வடகிழக்கில் வலுவான நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி!

வடகிழக்கு மாநிலங்களில் கோலோச்சும் தேசிய ஜனநாயகக் கூட்டணி.
வடகிழக்கில் வலுவான நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி!
Published on
Updated on
2 min read

வடகிழக்கில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன, அவற்றில் அஸ்ஸாமில் 14, மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களும், நாகாலாந்து, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்களும் உள்ளன.

அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அருணாசலம் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாஜக, நாகாலாந்து மற்றும் மேகாலயத்தில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

2019 மக்களவைத் தேர்தலில் அஸ்ஸாமைத் தவிர, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எந்தவொரு தொகுதி ஒதுக்கீடும் செய்து கொள்ளவில்லை, இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 25 இடங்களில் 19 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், இந்தத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் போட்டியிடுகின்றனர்.

இதில் மிசோரம் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் வேறுபட்டவை. கூட்டணி கட்சிகளாக இருந்தாலும், மிசோரமில் பாஜகவும், மிசோ தேசிய முன்னணியும் தனித்து போட்டியிடுகின்றன. இதேபோல் சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுக்கு எதிராக பாஜக களமிறங்குகிறது.

தேசிய மக்கள் கட்சி (NPP), நாகா மக்கள் முன்னணி (NPF) மற்றும் தேசிய ஜனநாயக முற்போக்கு முன்னணி (NDPP) ஆகியவற்றுடன் பாஜக தொகுதிப் பங்கீட்டுக்குள் வந்துள்ளது. அஸ்ஸாமில், அசோம் கண பரிஷத் (AGP) மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) ஆகிய கட்சிகளுடன் தனது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை பாஜக தொடர்ந்துள்ளது.

அஸ்ஸாமில் பா.ஜ.க.வுக்குப் பலம் அதிகம். இங்கு பாஜக 11 இடங்களில் போட்டியிடுகிறது. அசோம் கண பரிஷத் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் கட்சிகளுக்கு முறையே 2 மற்றும் 1 இடங்களை ஒதுக்கீடு செய்தது.

வடகிழக்கில் வலுவான நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி!
வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?

மேகாலயா முதல்வர் கொன்ராட் கே சங்மா வழிநடத்தும் என்பிபி, அருணாசலில் இரு இடங்களுக்கும் போட்டியிடாமல் பாஜகவை ஆதரிக்க முடிவு செய்ததும், பாஜகவும் மேகாலயத்தில் தேர்தல் போட்டியிலிருந்து விலகி என்பிபியை ஆதரிக்க முடிவு செய்தது. அந்த மாநிலத்தில் பாஜக என்பிபியை ஆதரிக்கிறது.

மணிப்பூரில் உள்ள புறநகர் மணிப்பூர் தொகுதிகளுக்கு பாஜக போட்டியிடாமல், என்.பி.எஃப்-ஐ ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அதேபோல், நாகாலாந்தில் ஒரே ஒரு இடத்தில் என்.டி.பி.பி. போட்டியிடும் நிலையில் பாஜக அங்கு போட்டியிடாமல் விலகியுள்ளது.

வடகிழக்கு பகுதியில் பாஜகவின் முகமாக திகழும் அஸ்ஸாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, அருணாசலில் பாஜகவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருக்கும் என்.பி.பி-யை பாராட்டினார்.

"எங்கள் கூட்டணிக்கு இடையே உள்ள இந்த இணையற்ற அர்ப்பணிப்பால், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றியை உறுதி செய்யும்" என்று சர்மா கூறினார். பல தொகுதிகளில் பாஜகவுடனான நேரடிப் போட்டி பெரும்பாலும் காங்கிரஸுடன் இருக்கும், சில தொகுதிகளில்தான் மற்ற கட்சிகள் போட்டியாக உள்ளன.

ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில், முதல் கட்டமாக 15 இடங்களில் அஸ்ஸாமில் 5 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயம் மற்றும் அருணாசலில் தலா இரண்டு இடங்களுக்கும் நாகாலாந்து, சிக்கிம், மிசோரம் மற்றும் திரிபுராவில் தலா ஒரு இடங்களுக்கும் என 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி மணிப்பூர் மற்றும் திரிபுராவில் மட்டுமே ஒருமித்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

காங்கிரஸ் மணிப்பூர் நகரப்பகுதி மற்றும் புறநகர் மணிப்பூர் ஆகிய இரு இடங்களிலும், திரிபுராவில் (திரிபுரா மேற்கு) ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது. மற்றொரு தொகுதியில் (திரிபுரா கிழக்கு) சிபிஎம் போட்டியிடுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பகுதியை ஆட்சி செய்த காங்கிரஸ், அஸ்ஸாமின் நாகோன் மற்றும் மேகாலயத்தின் ஷில்லாங் ஆகிய இரண்டு இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது.

ஜோர்ஹட் மற்றும் துப்ரி (இரண்டு அஸ்ஸாம்) மற்றும் உள் மணிப்பூர் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெரும் நம்பிக்கையுடன் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com