வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?

வேலூர் கோட்டையை திமுக தனதாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் வரும் மக்களவைத் தேர்தலின் நிலவரம் என்ன?
வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?

வேலூர், அதன் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு புகழ் பெற்றிருந்தாலும், மலைகள், காடுகள், பழமையான தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் போன்ற பலவற்றைக் கொண்ட தொல்பொருள் ஆய்வுக்கு ஏற்ற நகரமாகவும் உள்ளது.

இங்கு கணிசமான முஸ்லீம் மக்கள்தொகை இருப்பதால், நாட்டில் மத ரீதியாக பிரச்னை ஏற்படும் காலங்களில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் வழி காட்டக்கூடிய ஒரு இணக்கமான சமூக அமைப்பையும் கொண்டிருக்கிறது.

வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?
தோ்தல் களத்தில் ‘சின்ன’ பிரச்னை!

2024 மக்களவைத் தேர்தலில், இத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது, இதில் இரண்டு திராவிட கட்சிகளுடன் பாஜகவும் மோதுகிறது.

தொடக்கம் முதலே வேலூர் கோட்டையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது திமுக. இங்கு திமுக ஆதரவு வாக்காளர்கள் அதிகம். ஆனால், அதேவேளையில், வேலூரை பாஜக கடந்த இரண்டு வருடங்களாகக் கண்காணித்து, அதன் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வந்துள்ளதாம். தி.மு.க.வுக்கு இங்கு வலுவான வாக்காளர்கள் இருந்தபோதிலும், கடந்த காலங்களில் இத்தொகுதி ஒரு சில பிரிவுகளாகப் பிரிந்துபோயிருக்கிறது.

வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?
முக்கியத்துவத்தை இழக்கிறதா பல்லில்லாத புலி? வேண்டும் சீர்திருத்தம்!

கடந்த 1971, 2004, 2009, 2019 என நான்கு மக்களவைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்ற நிலையில், 2014ல் அதிமுக அத்தொகுதியை கைப்பற்றியிருந்தது. 1998 மற்றும் 1999ல் வெற்றிகள் மூலம் பாமகவும் தனது இருப்பை வேலூரில் பதிவு செய்திருந்தது. இம்முறை திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார், அதிமுகவின் டாக்டர் எஸ்.பசுபதி, பாஜகவின் ஏ.சி.சண்முகம் ஆகியோர் களம்காண்கிறார்கள்.

வேலூரில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் வாழ்கிறார்கள். அதேவேளையில், ஆரணியைச் சேர்ந்த வேலூர் முன்னாள் எம்.பி.யும் தொழிலதிபருமான ஏ.சி.சண்முகத்தின் பலத்தைக் கொண்டு இங்குள்ள இந்து வாக்காளர்களைக் கவர்வதே பாஜகவின் தேர்தல் உக்தி.

கடந்த ஆண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘வெல்வோம் வேலூர்’ (வேலூரில் வெற்றி) என்ற முழக்கத்துடன் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார். வேலூர் மாவட்டத்தில் பாஜகவின் அடித்தளம் பலம் இல்லாமல் இருந்தாலும், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் ஆதரவால் தேர்தல் களத்தை வெல்லலாம் என்று பாஜக நினைக்கிறது.

ஏற்கனவே, ஏ.சி. சண்முகம் கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலூரில் இருந்து போட்டியிட்டவர்தான், ஆனால் அவரால் இரண்டாம் இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. 2019 இல் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார்.

ஆனால், இந்த முறை வெற்றிக்கனியை ருசிபார்த்துவிடுவது என்ற இலட்சியத்தோடு, வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள், மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுகளை நடத்துவது என 2024 தேர்தலுக்கான தேர்தல் பணிகளை அவர் மிக முன்னதாகவே தொடங்கிவிட்டிருந்தார்.

வேலூர் தொகுதி பன்முகத்தன்மை கொண்டதாக இருந்தாலும் பாஜகவுக்கு இணக்கமாக இருப்பதைப் போலவே காட்சிகள் காட்டுகின்றன.

