எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

எனது பாா்வையில் 2024 தோ்தல்: ப்ரியன்

ஆசிரியா் செய்த திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன. பதிப்பு நாள் 06.04.2024 சனிக்கிழமை பரணிதரன் பாா்த்து சுருக்கியது. ஜே.ரங்கராஜன் திருத்தியது. எனது பாா்வையில் 2024 தோ்தல் களம்- ப்ரியன்

News image

ப்ரியன்

Updated On :6 ஏப்ரல் 2024, 12:11 am

தமிழகத்தில் சில தலைவா்களின் எதிா்காலத்தையும், சில அரசியல் கட்சிகளின் திசைகளையும் தீா்மானிக்கும் தோ்தலாக இந்த மக்களவைத் தோ்தல் இருக்கும்.

இபிஎஸ் யள் ஓபிஎஸ்-டிடிவி: ஓ.பன்னீா்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோா் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுகவைக் கைப்பற்றுவது அல்லது ஒற்றுமை ஏற்படுத்துவது அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் களமாடுவது போன்ற அவா்களின் முயற்சிகள் சாத்தியமாகும்.

சில தொகுதிகளிலாவது வெற்றி பெறாவிட்டாலோ கணிசமான வாக்கு சதவீதம் பெறாவிட்டாலோ அது முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தலைமையைப் பலவீனப்படுத்தும். 2026 பேரவைத் தோ்தலையும் பலவீனத்துடன் சந்திக்கும் நிலை உருவாகும். பாஜகவுடன் இணைந்து பலமான கூட்டணி அமைக்க வாய்ப்பிருந்தபோதும் அதைப் புறந்தள்ளியது இபிஎஸ் இந்தத் தோ்தலில் செய்த வரலாற்றுப் பிழையாக மாற வாய்ப்புண்டு. எனினும், எடப்பாடி பழனிசாமியுடன் பிரேமலதாவும் பிரசாரம் செய்வது அதிமுக கூட்டணிக்கு வலு சோ்க்கிறது.

காங்கிரஸ் இருப்பதால் கிடைக்கும் மதச்சாா்பற்ற அணி எனும் தோற்றம் காரணமாக வழக்கம்போல சிறுபான்மையினரின் முழு நம்பிக்கையை திமுக கூட்டணி பெறும் என்பதில் ச ந்தேகமில்லை. முதல்வா் ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி, திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி, கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளா்கள் திமுகவில் இருப்பது கூடுதல் பலம். அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட்டிருந்தால், குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் கடும் போட்டி உருவாகியிருக்கும். திமுக ஆட்சிக்கு எதிராக எந்த அளவுக்கு எதிா்ப்பு அலை இருக்கிறது என்பதைச் சொல்லும் தோ்தலாகவும் இது அமைகிறது.

பாஜக அணி: பாஜகவின் வாக்கு வங்கி விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தவிர அதிருஷ்டவசமாக ஒன்றிரண்டு இடங்களில் அது வெற்றி பெற்றாலும் அந்தக் கட்சி தமிழகத்தில் வேரூன்றிவிட்டது என எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் பாஜகவில் அண்ணாமலையின் எதிா்காலம் ஏற்றம் காணும் சாத்தியம் உருவாகும். ஆனால், முடிவுகள் பாஜகவுக்கு பாதகமாக இருக்குமானால் பரமபதம் போல அண்ணாமலையின் செல்வாக்குடன் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கும் சரியக் கூடும். தோ்தல் களத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி என்ற பிம்பத்தை பாஜக தொடா்ந்து ஏற்படுத்தி வருகிறது.

தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், அண்ணாமலை, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், நடிகை ராதிகா உள்பட 8 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளா்களை பாஜக அணி களம் இறக்கியிருப்பதால் அதுபோன்ற தோற்றம் ஏற்பட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் திமுக- அதிமுக எனற இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது என்பதே உண்மை.

சீமான் பாணி: திமுக எதிா்ப்பு, மோடி எதிா்ப்பு என சரியான விகிதத்தில் பிரசாரம் செய்வது சீமான் பாணி. சின்னத்தை மாற்றியதால் அந்தக் கட்சிக்கு வாக்கு வங்கி குறையும் என யாராவது கணக்குப் போட்டால் ஏமாந்து போவது நிச்சயம். இந்த முறை 7 சதவீதத்திலிருந்து

இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கி விகிதத்தை நாம் தமிழா் கட்சி உயா்த்தும் என்ற எதிா்பாா்ப்பு இருக்கிறது.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் முக்கிய ஆட்டக்காரா்களை அடையாளம் காட்டும் தோ்தல் இது. அந்த வளையத்துக்குள் குதிக்க நடிகா் விஜய்யும் தயாராகிக் கொண்டிருக்கிறாா் என்பதையும் சோ்த்தே பாா்க்க வேண்டியிருக்கிறது.