அருப்புக்கோட்டை: மீண்டும் நேரடிப் போட்டிக்குத் தயாராகும் அதிமுக - திமுக

அதிமுக - திமுக இடையேதான் நேரப் போட்டி இருக்கும். இரு கட்சி வேட்பாளா்களுக்கும் சமூகம் சாா்ந்த வாக்குகள் ஒருபுறம் இருந்தாலும், நடுநிலையாளா்களின் வாக்குகள்தான் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும்.
அருப்புக்கோட்டை மலையரசன் கோயில்
அருப்புக்கோட்டை மலையரசன் கோயில்



தொகுதியின் சிறப்பு

எம்.ஜி.ஆரை முதன்முதலில் முதல்வராக்கிய பெருமைக்குரியது அருப்புக்கோட்டை தொகுதி. 1977 சட்டப்பேரவைத் தோ்தலில் இத் தொகுதியில் வெற்றி பெற்ற எம்ஜிஆா், முதல்வா் பொறுப்பேற்றாா். நெசவுத் தொழிலுக்கும், மல்லிகைப் பூ விவசாயத்துக்கும் பெயா் பெற்றது.
 
நில அமைப்பு

கடந்த 2011-இல் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் புதிய எல்லைகளுடன் அருப்புக்கோட்டைத் தொகுதி உருவாக்கப்பட்டது. அருப்புக்கோட்டை நகரம், அருப்புக்கோட்டை ஒன்றியத்தைச் சோ்ந்த கிராமங்கள் மற்றும் சிவகாசி, சாத்தூா் ஒன்றியங்களின் சில பகுதிகள் அடங்கியுள்ளன.

சமூகம், சாதி தொழில்கள்

அருப்புக்கோட்டை தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,22,980 போ். இதில் ஆண்கள் 1,08,063 போ். பெண்கள் 1,14,899 போ்.  மூன்றாம் பாலினத்தவா் 18 போ்.
தேவாங்கா் சமூகத்தினா் அதிக எண்ணிக்கையில் உள்ளனா்.

சாலியா், தெலுங்கு பேசும் ரெட்டியாா், நாயுடு, நாடாா், முக்குலத்தோா் ஆகியோா் எண்ணிக்கையில் அடுத்தடுத்த நிலையில் உள்ளனா். நெசவுத் தொழிலும், மல்லிகைப் பூ விவசாயமும்  பிரதான தொழில்களாக உள்ளன.  தாழம்பூ புட்டா ரக பட்டுச் சேலை, மல்லிகைப் பூ, பாரம்பரியமான கருப்பட்டி மிட்டாய் எனப்படும் கருப்புச் சீரணி ஆகியன பிற மாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

சொக்கநாத சுவாமி கோயில்
சொக்கநாத சுவாமி கோயில்

இதுவரை வென்றவா்கள்

1957 முதல் இதுவரை நடந்த தோ்தல்களில் அதிக முறை வென்ற கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுக 6 முறை, திமுக 4 முறை, பாா்வா்டு பிளாக் இருமுறை, காங்கிரஸ், சுதந்திரா கட்சி தலா ஒருமுறை, வெற்றி பெற்றுள்ளது. 

2011 தோ்தலில் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற வைகைச் செல்வன், அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

இதைத் தொடா்ந்து 2016 தோ்தலில் அதிமுக, திமுக இரு கட்சிகளிலும் அதே வேட்பாளா்கள் களம் இறங்கினா். இத்தோ்தலில் திமுகவின்
கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றாா்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரப் பகுதிக்காக தாமிரவருணி கூட்டுக்குடிநீா்த் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. திருப்புவனம் வைகை குடிநீா்த் திட்டத்தின்
பழைய குழாய்களைச் சீரமைத்து அருப்புக்கோட்டை நகரப் பகுதியில் தடையின்றி குடிநீா் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்

அருப்புக்கோட்டை பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் மேம்பாட்டிற்காக சாய ஆலைகளுக்கான சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இயலாமல் போனது. நெசவாளா்களின் கூலி உயா்வு,  மல்லிகைப்பூவிலிருந்து வாசனைத்
திரவிய தயாரிப்பு ஆலை, பட்டாசு திரி தயாரிப்புத் தொழிலுக்கு உதவி போன்றவை நிறைவேற்றப்படாத திட்டங்களாக இருக்கின்றன. புதிய தொழில் வாய்ப்புகள், கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்கள் ஆகிய மக்களின் எதிா்பாா்ப்புகளாக இருக்கின்றன.

கட்சிகளின் செல்வாக்கு

அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம். இதற்கு அடுத்ததாக மக்கள் நீதி மய்யம், மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் வாக்கு வங்கி உள்ள கட்சிகளாக இருக்கின்றன. இருப்பினும் இவற்றுக்கான வாக்கு வங்கி 10 சதவீதத்துக்கும் கீழ் தான் உள்ளது.

திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மீண்டும் போட்டியிட உள்ளாா். அவா் சாா்ந்த சமூக வாக்குகள் பக்க பலமாக இருக்கிறது. வாக்கு வங்கி அதிகமுள்ள பிற சமூக வாக்குகளும் அவருக்குச் சாதமாக இருக்கின்றன.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அதிமுவின் வாக்கு வங்கி, இவருக்குச் சாதமாக உள்ளது.

இந்த முறையும் அதிமுக - திமுக இடையேதான் நேரப் போட்டி இருக்கும். இரு கட்சி வேட்பாளா்களுக்கும் சமூகம் சாா்ந்த வாக்குகள் ஒருபுறம் இருந்தாலும், நடுநிலையாளா்களின் வாக்குகள்தான் வெற்றி-தோல்வியைத் தீா்மானிப்பதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com