ஆனால், "வேலூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு வங்கியில் ஜாதி என்ற கணிதம் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது என்று ஓய்வு பெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியரும், வேலூர் இயக்கத்தின் தலைவருமான ராமு மணிவண்ணன் தெரிவித்தார்.

இங்கு முதலியார்கள், வன்னியர்கள், முஸ்லிம்கள் மிகப் பெரிய வாக்கு வங்கிகளாகக் கருதப்படுகிறார்கள். கதிர் ஆனந்த் மற்றும் பசுபதி ஆகியோர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்கள், ஏசி சண்முகம் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இந்தத் தொகுதியில் சண்முகம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார். 2014ல் பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்றதால் இம்முறை தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார் போல. இவர் கடந்த 1984ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் இவ்வாறு என்றால், திமுக வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான கதிர் ஆனந்த் மீது அங்கு அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இங்கு பிரசாரம் நடத்தும் திமுகவினர், கதிர் ஆனந்த் பற்றி பேசாமல், தமிழக முதல்வரின் திட்டங்கள் குறித்து மட்டுமே பேசி வாக்குக் கேட்கிறார்கள்.

இதுபோன்ற எதிர்மறை நடவடிக்கைகள் குறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், வாக்காளர்களின் அதிருப்திக்கு பயந்துதான், வேலூர் தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வழங்குமாறு உள்ளூர் தொண்டர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால், அதிமுக மற்றும் பாஜக பிரிந்ததால் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பிறந்ததால், திமுகவே நேரடியாக களம்காண்பதாகவும் கூறப்படுகிறது.

திமுகவுக்கு இங்கு அதிருப்தி ஏற்பட, எம்.பி. கதிர் ஆனந்த், தொகுதி நலத்திட்டங்களில் கவனம் செலுத்தவில்லை என்றும், தொகுதிப் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை என்றும் வாக்காளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

எனினும், வேலூர் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்தில் திமுகவே வென்றது. மேலும் சிறுபான்மை வாக்காளர்கள் மற்றும் தலித்துகள் மத்தியில் ஆதரவை ஒருங்கிணைக்கும் வகையில் திறமையான அடிமட்ட தொண்டர்களை திமுக வைத்திருக்கிறது.

வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?
கச்சத்தீவு விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

எனவே, வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் திமுகதான் ஒரே வழி என்று சிறுபான்மை வாக்காளர்கள் கருதலாம். அவர்கள் திமுக கூட்டணியை கட்சிக்காக மட்டுமே ஆதரிப்பார்கள், வேட்பாளருக்காக அல்ல என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் நிலை இவ்வாறிருக்க.. அதிமுகவின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், குடியுரிமை திருத்தச் சட்டம் வேலூர் வாக்காளர்களின் வேட்பாளர் தேர்வில் முன்னணியில் இருக்கலாம். இது அதிமுகவுக்கு சற்று சறுக்கலாக மாறலாம். மேலும், வேலூரில் அதிமுக வேட்பாளர் பிரபலமானவராகவும் இல்லை. முதலில், இங்கு ஒரு முஸ்லீம் வேட்பாளரைத்தான் நிறுத்த வேண்டும் என்று அதிமுக முயற்சித்தது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும், அதிமுகவுக்கு என முஸ்லிம் மக்களின் வாக்குகள் இருப்பதாகவும், தற்போது பாஜகவிலிருந்து விலகியதை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்கலாம் என்றும் நினைத்திருக்கிறது. அதிமுக நினைத்தது பலிக்குமா? என்பது வாக்காளர்களின் கை விரலில்தான் உள்ளது.

தொகுதியின் தேவை?

வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை, விமான நிலையம். அதன் பணிகள் மெத்தனமாக நடந்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர், காட்பாடிக்கு அதிக ரயில்கள் இயக்கப்பட வேண்டும், ஆம்பூர் ரயில் நிலையத்தில் அதிக ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கைகளில் ஒன்று.

தொழில்நுட்பப் பூங்காக்களை ஏற்படுத்தி வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும், பாலாறு ஆற்றை சீரமைக்க வேண்டும், தடுப்பணைகள் கட்டுதல் போன்றவையும் நீண்ட காலக் கோரிக்கையாகவே நீடிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com