்கு இருந்த சில பிரச்னைகளை நாங்கள் ஆராய்வோம். பல சதாப்தங்களுக்கு முன்பு, சிறுபான்மையினர் எங்களை குறிப்பிட்ட தொலைவில் வைத்திருந்தனர். ஆனால், அனுபவங்களின் அடிப்படையில் அவர்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். தங்கள் உரிமைகளை பாதுகாப்பதில் இடதுசாரிக் கட்சிகளே முன் நிற்கிறார்கள் என்பதை உணர்ந்துள்ளனர். சில சுயநல சக்திகள், இடதுசாரிகள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்துவதற்காக அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.
நீங்கள் ‘சங்கி விஜயன்’ என்று அழைக்கப்படுவது பற்றி...
இவையெல்லாம் ஒருவரை களங்கப்படுத்தும் பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். எனது அரசியல் வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். மக்கள் மீதான எனது அணுகுமுறை பற்றியும் தெரியும். பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்களிடம் சென்று, “தற்போது பினராயி விஜயன் பாஜகவுடன் நட்புடன் உள்ளார்” எனக் கூறி, தவறான சித்திரத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் இடதுசாரிகளின் பிம்பத்தைச் சேதப்படுத்துவதற்காக இதுபோன்ற பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. உண்மை வெளிவரும் வரை மட்டுமே இதுபோன்ற பொய்கள் நீடிக்கும். இதுபோன்ற பிரசாரத்தை முறியடிக்க, உண்மையான தகவல்களை அனைவரிடமும் சென்றடைவதை இடது ஜனநாயக முன்னணி தொண்டர்கள் உறுதி செய்ய முயற்சிக்கிறார்கள். இதன்மூலம், இந்தப் பிரச்னை பெருமளவில் தீர்க்கப்படும்.
சிறுபான்மையினர் விலகி இருப்பார்கள் என்று நாங்கள் கவலைப்படவில்லை. பெரும்பான்மை அல்லது சிறுபான்மை சமூகங்களைப் பொருட்படுத்தாமல், மக்களில் பெரும் பகுதியினர் மதச்சார்பற்ற மனப்பான்மை கொண்டவர்கள். வகுப்புவாதத்தை எதிர்ப்பதில் நாங்கள் எப்போதும் சமரசமற்றவர்களாக இருந்துள்ளோம், இனியும் அவ்வாறே இருப்போம்.
எதிர்க்கட்சித் தலைவர் உள்பட ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணித் தலைவர்கள், இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் - பாஜக இடையே உடன்பாடு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்கள். அதுபற்றி...
இது முன்ஜாமீன் வாங்குவதைப் போன்றே தவிர வேறொன்றுமில்லை. காங்கிரஸ்தான் எப்போதுமே பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. சில சமயங்களில், லீக் கட்சியும் அவர்களுடன் நின்றிருக்கிறது. அப்படித்தான் ஒரு காலத்தில் காங்கிரஸ்-லீக்-பாஜக கூட்டணி உருவானது.
ஒரு சமயத்தில், காங்கிரஸுடனான ஒரு புரிந்துணர்வின்படி, 41 தொகுதிகளில் தாங்கள் ஆதரவு அளித்ததாக ஒரு ஆர்எஸ்எஸ் தலைவரே கூறியிருந்தார். சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலிலும்கூட, இரு கட்சிகளும் சில இடங்களில் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொண்டன.
தேசிய அளவில் அரசியல் நிலவரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
ராகுல் காந்தியும் காங்கிரஸும் பாஜகவின் ‘பீ’ அணியாகச் செயல்பட்டு வருகின்றன. தில்லியில் கேஜரிவாலின் ஆம் ஆத்மி விஷயத்தில் காங்கிரஸின் அணுகுமுறை எப்படி இருந்தது? கேஜரிவாலின் அமைச்சர் கைது செய்யப்பட்டபோது காங்கிரஸ் என்ன கூறியது? கேஜரிவாலும் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அவர் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் பட்டாசுகளை வெடித்தார்கள்.
