அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 பேர் கொண்ட பட்டியல் கொடுத்தால் மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 5 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. தலா 2 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட்(சிபிஐ) மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் (ஐயுஎம்எல்) ஆதரவை பெற தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் ஆகிய 4 கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து வியாழக்கிழமை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்க மு.க. ஸ்டாலினுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவுக்கு திமுக ஆதரவா?
தவெக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால் திமுகவின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுவை சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதனிடையே, அதிமுக ஆதரவு கேட்டதாகவும், அதுபற்றி மு.க. ஸ்டாலின் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் திமுக நிர்வாகி டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி இன்று நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநரை சந்தித்து பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கப் போகிறாரா? அதிமுகவுக்கு திமுக ஆதரவு கொடுத்ததா? விசிக, இடதுசாரிகள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள்? என்ற கேள்விகள் தமிழ்நாட்டில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Summary
Is Edappadi Palaniswami meeting the Governor today?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாற்காலியின் 2 கால்கள் மட்டுமே தவெகவுடையது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அரசு இல்லத்தை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி! ராயப்பேட்டையில் குடியேறினார்!
‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்யக் கூடாது’ - எடப்பாடி பழனிசாமி








