புதுச்சேரி: தக்கவைக்கும் முனைப்பில் காங்கிரஸ்

புதுச்சேரி மக்களவை தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 10 முறையும், திமுக, அதிமுக, பாமக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
புதுச்சேரி: தக்கவைக்கும் முனைப்பில் காங்கிரஸ்

புதுவை ஒன்றிய பிரதேசம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களைக் கொண்டது. 30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுவையின் மொத்த வாக்காளர்கள் 10.23 லட்சம். இதில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் வாக்காளர்கள் அதிகம்.

பெரும்பான்மையினராக வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள், மீனவர்கள் ஆகியோர் உள்ளனர். பிற சமுதாயத்தினரும் பரவலாக வசிக்கின்றனர். புதுச்சேரி, காரைக்காலில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 1967-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரையிலான 14 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 10 முறையும், திமுக, அதிமுக, பாமக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

2004-ஆம் ஆண்டு புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணியில் பாஜக வேட்பாளராக லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டு 1,72,472 வாக்குகளைப் பெற்று வைப்புத் தொகையைத் தக்கவைத்தார். 2009 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் விக்னேஷ்வரன் தனித்து நின்று 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அதன்பிறகு, தற்போதுதான் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து பாஜக களம் காண்கிறது.

பாஜகவின் பலம்: பாஜக வேட்பாளர் ஆ.நமச்சிவாயம் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். புதுவை உள்துறை, கல்வித் துறை அமைச்சராக இருந்த போதும், எளிதில் அணுகக் கூடியவர். அவர் காங்கிரஸில் இருந்த போது மாநிலத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். புதுவை முதல்வர் என். ரங்கசாமியின் உறவினர்.

காவல், கல்வித் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றனர். 6 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 முறை வெற்றி பெற்றுள்ளார். மக்களவைத் தேர்தலில் வென்றால் மத்திய அமைச்சராவார் என பிரசாரம் செய்யப்படுகிறது.

பலவீனம்: கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அளித்த வாக்குறுதியின்படி, புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை நிறைவேற்றப்படாதது, மின் துறை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, மூடப்பட்ட ஆலைகள், நியாயவிலைக் கடைகள் திறக்கப்படாதது, அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் தொடர் போராட்டம், கடந்த முறை கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது தனித்துப் போட்டியிடுவது போன்றவை பாஜகவுக்கு பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் வேட்பாளர்: "இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான வெ. வைத்திலிங்கம் எம்.பி. போட்டியிடுகிறார். இவரது தந்தை தியாகி வெங்கடாசுப்பா ரெட்டியார் புதுவை முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர்.

வெ.வைத்திலிங்கம் 8 முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றி உள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரைவிட 1.97 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், சமூக நல அமைப்புகள் ஆதவளிப்பது காங்கிரஸுக்கு பலமாகக் கருதப்படுகிறது. மாநில அந்தஸ்து நிறைவேற்றப்படாதது, நியாயவிலைக் கடைகள் மீண்டும் திறக்கப்படாததை பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தில் பிரதானமாக வைக்கப்படுகிறது.

கோஷ்டி மோதல்: பிரதான கூட்டணிக் கட்சியான திமுகவுடன் காங்கிரஸ் ஆரம்பம் முதல் முரண்பட்டிருப்பது, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நிலவும் கோஷ்டி பூசல்கள், கடந்த மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பாஜகவில் இணைந்து காங்கிரஸுக்கு எதிராக செயல்படுவது உள்ளிட்டவை பலவீனமாகக் கருதப்படுகிறது.

அதிமுக: அதிமுக சார்பில் தொழிலதிபர் கோ. தமிழ்வேந்தன் களம் காண்கிறார். மீனவர் சமுதாத்தைச் சேர்ந்த இவர், புதுச்சேரி மக்களுக்கு பரிட்சயம் இல்லாவிட்டாலும் மீனவர் சமுதாய வாக்குகளை கணிசமாகப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக 1.32 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அதிமுகவினரின் பிரசாரம் வேட்பாளருக்கு பலம் சேர்க்கிறது.

நாம் தமிழர் வேட்பாளர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.மேனகா சித்த மருத்துவராவார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லை என்றாலும், கட்சியினரின் பிரசாரம் வாக்குகளை பெற்றுத்தரும் என நம்பிக்கை உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 22,857 வாக்குகள் (2.84 சதவீதம்) கிடைத்தது.

2019 மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு 12,199 வாக்குகளும், 14 சுயேச்சைகள், பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்கள் ஆகியோர் சேர்ந்து மொத்தம் 24,672 வாக்குகளையும் பெற்றனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தாத திட்டங்கள், தற்போது செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்களை வாக்காளர்களிடையே எடுத்துரைத்து வெற்றி பெறுவோம் என பாஜக வேட்பாளர் ஆ.நமச்சிவாயம் நம்பிக்கை தெரிவித்தார்.

என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் பலவீனங்களை மக்கள் முன்வைத்து வெற்றியை எளிதாக்குவோம் என்று காங்கிரஸ் வேட்பாளர் வெ. வைத்திலிங்கம் தெரிவித்தார்.

மாநில அந்தஸ்து, மூடப்பட்ட ஆலைகள், நியாயவிலைக் கடைகள் திறக்கப்படாதது போன்றவை பிரதான கட்சி வேட்பாளர்களால் முன்வைக்கப்படுகிறது. வெற்றியைத் தக்க வைக்கும் முனைப்பில் காங்கிரஸும், வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பாஜகவும் களத்தில் விறுவிறுப்பாக பணியாற்றி வருகின்றன.

கானல் நீராக மாநில அந்தஸ்து

புதுவைக்கு மாநில அந்தஸ்து அல்லது அமைச்சரவைக்கான கூடுதல் நிதி அதிகாரம் வழங்க வேண்டும். புதுச்சேரி - கடலூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும். சேதராப்பட்டு தொழிற்பேட்டைக்கான நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.

விமான நிலைய விரிவாக்கம், மூடப்பட்ட ஆலைகளைத் திறந்து வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல், புதுச்சேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரில் கடல்நீர் புகுந்துள்ளதால் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடல் அரிப்பு தடுப்பு, நியாயவிலைக் கடைகளை மீண்டும் திறக்கவேண்டும் ஆகியவை பிரதான கோரிக்கைகளாகும்.

வாக்காளர்கள் விவரம்:

மொத்த வாக்காளர்கள்- 10,23,699

பெண்கள்- 5,42,979

ஆண்கள்- 4,80, 569

மூன்றாம் பாலினத்தவர்- 151.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com