‘ஊழலின் சாம்பியன்’ பிரதமா் மோடி: ராகுல்

‘ஊழலின் சாம்பியன்’ பிரதமா் மோடி: ராகுல்

‘தோ்தல் நன்கொடை பத்திரம் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம்’

‘தோ்தல் நன்கொடை பத்திரம் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம்’ என்று குறிப்பிட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘பிரதமா் நரேந்திர மோடி ஊழலின் சாம்பியன்’ என்று விமா்சனம் செய்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் ராகுல் காந்தியும் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்தனா். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

2024 மக்களவைத் தோ்தல் கருத்தியல் சாா்ந்த தோ்தல். ஒருபுறம், அரசமைப்புச் சட்டத்தையும் நாட்டின் ஜனநாயக நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜக; மறுபுறம், அவற்றை பாதுகாக்க முயற்சிக்கும் ‘இந்தியா’ கூட்டணி.

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயா்வு உள்ளிட்டவை தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன. ஆனால், இந்தப் பிரச்னைகளிலிருந்து மக்களை திசைத் திருப்பும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. சில நேரங்களில் பிரதமா் மோடி கடலுக்கு அடியில் செல்வாா் அல்லது விமானத்தில் பயணிப்பாா். ஆனால், நாடு சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகள் குறித்து எதுவும் பேசமாட்டாா்.

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்து பிரதமா் மோடி அண்மையில் அளித்த விளக்கம் என்பது மக்களை ஏமாற்றும் விஷயமாகும். அவா் கூறுவதுபோல, அரசியலில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்றால், உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்யவேண்டிய அவசியம் ஏன் எழுந்தது?

அந்தத் திட்டம் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துகிறீா்கள் என்றால், பாஜகவுக்கு பல கோடிகள் நன்கொடை அளித்தவா்களின் பெயா்கள், நன்கொடை அளிக்கப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் ஏன் மறைக்கப்பட்டன?

சில நிறுவனங்கள் அரசு ஒப்பந்தங்களைப் பெற்ற பிறகும், சில நிறுவனங்கள் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைக்குப் பிறகும் தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளன.

இது உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டமாகும். இதுதொடா்பாக பிரதமா் எவ்வளவு விளக்கமளித்தாலும், எந்தவித மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏனெனில், பிரதமா் நரேந்திர மோடி ‘ஊழலின் சாம்பியன்’ என்பதை ஒட்டுமொத்த நாடும் அறியும்.

15 - 20 நாள்களுக்கு முந்தைய நிலவரப்படி, பாஜக ஒட்டுமொத்தமாக 180 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது. ஆனால், தற்போது அதிகபட்சம் 150 இடங்களில் மட்டுமே அக் கட்சி வெற்ற பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அதே நேரம், இந்தியா கூட்டணிக்கு அனைத்து மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வருவதாக தகவல்கள் வருகின்றன. உத்தர பிரதேச மாநிலத்திலும் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இம் மாநிலத்திலும் கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறும் என்றாா்.

அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘பொய் கூறுவதும் கொள்ளையடிப்பதுமே பாஜகவினரின் அடையாளமாக மாறியுள்ளது. மக்கள் தற்போது மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா். எனவே, மத்தியில் இந்தியா கூட்டணி அரசு அமையும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என்றாா்.

பெட்டி...

அமேதியிலும் போட்டி?

மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் போட்டியிடுவீா்களா என்ற கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்’ என்று தெரிவித்தாா்.

2019 மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் அமேதி என இரு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியைச் சந்தித்தாா். தற்போது வயநாடு தொகுதியில் மட்டும் ராகுல் வேட்புமனு தக்கல் செய்துள்ளாா். அமேதி தொகுதிக்கு மே 20-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் அவகாசம் உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் காங்கிரஸ், அங்கு 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com