விருத்தாசலம்: தொகுதியை கைப்பற்றுமா தேமுதிக?

தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. தேமுதிக தனது அரசியல் முத்திரையை பதிக்கக் காரணமான தொகுதி என்பதால் தேமுதிகவினர் கூடுதல் விருப்பத்துடன் உள்ளனர்.
விருத்தாசலம்: தொகுதியை கைப்பற்றுமா தேமுதிக?
Published on
Updated on
2 min read

கடலூர் மாவட்டத்தின் மையப்பகுதியாக அமைந்துள்ளது விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதி. தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவையில் முக்கிய இடம் வகித்தாலும், தொழில் வளர்ச்சி இல்லாத பகுதியாகவே விளங்கி வருகிறது. விருத்தாசலம் நகராட்சியை முழுமையாகவும், சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கியதாகவும் இத்தொகுதி உள்ளது.

தமிழகத்தில் மிகப்பெரியதான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது. பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இத்தொகுதியில் அனைத்து மதத்தினரும் வசித்து வந்தபோதிலும் பெரும்பான்மையாக வன்னியர்களும், பட்டியலினத்தவர்களும் உள்ளனர். மற்றவர்கள் குறிப்பிட்ட அளவில் ஆங்காங்கே உள்ளனர். எனினும், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வன்னியர்களும் பட்டியலினத்தவர்களுமே இருக்கின்றனர்.

அரசியல் சூழல்

 

விருத்தாசலம் சட்டப்பேரவைத்தொகுதியைப் பொருத்தவரையில் சுயேட்சை, காங்கிரஸ், திமுக, அதிமுக, ஜனதாதளம், பாமக, தேமுதிக என்று பல்வேறு தரப்பினரும் வெற்றிப் பெற்ற தொகுதியாக உள்ளது. எனவே, இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் விருப்பத்துடன் கேட்டு வருவார்கள். அதிமுக, திமுக, பாமக பலம் வாய்ந்த கட்சிகளாக விளங்கி வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய தொகுதி என்பதால் தேமுதிகவிற்கும் பரவலான செல்வாக்கு உள்ளது.

தற்போதைய ஆளும்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த வி.டி.கலைச்செல்வனே சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளபோதிலும் அரசியலில் அணி மாறி,மாறிச் சென்றதால் தொகுதிக்கு போதுமான திட்டங்களை இவரால் திறமையுடன் எடுத்து வர முடியவில்லை. தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்த விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைத்தல், விருத்தாசலத்தில் பொறியியல் கல்லூரி ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. 

விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை
விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை

தொகுதி பிரச்னை

தமிழகத்திலேயே பீங்கான் தொடர்பான தொழில்நுட்பக் கல்லூரியும் அதுதொடர்பான தொழில்களும் சிறந்து விளங்கி வந்த நிலை தற்போது மாறி விட்டது. இக்கல்லூரியில் போதுமான தொழில்நுட்பங்களை புகுத்தாததால் கல்லூரியின் பாடத்திட்டம் மதிப்பிழந்தது. அதனால், பீங்கான் சார்ந்த தொழில்களும் நசிவடைந்தன. கரும்பு, உளுந்து ஆகியவை அதிகமாக பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் அதிகமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நகருக்குள் ஓடும் மணிமுக்தாற்றில் தடுப்பணை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே கிடப்பில் உள்ளது. இத்தொகுதியில் கனரகத் தொழிற்சாலை என்பது பெயர் சொல்லும் அளவிற்கு தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லை. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய தலைமையே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

வாய்ப்புள்ள கட்சிகள்

அதிமுக கூட்டணியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன், மேற்கு மாவட்டச் செயலாளரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஆ.அருண்மொழிதேவன் ஆகியோர் அதிமுகவில் தொகுதியை எதிர்பார்க்கின்றனர். மேலும், பாமக வலுவாக இருப்பதால் ஆர்.கோவிந்தசாமி, இ.கோ.சுரேஷ்குமார், கார்த்திகேயன் ஆகியோரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. தேமுதிக தனது அரசியல் முத்திரையை பதிக்கக் காரணமான தொகுதி என்பதால் தேமுதிகவினர் கூடுதல் விருப்பத்துடன் உள்ளனர். தமாகாவினரும் தொகுதியில் போட்டியிட விரும்புகின்றனர்.

திமுக கூட்டணியில் திமுகவின் முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் மகள் சங்கவி, இளைஞரணி கணேஷ்குமார், கடந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்ட தங்க.ஆனந்தன், தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏவும், திமுகவிற்கு மாறியவருமான பி.முத்துக்குமார் ஆகியோர் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியினரும் இத்தொகுதியில் போட்டியிடுவதில் விருப்பமாக உள்ளனர்.

இவ்வாறு கூட்டணிக் கட்சியினர் பலரும் விரும்பும் தொகுதியாகவே விருத்தாசலம் தொகுதி உள்ளது. இரு கூட்டணியிலும், கூட்டணிக் கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்றினால் இத்தொகுதியின் முடிவு மிகவும் சவாலானதாகவே இருக்கும். 

விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா, மணிமுக்தாறு
விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா, மணிமுக்தாறு

கடந்த தேர்தலில் வென்றவர்கள்

1957: எம்.செல்வராஜ் (சுயேட்சை) - 11,189
          ஜி.ராஜவேலு படையாட்சி (காங்.) - 10,350

1962: ஜி.பூவராகன் (காங்.) - 26,990
         எம்.செல்வராஜ் (திமுக) - 25,138

1967: ஜி.பூவராகன் (காங்.) - 42,230
          எம்.செல்வராஜ் (திமுக) - 33,363

1971: எம்.செல்வராஜ் (திமுக) - 42,132
          ஆர்.தியாகராஜன் (காங். (ஓ)) - 34,934

1977: சி.ராமநாதன் (அதிமுக) - 30,178
          கே.ராமலிங்கம் (திமுக) - 18,071

1980: ஆர்.தியாகராஜன் (காங்.) - 45,382
          சி.ராமநாதன் (அதிமுக) - 41,234

1984: ஆர். தியாகராஜன் (காங்.) - 53,731
          டி.ராஜவேலு (திமுக) -   35,609

1989: ஜி.பூவராகன் (ஜனதாதளம்) - 33,005
         ஆர்.டி.அரங்கநாதன் (அதிமுக (ஜெ)- 18,469

1991: ஆர்.டி.அரங்கநாதன் (அதிமுக) - 51,931
          ஏ.ராஜேந்திரன் என்ற தீரன் (பாமக) - 37,634

1996: குழந்தை தமிழரசன் (திமுக) - 49,103
         ஆர்.கோவிந்தசாமி (பாமக) -    42,218

2001: ஆர்.கோவிந்தசாமி ( பாமக)  - 68,905
          குழந்தை தமிழரசன் (திமுக) - 61,777

2006: ஏ.விஜயகாந்த் (தேமுதிக) - 61,337
          ஆர்.கோவிந்தசாமி (தேமுதிக) - 47,550

2011: பி.வி.பி.முத்துக்குமார் (தேமுதிக) - 72,902
         டி.நீதிராஜன் (காங்.) -  59,261

2016 தேர்தல்

1. வி.டி.கலைச்செல்வன் (அதிமுக) - 72,611
2. பாவாடை கோவிந்தசாமி (திமுக) - 58,834
3. பா.தமிழரசி (பாமக)  - 29,343
4. பி.முத்துக்குமார் (மநகூ) - 18,563

பதிவான மொத்த வாக்குகள்       - 1,85,125
வெற்றி வித்தியாசம் - 13,777

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com