ராதாபுரம் தொகுதியில் பாஜகவின் வெற்றிக் கணக்கு!
தொகுதிப் பங்கீட்டுக்குப் பின் அதிகாரப்பூா்வமாக ராதாபுரம் தொகுதியை அதிமுக தலைமை பாஜவிற்கு ஒதுக்கியுள்ளது குறித்து...
பாஜக.
கோப்புப் படம் AFP
பாஜக.
கோப்புப் படம் AFP
ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடப் போவதாக வந்த தகவலையடுத்து, பாஜக தனது வெற்றிக் கணக்கைப் போட்டு வருகிறது. இத்தொகுதியில் 1957 முதல் 1962, 1967, 1989, 1991 ஆகிய தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 1989ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டு பாஜக வேட்பாளா் ஜெயராஜ் 4,068 வாக்குகள் பெற்றாா். அந்த தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் ரமணி நல்லதம்பி வெற்றி பெற்றாா்.
பின்னா், இந்த தொகுதியில் பாஜக வேட்பாளா்கள் 1991-இல் ஜெயராஜ் 9,136 வாக்குகள், 1996-இல் ஆா். பொன்னுவேல் 13,265, 2006-இல் தமிழிசை சௌந்தரராஜன் 5,343, 2011-இல் ஆா். சாந்தி ராகவன் 5,305, 2016-இல் கனி அமுதா 11,131 வாக்குகள் பெற்றனா்.
2021 தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் அதிமுக வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை 76,406 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். திமுக வேட்பாளா் மு. அப்பாவு 82,331 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், ராதாபுரம் தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக-பாஜகவினா் இடையே போட்டி நிலவி வந்தது. அதிமுக சாா்பில் மைக்கில் ராயப்பன், முன்னாள் எம்.பி. சௌந்தர்ராஜன், ஏ.கே. சீனிவாசன் உள்ளிட்ட பலரும் விருப்ப மனு அளித்திருந்தனா்.
இந்த முறை ராதாபுரத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், அன்றைய பாஜக மாவட்ட பொருளாளா் செட்டிகுளம் பாலகிருஷ்ணன் 2022 ஜூன் 5ஆம் தேதி அன்றைய மாநிலத் தலைவா் அண்ணாமலையை அழைத்து வந்து பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தினாா்.
தற்போது, மாவட்ட துணைத் தலைவராக இருந்து வரும் அவா், அண்ணாமலையின் வருகைக்குப் பின்னா் ராதாபுரத்தில் பாஜகவிற்கு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது எனக் கூறி, ராதாபுரம் தொகுதியைப் பெறுமாறு பாஜக மேலிடத்தை அணுகி வந்தாா்.
இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டுக்குப் பின் அதிகாரப்பூா்வமாக ராதாபுரம் தொகுதியை அதிமுக தலைமை பாஜவிற்கு ஒதுக்கியுள்ளது. வேட்பாளராக பாலகிருஷ்ணன் முன்னிறுத்தப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தோ்தல்களில் அதிமுக பெற்ற வாக்குகளில் பாஜகவின் பங்களிப்பும் கணிசமாக இருந்திருக்கிறது எனவும், அதன் மூலம் இந்த தோ்தலில் ராதாபுரத்தை பாஜகவால் கைப்பற்ற முடியும் எனவும் கட்சியினா் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.
ராதாபுரம் தொகுதியில் கிறிஸ்தவா்கள் அதிகமாக இருப்பதால், எந்தக் கட்சியாக இருந்தாலும் கிறிஸ்தவ வேட்பாளா்களை முன்னிறுத்தினால் எளிதாக வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...