ஓவைசியை எதிர்த்து சானியா மிர்சாவை களமிறக்கும் காங்கிரஸ்?

ஹைதராபாத்தில் 40 ஆண்டுகளாக ஏஐஎம்ஐஎம் கட்சி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
சானியா மிர்சா
சானியா மிர்சா
Published on
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து சானியா மிர்சாவை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிஆர்எஸ் 9 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இருப்பினும், தெலங்கானா மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் தனது பலத்தை தக்க வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதேபோல், மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதியும், தெலங்கானாவில் அதிக வாக்கு சதவிகிதத்தை பெற பாஜகவும் களமிறங்கியுள்ளன.

பிஆர்எஸ் மற்றும் பாஜக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை மட்டுமே அறிவித்துள்ளது.

ஹைதராபாத், கம்மம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவிக்கவில்லை.

இதில், முஸ்லீம் மக்கள் அதிகளவில் இருக்கும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் 40 ஆண்டுகளாக ஏஐஎம்ஐஎம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

சானியா மிர்சா
வடகிழக்கில் வலுவான நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி!

1984 முதல் 2004 வரை ஏஐஎம்ஐஎம் நிறுவனர் சுல்தான் சலாவுத்தீன் ஓவைசி எம்பியாக இருந்தார். சலாவுத்தீனின் மறைவுக்கு பிறகு அவரது மகன் அசாதுதீன் ஓவைசி 2004 முதல் அனைத்து மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் 40 ஆண்டுகால கோட்டையை தகர்க்க காங்கிரஸ் சார்பில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பிரபலத்தை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்சாவை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய கமிட்டியிடமும் சானியா மிர்சாவை வேட்பாளராக நிறுத்த ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை சானியா மிர்சா களமிறங்கவில்லை என்றால் அவரது தந்தை இம்ரான் மிர்சாவை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பாஜக சார்பில் சமூக ஆர்வலர் மாதவி லதா ஹைதராபாத் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் காங்கிரஸ் யாரை களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com