திட்டக்குடி: தொகுதியை எதிர்பார்க்கும் திமுக

இத்தொகுதியைப் பொருத்தவரையில் கலவையாக அனைத்துக் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக, திமுக, பாமக, விசிக ஆகிய கட்சிகள் வலுவாக உள்ளன.
திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தின் முகப்புத் தோற்றம்
திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தின் முகப்புத் தோற்றம்
Published on
Updated on
2 min read

தொகுதியின் சிறப்புகள்

கடலூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக அமைந்துள்ள திட்டக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பேரூராட்சி, கிராமப் பகுதிகளை மட்டுமே முழுமையாகக் கொண்டது. இத்தொகுதியில் மானாவாரி பயிராக கம்பு, மக்காச்சோளம் ஆகியவை அதிகமாக பயிரிடப்படுகிறது. வெலிங்டன் நீர்த்தேக்கம் மூலமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. திருச்சி-சென்னை நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ளதால் அதிகமானவர்கள் பிழைப்பிற்காக சென்னைக்குச் சென்றுள்ளனர். மேலும், வெளிநாடுகளுக்கும் சர்வ சாதாரணமாக வேலைக்குச் சென்று வருபவர்களைக் காண முடியும். இதனால், புலம்பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்ட தொகுதி.

சமூக அமைப்பு முறையில் தாழ்த்தப்பட்டவர்கள், வன்னியர்கள் அதிமாக உள்ளனர். முதலியார் சமூகத்தினர் பேரூராட்சிப் பகுதிகளில் காணப்படுகின்றனர்.

இத்தொகுதியானது பல்வேறு முறை பெயர் மாற்றங்களை சந்தித்துள்ளது. முதலில் 1957 ஆம் ஆண்டுகளில் நல்லூர் தொகுதியாகவும், 1967 முதல் மங்களூர் தொகுதியாகவும் இருந்து வந்தது. 2011 ஆம் ஆண்டு முதல் திட்டக்குடி தனித் தொகுதியாக அழைக்கப்பட்டு வருகிறது. இத்தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக திமுகவின் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.வெ.கணேசன் உள்ளார்.

திட்டக்குடி பேருந்து நிலையத்தின் முகப்பு
திட்டக்குடி பேருந்து நிலையத்தின் முகப்பு

பிரச்னைகள்

தொகுதியின் தலைமையிடமான திட்டக்குடி பேருந்து நிலையம் முழுமையாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. தொலைதூரங்களுக்கு திட்டக்குடி வழியாகச் செல்பவர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. அதேபோன்று, கீரனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுண்ணாம்புப் பாறைகள் அதிகமாக உள்ளதால் அப்பகுதி குடிநீரால் ஏராளமானவர்களுக்கு கிட்னியில் கல் என்ற பாதிப்பு உள்ளது. எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் ஆக்கிரமிப்பு இருப்பதால் அதன் கரை பலவீனமடைந்து விட்டது. இதனை பகுதி, பகுதியாக சரிசெய்வதற்கு பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் கரை உள்வாங்கும் நிகழ்வே நடக்கிறது. தொகுதிக்குள்பட்ட பெண்ணாடத்தில் அம்பிகா சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. தற்போது இந்த ஆலை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் கடுமையான பாதிப்பினை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு பிரச்னைகள் இருந்தபோதிலும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் தான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன் என்பதால் ஆளும்கட்சியிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும், திமுக ஆட்சி அமைந்தால் இப்பிரச்னை தீர்க்கப்படும் என்றும் கூறி வருகிறார்.

தொகுதியில் வென்றவர்கள்

1989: சி.வெ.கணேசன் (திமுக) - 39,831
          கே.ராமலிங்கம் (அதிமுக (ஜெ) - 19,072

1991: எஸ்.புரட்சி மணி (காங்.) - 62,302
          சி.வெ.கணேசன் (திமுக) - 26,549

1996: எஸ்.புரட்சிமணி (தமாகா) - 50,908
          வி.எம்.எஸ்.சரவணகுமார் (காங்,.) - 31,620

2001:  இரா.திருமாவளவன் (திமுக ) - 64,627
           எஸ்.புரட்சி மணி   (தமாகா)   - 62,772

2006: கே.செல்வம் (விசிக)  - 62,217
         சி.வெ.கணேசன் (திமுக) - 53,303

2011: க.தமிழழகன் (தேமுதிக) - 61,897
         எம்.சிந்தனைச் செல்வன் (விசிக) - 49,255

2016: சி.வெ.கணேசன் (திமுக) - 65,139
         பெ.அய்யாசாமி (அதிமுக) - 62,927
         சபா.சசிகுமார் (பாமக) - 11,438
         அர்ச்சுணன் (மநகூ) - 14,657

         பதிவான மொத்த வாக்குகள் - 2,06,061
         வெற்றி வித்தியாசம் - 2,212.

போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்

இத்தொகுதியைப் பொருத்தவரையில் கலவையாக அனைத்துக் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக, திமுக, பாமக, விசிக ஆகிய கட்சிகள் வலுவாக உள்ளன. எனவே, கூட்டணியைப் பொறுத்தும், வேட்பாளர்கள் அறிவிப்பைப் பொறுத்துமே தொகுயின் நிலவரம் மாறுபடும்.

அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் பொன்னேரி பத்மாவதி போட்டியிட விரும்புகிறார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவில் தடா.பெரியசாமி காய் நகர்த்தி வருகிறார். கூட்டணி ஒதுக்கீட்டில் பாமகவிற்கும் தொகுதி செல்லக்கூடும். தமாகா ஏற்கனவே வெற்றி பெற்றிருப்பதால் தமாகாவும், தேமுதிகவும் இத்தொகுதியை தங்களது தேர்வுப் பட்டியலில் வைத்துள்ளன.

திமுக கூட்டணியைப் பொருத்தவரையில் திமுகவின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான சி.வெ.கணேசனே மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. பாவாடை.கோவிந்தசாமியும் போட்டியில் உள்ளார். விசிக, காங்கிரஸ் கட்சியினரும் தொகுதி ஒதுக்கீட்டில் கிடைத்தால் போட்டியிடுவதற்கு விருப்பமாகவே உள்ளனர்.

திட்டக்குடி தொகுதியில் மொத்தம் 2,18,971 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-1,07,303 பேர், பெண்கள்-1,11,659 பேர், இதரர்-9 பேர்.

தற்போதைய கரோனா தீநுண்மி பரவல் காலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் தொகுதிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், சாலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், போதுமான குடிநீர் வசதி, வெலிங்டன் நீர்த்தேக்கம் பராமரிப்பு, விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் வேட்பாளருக்கே தொகுதி மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது கண்கூடானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com