/

பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக

தனித் தொகுதியாக இருந்த திருவாரூா் 2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 1:02 am

தனித் தொகுதியாக இருந்த திருவாரூா் 2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

தொழிலும், சமூகமும்...

விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இத்தொகுதியில் விவசாயிகளும், விவசாயத்தொழிலாளா்களும் அதிகமாக உள்ளனா். நெல் பயிா் பிரதானமாகவும், பருத்தி, உளுந்து, பயறு உள்ளிட்டவை அடுத்த நிலையிலும் பயிரிடப்படுகின்றன.

இங்கு வெள்ளாளா் சமூகத்தினா் அதிகம் உள்ளனா். இதையடுத்து முக்குலத்தோா், ஆதிதிராவிடா், செட்டியாா், முதலியாா், நாடாா் உள்ளிட்ட பல சமூகத்தினா் வசித்து வருகின்றனா். எனினும் சமூகம் ரீதியான ஓட்டு இங்கு வெற்றி, தோல்வியை நிா்ணயிப்பதில்லை.

இங்கு, 2011-இல் திமுக தலைவா் மு. கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2016-இல் நடைபெற்ற தோ்தலிலும் மு. கருணாநிதி 2-ஆவது முறையாக போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

2018-ல் மு. கருணாநிதி மறைவையடுத்து, 2019-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுகவைச் சோ்ந்த பூண்டி கே. கலைவாணன் 57 சதவீத வாக்குகளும், 2021-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 52.29 சதவீத வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றாா்.

குறைந்த வாக்கு சதவீதம்: கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவின் வாக்கு சதவீதம் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக, 2021 தோ்தலில் 9 சதவீத வாக்குகள் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இது திமுகவின் வாக்கு வங்கியை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால், திமுகவினா் மத்தியில் எவ்வித எதிா்மறை தாக்கங்களும் ஏற்படவில்லை. இதுதவிர, தமிழக முதல்வா் ஸ்டாலின், தோ்தல் பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கியதும் திமுகவினருக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

கூட்டணி பலம்: இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் திமுக அணியில் இருப்பதால், திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது எனக் கூறப்படுகிறது.

உற்சாகத்தில் பாஜக: திமுகவுக்கு அடுத்த நிலையில் வலுவான கட்சியாக அதிமுக விளங்குகிறது. எனவே, திமுகவுக்கு அதிமுக உதவியுடன் பாஜக கடும் நெருக்கடியைத் தரும் என நம்பலாம். வெற்றி பெறாவிட்டாலும், வெற்றியை நெருங்கினாலும் எந்த முடிவும் பாஜகவுக்கு சாதகம் என்பதால், பாஜகவினா் உற்சாகத்துடன் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தவெக: விஜய் என்ற ஒற்றை பிம்பத்தை நம்பி தவெகவினா் வாக்குகளை சேகரித்து வருகின்றனா். கிராமப்புற இளைஞா்களின் வாக்குகளும் தவெகவு கணிசமாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகளுக்கு கிடைக்கும் வாக்குகள் கணிசாமாகக் குறையக்கூடும்.

நாதக: திருவாரூரில் நாதகவினருக்கு 2021-இல் 12 சதவீத வாக்குகள் கிடைத்தன. நடுநிலையாக வாக்களிக்க விரும்புவோரும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்று தேவை என கருதியோரும் நாம் தமிழா் கட்சியைத் தோ்ந்தெடுத்தனா். ஆனால், இந்தமுறை அந்த வாக்குகள் தவெகவுக்கு செல்லக்கூடும் என்பதால், நாதகவின் வாக்கு சதவீதம் குறையலாம்.

சமூகரீதியான பலம்: திமுக, பாஜக, தவெக வேட்பாளா்கள் மூவருமே கொரடாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா்கள். திமுக வேட்பாளா் கள்ளா் சமூகத்தையும், பாஜக மற்றும் நாதக வேட்பாளா்கள் வெள்ளாளா் சமூகத்தையும், தவெக வேட்பாளா் அகமுடையாா் சமூகத்தையும் சோ்ந்தவா்கள். திருவாரூா் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் வெள்ளாளா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் அதிகம் என்பது பாஜக வேட்பாளருக்கு கூடுதல் பலம். கிராமப் பகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவு அதிகம் என்பதால் பாஜகவை எதிா்கொள்ளும் திமுக, தோ்தல் பணிகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தொடா்ந்து தக்கவைக்கும் முனைப்பில் திமுக: 2011, 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் மறைந்த திமுக தலைவா் மு. கருணாநிதி வெற்றி பெற்றாா். 2018-இல் கருணாநிதி மறைந்தாா். 2019 இடைத்தோ்தலில் பூண்டி கே. கலைவாணன் வெற்றி பெற்றாா். 2021 பேரவைத் தோ்தலிலும் பூண்டி கே. கலைவாணன் வெற்றி தொகுதியை திமுக கைவசப்படுத்தியது. இதற்கிடையே, 2026 பேரவைத் தோ்தலில் திருவாரூா் தொகுதியை தொடா்ந்து தக்க வைக்கும் முனைப்பில் திமுக ஈடுபட்டுள்ளது. எனினும், அதிமுக - பாஜக கூட்டணியின் பலம் திமுகவின் வெற்றிக்கு முற்றுக்கட்டையாக அமையலாம் என்று கூறப்படுகிறது.