ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு அங்கு நடைபெறவிருக்கும் முதல் முக்கியமான தேர்தல், தற்போதைய மக்களவைத் தேர்தலாகும்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 5 தொகுதிகளும், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதியும் உள்ளன.
தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மாநிலக் கட்சிகளான ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), குலாம் நபி ஆஸாதின் ஜனநாயக முற்போக்கு ஆஸாத் கட்சி, அல்தாஃப் புகாரியின் ஜம்மு-காஷ்மீர் அப்னி கட்சி ஆகியவை "பலப்பரீட்சை' நடத்தவிருக்கின்றன.
மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக பேரவைத் தேர்தல் நடைபெற்றது கடந்த 2014-ஆம் ஆண்டில். அப்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின்கீழ் பிடிபி-யும், பாஜகவும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. முதல்வராக பிடிபி நிறுவனர் முஃப்தி முகமது சயீத் பதவியேற்றார்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் சயீத் காலமானதைத் தொடர்ந்து அரசியல் குழப்பம் ஏற்பட்டு, பின்னர் அவரது மகள் மெஹபூபா முஃப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டில் இக்கூட்டணி முறிவால், சட்டப் பேரவை கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே, 2019-ஆம் ஆண்டில் நாட்டில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக, தங்கள் வாக்குறுதியின்படி, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து, அதிரடி காட்டியது.
2019, ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்படி, ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீர், லடாக்) பிரிக்கப்பட்டது.
அதன் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருந்துவரும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2022-ஆம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. முஸ்லிம்கள் அதிகமுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர், அனந்த்நாக்-ரஜௌரி, பாரமுல்லா ஆகிய 3 தொகுதிகளும், ஜம்மு பகுதியில் ஜம்மு, உதம்பூர் ஆகிய 2 தொகுதிகளும் உள்ளன.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 3 தொகுதிகளையும் தேசிய மாநாட்டுக் கட்சி கைப்பற்றியிருந்தது. ஜம்முவின் இரு தொகுதிகளும் பாஜக வசமாகியிருந்தன.
தற்போது ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறும் சூழலில், பாஜக அனைத்து தொகுதிகளிலும் களம்காண்கிறது.
தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் உருவாக்கிய "இந்தியா' கூட்டணியில் காங்கிரஸூடன் தேசிய மாநாட்டுக் கட்சியும், பிடிபி-யும் அங்கம் வகிக்கின்றன. ஆனால், தொகுதி பங்கீட்டில் இவ்விரு மாநிலக் கட்சிகள் இடையே சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் 3 தொகுதிகளில் ஒன்றைக்கூட விட்டுத் தர முடியாது என்ற நிலைப்பாட்டில் தேசிய மாநாட்டுக் கட்சி பிடிவாதமாக இருந்ததால், இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்தன.
மேற்கண்ட 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்ட பிடிபி கட்சி, அனந்த்நாக்-ரஜௌரி தொகுதியில் மெஹபூபா முஃப்தி போட்டியிடுவதாக அறிவித்தது. அதேநேரம், ஜம்முவில் உள்ள இரு தொகுதிகளில் காங்கிரஸூக்கு ஆதரவளிப்போம் என்று பிடிபி தெரிவித்திருக்கிறது.
மற்றொரு புறம், "இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சியும், ஜம்முவில் உள்ள இரு தொகுதிகள் மற்றும் லடாக்கில் காங்கிரஸூம் போட்டியிட முடிவு செய்துள்ளன. லடாக் தொகுதி தற்போது பாஜக வசம் உள்ளது.
அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவித்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, மற்ற இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை.
பாஜக சார்பில் உதம்பூரில் மத்தியஅமைச்சர் ஜிதேந்திர சிங்கும், ஜம்முவில் தற்போதைய எம்.பி. ஜுகல் கிஷோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களாக முறையே லால் சிங், ரமண் பல்லா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிரிவு 370 ரத்து: ஆதரவும் எதிர்ப்பும்
370-ஆவது பிரிவு ரத்து நடவடிக்கையை, தங்களது அரசின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாக முன்னெடுத்து வருகிறது பாஜக. இப்பிரிவு ரத்தால், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளதோடு, மாநிலத்தில் சுற்றுலா மேம்பாடு, முதலீடு அதிகரிப்புக்கு வழிவகுத்திருப்பதாக பாஜக பிரசாரம் மேற்கொண்டுவருகிறது.
