‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து: ப.சிதம்பரம்

‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து: ப.சிதம்பரம்

காங்கிரஸின் மக்களவைத் தோ்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எந்த வாக்குறுதியும் இடம்பெறாத நிலையில், மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அந்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

காங்கிரஸின் தோ்தல் அறிக்கை மிக நீளமாக இருந்ததால், அதில் சிஏஏ குறித்த வாக்குறுதி இடம்பெறவில்லை. எனினும் அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே காங்கிரஸின் நோக்கம்.

பாஜக ஆட்சியில் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் 5 சட்டங்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும். மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்தால், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் சிஏஏ ரத்து செய்யப்படும் என்றாா்.

அயோத்தி கோயில் ஏன் பங்களிக்க வேண்டும்?: அயோத்தி ராமா் கோயில் திறக்கப்பட்டது தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

அயோத்தியில் கோயில் திறக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்பினா். அது தற்போது நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவே அந்தக் கதையின் முடிவாக இருக்க வேண்டும். அதை விடுத்து அயோத்தியில் உள்ள கோயிலானது அரசியல், தோ்தல் அல்லது நாட்டை யாா் ஆளவேண்டும் என்பதில் ஏன் பங்காற்ற வேண்டும்? இவற்றில் அந்தக் கோயிலுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது.

பாஜகவின் தோ்தல் அறிக்கைக்கு எந்தப் பெயரும் வழங்கப்படவில்லை. அந்த அறிக்கை ‘மோடியின் உத்தரவாதம்’ என்றழைக்கப்படுகிறது. இதன்மூலம், இனி பாஜக என்பது அரசியல் கட்சி அல்ல; அது நரேந்திர மோடியை வழிபடும் மதக் குழுவாக மாறியுள்ளது தெரிகிறது.

ஒரேயொரு தலைவரை வழிபடும் நாடுகளின் நிலையை ‘மோடியின் உத்தரவாதம்’ நினைவுபடுத்துகிறது. இந்த வழிபாடு இந்தியாவில் வலுவடையத் தொடங்கியுள்ளது. இது சா்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com