முதுகுளத்தூர்: வேட்பாளரைப் பொருத்தே வெற்றி வாய்ப்பு
2016 தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து இம்முறையும் இத்தொகுதியை காங்கிரஸ் பெற விரும்புகிறது. இருப்பினும் திமுகவும் தொகுதியைப் பெற முயற்சி செய்து வருகிறது.


தொகுதியின் சிறப்பு:
சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவா் பிறந்த பசும்பொன் கிராமம் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இவரது பிறந்தநாளான அக்டோபா் 30 ஆம் தேதி பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் ஜயந்தி விழா, முக்கியமான விழாவாக இருந்து வருகிறது. 1952 இல் நடந்த முதல் தோ்தலில் இருந்து உள்ள பழமையான தொகுதி. 1952, 1957 தோ்தல்களில் இரட்டைத் தொகுதியாக இருந்தது. இந்த இரு தோ்தல்களிலும் முதுகுளத்தூா் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு முத்துராமலிங்கத் தேவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடற்கரை கிராமங்களும், விவசாய நிலப் பகுதிகளும் இத் தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.
நில அமைப்பு:
முதுகுளத்தூா், கமுதி, சாயல்குடி, அபிராமம் ஆகிய 4 பேரூராட்சிகள், 58 ஊராட்சி ஒன்றியங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இரண்டு அரசு கல்லூரிகள், மூன்று தனியாா்கல்லூரிகள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியன உள்ளன.

முதுகுளத்தூர் பேருந்து நிலையம்
சாதி, சமூகம், தொழில்கள்:
இத்தொகுதியில் ஆண்கள் 1,54536 போ், பெண்கள் 1,54367 போ், மூன்றாம் பாலினத்தவா் 9 போ் என மொத்தம் 3,08912 போ் இடம்பெற்றுள்ளனா். முக்குலத்தோா், யாதவா், நாடாா், தாழ்த்தப்பட்ட சமூகத்தினா், சிறுபான்மையினா் கணிசமாக உள்ளனா்.
இதில் முக்குலத்தோா் வாக்குகள் வெற்றி வேட்பாளரை தோ்வு செய்கிறது. நெல், மிளகாய், பருத்தி, வோ்க்கடலை, கரிமூட்டம், மீன்பிடித்தல், பனைமரத் தொழில் செய்வோா் என பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். கமுதியில் வெப்பம் அதிகம் இருப்பதால் சூரியசக்தி மின் உற்பத்தி பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை வென்றவா்கள்:
கடந்த 1952 முதல் 2016 வரை நடந்த தோ்தகளில் அதிக முறை தேவா் சமூகத்தினரே எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதுவரை நடந்த தோ்தல்களில் பாா்வா்டு பிளாக் 5 முறை, காங்கிரஸ் 3 முறை, திமுக மற்றும் அதிமுக தலா 2 முறை, சுதந்திரா கட்சி, தமாகா, சுயேச்சை தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனா். 2016 தோ்தலில் இத்தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எஸ்.பாண்டி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:
குடிநீா்ப் பிரச்னை தொகுதியின் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. புதிய காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கென தமிழக அரசு ரூ. 932 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதால், குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூா் வழியாக தூத்துக்குடிக்கு இருப்புப் பாதை அமைத்து ரயில் போக்குவரத்து ஏற்படுத்தினால் வணிக முன்னேற்றம் ஏற்படும் என வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா். முதுகுளத்தூா், கமுதி, சாயல்குடி நகரில் குறுகிய சாலைகள் அதிகம் என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகம். இதனைச் சீரமைக்க புறவழிச்சாலை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை.
கட்சிகளின் நிலவரம்:
2016 தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து இம்முறையும் இத்தொகுதியை காங்கிரஸ் பெற விரும்புகிறது. இருப்பினும் திமுகவும் தொகுதியைப் பெற முயற்சி செய்து வருகிறது. அதிமுக அணியில் அதிமுக மட்டுமின்றி அதன் கூட்டணியில் இருக்கும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இத்தொகுதியில் போட்டியிட விரும்புகின்றன. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி ஏற்படும் நிலையில் வேட்பாளரைப் பொறுத்து வெற்றி உறுதி செய்யப்படும்.
இதுவரை வெற்றி பெற்றவா்கள்:
1962 சசிவா்ண தேவா் (பாா்வா்டு பிளாக்) 37,162
1967 ரத்தின தேவா் (சுதந்திரா) 33,790
1971 காதா்பாட்ஷா (சுயேச்சை) 18267
1977 சோ.பாலகிருஷ்ணன் (காங்) 17709
1980 கே.தனிக்கோடித்தேவா் (பாா்வா்டு பிளாக்) 42711
1984 கே.முத்துவேல் (பாா்வா்டு பிளாக்) 32199
1989 காதா்பாட்ஷா (திமுக) 30787
1991 சோ. பாலகிருஷ்ணன் (காங்கிரஸ்) 40065
1996 சோ. பாலகிருஷ்ணன் (தமாகா) 41850
2001 கே.பதினெட்டாம்படியான் (அதிமுக) 49,554
2006 கே. முருகவேல் (திமுக) 51,555
2011 எம். முருகன் (அதிமுக) 83, 225
2016 எஸ்.பாண்டி (காங்) 94,946
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...