அதேநேரம், மத்திய அரசின் செயலால் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து - மாநில அந்தஸ்து வழங்குவதை முன்வைத்து, தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.
இந்த விவகாரம் தவிர, பஹாரி சமூகத்தினருக்கான பழங்குடியினர் அந்தஸ்து, சுரங்க, மதுக்கடை உரிமங்களை வெளிநபர்களுக்கு வழங்கும் நடவடிக்கை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளும் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய எம்.பி.க்கள் அடிப்படையில் பாஜக மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவையே முக்கிய கட்சிகளாக உள்ளன. அமைப்பு ரீதியில் வலுவான கட்டமைப்பும், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள செல்வாக்கும் பாஜகவின் பலமாக இருக்கும் நிலையில், வலுவான தலைமை, அரசியல் பாரம்பரியம் போன்றவை தேசிய மாநாட்டுக் கட்சிக்கு பலம் சேர்க்கின்றன.
மெஹபூபாவின் வெற்றி-தோல்வி
இதுவரை 4 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள மெஹபூபா முஃப்தி, அனந்த்நாக் தொகுதியில் கடந்த 2004, 2014 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றார். கடந்த 1999 தேர்தலில் ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லாவிடம் தோல்வியடைந்த அவர், அனந்த்நாகில் 2019 தேர்தலில் மூன்றாவது இடத்தையே பிடித்தார்.
இம்முறை அனந்த்நாக்-ரஜௌரி தொகுதியில் போட்டியிடும் அவர் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளார். இத்தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் செல்வாக்குமிக்க குஜ்ஜார் சமூகத் தலைவர் மியான் அல்தாஃப் அகமது, ஜனநாயக முற்போக்கு ஆஸாத் கட்சி தலைவர் குலாம் நபி ஆஸாத், அப்னி கட்சி வேட்பாளர் ஜாஃபர் இக்பால் ஆகியோரும் களத்தில் உள்ளனர். பாஜக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கட்சியின் மாநிலத் தலைவர் ரவீந்திர ரெய்னா களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீநகரில் ஒமர் அப்துல்லா போட்டி?
அப்துல்லா குடும்பத்தினரின் செல்வாக்குமிக்க தொகுதியாக கருதப்படும் ஸ்ரீநகரின் தற்போதைய எம்.பி.யாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்
ஃபரூக் அப்துல்லா உள்ளார். இம்முறை அவரது மகன் ஒமர் அப்துல்லா களமிறக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு ஏற்கெனவே 3 முறை ஒமர் அப்துல்லா எம்.பி.யாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரவைத் தேர்தல் எப்போது?
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையை கடந்த ஆண்டு உறுதி செய்த உச்சநீதிமன்றம், கூடிய விரைவில் மீண்டும் மாநில அஸ்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், 2024, செப்டம்பருக்குள் பேரவைத் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது. எனவே, ஜம்மு-காஷ்மீரில் மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, மக்களவைத் தேர்தலுக்கு பிறகே பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
கடந்த தேர்தல்களில் வெற்றி
தொகுதி 2019 2014
1.உதம்பூர் ஜிதேந்திர சிங் (பாஜக) ஜிதேந்திர சிங் (பாஜக)
2.ஜம்மு ஜுகல் கிஷோர் (பாஜக) ஜுகல் கிஷோர் (பாஜக)
3.அனந்த்நாக் ஹஸ்னைன் மசூதி (தேசிய மாநாட்டுக் கட்சி) மெஹபூபா முஃப்தி (பிடிபி)
4.ஸ்ரீநகர் ஃபரூக் அப்துல்லா தாரிக் ஹமீது (பிடிபி)
5.பாரமுல்லா முகமது அக்பர் லோனி (தேசிய மாநாட்டுக் கட்சி) முஸாஃபர் ஹஸ்னைன் பெய்க் (பிடிபி)
எம்.கணேஷ்
தொடர்புடையது

சபாஷ் சரியான போட்டி!

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்
ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


