10 லட்சம் அஞ்சல் உறைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்

10 லட்சம் அஞ்சல் உறைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் விதமாக, தமிழகத்தில் தினமும் 10 லட்சம் அஞ்சல் உறைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் முத்திரையிடப்படுகின்றன.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, தொழிலாளர் துறை மூலமாக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள், கையொப்ப இயக்கம், ரங்கோலி கோலங்கள், தொழிலாளர்களிடையே வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான வாசகங்கள் அஞ்சல் உறைகளில் முத்திரையிடப்பட்டு, விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

கோவையில் ஆர்.எஸ்.புரம், குட்ஷெட் சாலை பகுதிகளில் தலைமை அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 80 துணை அஞ்சல் நிலையங்கள், 100-க்கும் மேற்பட்ட கிளை அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து விரைவு தபால், பதிவு தபால், மணியார்டர், கடிதங்கள், பார்சல்கள் உள்ளிட்டவை வெளியூர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இதில் அந்தந்தப் பகுதியில் உள்ள பணியாளர்களின் மேற்பார்வையில் "தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா-மக்களவைத் தேர்தல் 2024' என தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் அஞ்சல் உறைகளின் மேல் முத்திரையிடப்பட்டு அனுப்பப்படுகிறது.

இதுதொடர்பாக, ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, கோவையில் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் அஞ்சல் உறைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் முத்திரையிடப்பட்டு அனுப்பப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் தினமும் சராசரியாக 25 ஆயிரம் அஞ்சல்களில் விழிப்புணர்வு முத்திரை இடப்பட்டு அனுப்பப்படுகிறது. இதேபோல தமிழகம் முழுவதும் தினமும் சராசரியாக 10 லட்சம் அஞ்சல் உறைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் முத்திரையிடப்பட்டு அனுப்பப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com