ராகுல் காந்தி சில சமயங்களில் அரசியல் முதிர்ச்சியற்ற முறையில் நடந்துகொள்கிறார் என்று நினைக்கிறீர்களா?
சில சமயங்களில், சிலர் முதிர்ச்சியற்ற முறையில் நடந்துகொள்வதுண்டு. ஆனால் இது அதையும் தாண்டிய ஒன்று. முக்கியமான தேர்தல்களின்போது காங்கிரஸின் அணுகுமுறை என்னவாக இருந்திருக்கிறது? முதலில், அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள், இது பாஜகவுக்குச் சாதகமான ஒரு சூழலாக உருவான பின்னர், ஒற்றுமையை வளர்க்க முயற்சிக்கிறார்கள். அது இயல்பாகவே தோல்வியடைகிறது.
மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், அரசின் முன்னுரிமைகள் என்னென்ன?
தேர்தல் அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வித் துறையில் இளைஞர்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவருவதும், உயர்க்கல்விச் சூழலை வலுப்படுத்துவது, வேலை வாய்ப்புகளை உறுதி செய்வது, அதன் மூலம் மாநிலத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் சந்தேகத்துக்கு இடமின்றி முதன்மை கவனம் செலுத்தப்படும்.
கடந்த இரண்டு முறை பதவிக் காலத்தில் செய்த எதைப் பற்றியாவது வருத்தம் உண்டா?
மாநிலம் முழுவதும் விரைவான போக்குவரத்து முறையை கட்டமைக்க விரும்பினோம். ஆனால், ஒரு சிலரின் விசித்திரமான நிலைப்பாட்டால் அதைச் செயல்படுத்த முடியவில்லை. கேரளத்தைப் பொறுத்தவரை பாஜக ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுத்தது.
கே - ரயில் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?
அது கே - ரயில் என்ற பெயரில் இல்லாமல் இருக்கலாம். தற்போது ஆர்.ஆர்.டி.எஸ் (பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு) திட்டத்தைப் பரிசீலித்து வருகிறோம். இதற்கு மத்திய அரசு பெரிய எதிர்ப்பை எழுப்பவில்லை. அதைச் செயல்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன்.
முதல் மற்றும் இரண்டாவது பினராயி விஜயன் ஆட்சிகளுக்கு இடையே அடிக்கடி ஒரு ஒப்பீடு செய்யப்படுகிறது. இரண்டில் எது சிறந்தது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இரு ஆட்சியும் சமமாகச் சிறப்பாகச் செயல்பட்டன. ஆரம்பத்தில், கடந்த முறையைப் போன்று ஆட்சி இருக்குமா என்று சிலர் கவலை தெரிவித்தனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளைப் பார்த்தால் அனைத்தும் சிறப்பாகவே இருந்தன.
இந்த முறை இடது ஜனநாயக முன்னணி எத்தனை இடங்களில் வெல்லும்?
கடந்த முறையைவிட நிச்சயமாக அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.
பாஜக மீண்டும் கணக்கைத் தொடங்குமா? கேரளத்தில் தனது பலத்தை அதிகரித்துள்ளதா?
இந்த முறையும் பாஜகவுக்கு எந்த இடமும் கிடைக்காது. அவர்களின் பலம் சிறிதளவு அதிகரித்துள்ளது, ஆனால் வெற்றி கிடைக்காது.
(நேர்காணல்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் கிரண் பிரகாஷ், சித்தாரா பால், எம்.பி. பிரசாந்த், அனில் எஸ்; புகைப்படம்: வின்சென்ட் புலிக்கல்)
தமிழில் - எஸ். ரவிவர்மா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

போர்நிலை வேண்டாம்!
கோலிவுட் ஸ்டூடியோ!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

