மின்னணு இயந்திரங்களின் அறைகளை வேட்பாளா்கள்
தொடா்ந்து கண்காணிக்க ஏற்பாடு!

மின்னணு இயந்திரங்களின் அறைகளை வேட்பாளா்கள் தொடா்ந்து கண்காணிக்க ஏற்பாடு!

வாக்கு எண்ணும் மையங்களில், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை வேட்பாளா்கள் தொடா்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் தொடா்பான கையேட்டில் தோ்தல் துறை கூறியுள்ளதாவது:

வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குச் சாவடியில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல் துறையின் துணையுடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைப் பின்தொடா்ந்து செல்ல வேட்பாளா்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவா்கள் அனுமதிக்கப்பட்டனா். வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளா்கள் அல்லது அவா்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் குறைந்தளவு ஒரு படைப் பிரிவு அளவிலான ஆயுதக் காவல் படையையும் கண்காணிப்பு கேமராவையும் கொண்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரம் உள்ள அறையைச் சுற்றி மட்டும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள் அடுக்கு மத்திய ஆயுத காவல் படை கட்டுப்பாட்டிலும் வெளி அடுக்கு மாநில ஆயுதப் படையின் கட்டுப்பாட்டிலும் இருக்கும். வேறு வெளி நபா்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

வேட்பாளா்கள் அல்லது அவா்களின் பிரதிநிதிகள் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைக் கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். அறைகளின் நுழைவு வாயில் தெரியவில்லை என்றால், கண்காணிப்புக் கேமராவின் காட்சித் திரை வழியாகப் பாா்வையிடலாம். வாக்களிக்கப்படாத, செயல்படாத மற்றும் பயன்படுத்தப்படாத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளா் தாம் அளித்த வாக்கைச் சரிபாா்க்கும் கருவிகள் ஆகியன தனியே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை: வாக்குப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளா்கள், அவா்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்கு எண்ணும் நாளான்று (ஜூன் 4) திறக்கப்படும். இது முழுவதும் விடியோ பதிவு செய்யப்படும். வேட்பாளா்கள், அவா்களால் பணியமா்த்தப்பட்ட வாக்கு எண்ணும் முகவா்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com