வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தமிழ்நாட்டில் தாய், புதுவையில் மகன்! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் லாட்டரி குடும்பத்தினர்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினரைப் பற்றி...

News image

லீமா ரோஸ் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

எக்ஸ்.

Updated On :27 மார்ச் 2026, 12:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் குடும்பத்தினர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டுக்கு ஏப். 23 ஆம் தேதி அதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக ஏப். 9 ஆம் தேதி புதுச்சேரிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், தவெக, நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன.

அதேபோல, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ் - திமுகவின் இந்தியா கூட்டணியும் தனித்தனித்தே நேருக்கு நேர் மோதுகின்றன. புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், மீதமுள்ள 14 இடங்களில் பாஜக 10, அதிமுக 2, லஜக-2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மற்றும் மகன் ஜோஸ் சார்லஸ் இவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையில் களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக லாட்டரி மார்ட்டின் நிறுவனம், திமுகவுக்கு சுமார் ரூ. 509 கோடியையும், திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ. 542 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 100 கோடியையும் நன்கொடையாக வழங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தது.

லாட்டரி மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ், புதுச்சேரியில் சமீபத்தில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியைத் தொடங்கியிருந்தார்.

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இவரது கட்சிக்கு தர்பூசணி பழம் சின்னம் ஒதுக்கப்பட்டு காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதேவேளையில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியிருந்து விலகிய, மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், தனது மகனின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார். பின்னர், கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகி, பிப். 17 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த சில நாள்களிலேயே அவருக்கு மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இன்று காலை அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தற்போது அதிமுக வசமிருக்கும் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். கட்சியில் சேர்ந்த 40 நாள்களில் லீமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டிக்கிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் வெவ்வேறு மாநிலங்களில் ஒரே கூட்டணியில் போட்டிப் போட்டும் சூழலில், இதே குடும்பத்தைச் சேர்ந்த மார்ட்டினின் மருமகனும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா எந்தத் தொகுதியில் போட்டியிடுவார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Summary

The family of lottery tycoon Martin, who was embroiled in a controversy over electoral bonds, has been fielded on behalf of the National Democratic Alliance in the Tamil Nadu and Puducherry assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.