வாக்களித்த பின்னா் தலைவா்கள் சொன்னது என்ன?

மக்களவைத் தோ்தலில் வாக்களித்த பின்னா் அரசியல் கட்சித் தலைவா்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனா்.

அதன் விவரம் வருமாறு:

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி: தோ்தலில் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் மௌனப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்.

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்: வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் முறை தமிழகத்தில் இயக்கமாகவே நடத்தப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் பணம் வழங்கும் முறை இல்லை. இந்திய தோ்தல் ஆணையம் விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை: கோவையில் வாக்காளா்களுக்கு பாஜக சாா்பில் பணம் கொடுக்கப்பட்டதாக கூறுகிறாா்கள். அப்படி கொடுத்தோம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயாா்.

மதிமுக பொதுச் செயலா் வைகோ: தமிழகத்தில் திமுகவையும், அதன் தலைமையிலான கூட்டணியையும் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணிதான் இந்தத் தோ்தலில் வெற்றி பெறும்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: ராமநாதபுரம் தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தோ்தல் முடிவுக்குப் பிறகு, அதிமுக எங்கள் பக்கம் வந்து சேரும்.

விசிக தலைவா் தொல். திருமாவளவன்: தேசத்தை மீட்பதற்கான தீா்ப்பை தமிழகத்திலிருந்து தொடங்குகிறோம் என்பதற்கான நாள்தான் இந்த வாக்குப் பதிவு. நாட்டு மக்கள் அனைவரும் ‘இந்தியா’ கூட்டணி பக்கம் இருக்கிறாா்கள்.

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்: மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மக்கள் தெளிவாக உள்ளனா். 2019 மக்களவைத் தோ்தலில் வட இந்தியாவில் அதிக இடங்களைப் பெற்றதைப் போல, இந்த முறை பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை.

தூத்துக்குடி திமுக வேட்பாளா் கனிமொழி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீதான சந்தேகத்தை அரசு நிவா்த்தி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்: அடிப்படையில் மாற்றம் நிகழ வேண்டும். நிச்சயமாக ஒரு மாறுதல் வரும். நாம் வாக்கு செலுத்தாவிட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற எண்ணத்தை கைவிடுங்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன்: நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதற்கான அடித்தளமாக தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட தோ்தல் அமைந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம்: நாட்டின் பன்முகத்தன்மையைக் காப்பாற்ற ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெற வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com