கோவை வடக்கு: தொகுதியைப் பெற கூட்டணி கட்சிகளுக்குள் போட்டி

கோவை வடக்கு தொகுதியில் தொடர்ந்து 2 முறை அதிமுக வெற்றி பெற்றிருப்பதால் இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட அதிமுக விரும்புகிறது. கூட்டணிக் கட்சியான பாஜகவும் இந்தத் தொகுதியை எதிர்பார்க்கிறது.
மருதமலை
மருதமலை

கோவை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி என்ற பெயரில் கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தேர்தலை சந்தித்த இந்தத் தொகுதி, மறு சீரமைப்புக்கு பிறகு கோவை வடக்கு தொகுதியாக அறிவிக்கப்பட்டு 2011 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. 

தொகுதியில் இடம் பெற்றுள்ள பகுதிகள்

கோவை வடக்கு வட்டம் (பகுதி) -வீரகேரளம் (பேரூராட்சி) கோவை தெற்கு வட்டம் (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி), மருதமலை, கல்வீரம்பாளையம்.

கோவை (மாநகராட்சி) வார்டு எண் 57 முதல் 72 வரை.

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,69,287
பெண்கள் - 1,66,979
மூன்றாம் பாலினத்தவர் - 38
மொத்தம் - 3,36,304

தொழில், சமூக நிலவரம்

கோவை வடக்கு தொகுதியில் சிறு, குறு தொழிற்சாலைகள் ஏராளமான அளவில் உள்ளன. லேத் பட்டறைகள்,  பவுண்டரிகள், என்ஜினீயரிங் நிறுவனங்கள், கிரைண்டர், பம்ப்செட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் போன்ற கல்வி நிறுவனங்கள், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இந்த தொகுதியில் உள்ளன. கொங்கு வேளாள கவுண்டர்கள், நாயுடுகள், போயர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், வெளிமாவட்ட, வெளிமாநிலத்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர்.

கடந்த தேர்தல்கள்

கோவை கிழக்கு சட்டமன்றத் தொகுதியாக இருந்தபோது இந்தத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 14 ஆண்டுகள் தனது கைவசம் வைத்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ரமணி கடந்த 1977, 1980, 1984, 1989 தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் வி.கே.லட்சுமணன் 1991, 1996, 2001ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ், த.மா.கா. சார்பில் வெற்றி பெற்றிருந்தார். 2006 தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில்தான் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்றது.

வடக்கு தொகுதியாக மாறிய பிறகு நடைபெற்றுள்ள இரண்டு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி.மலரவன், திமுகவின் வீர கோபாலனை 40,098 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதைத் தொடர்ந்து 2016 இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் மீனா லோகுவை 7,724 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கணபதி பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆவாரம்பாளையம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாப்பநாயக்கன்புதூரில் நலவாழ்வு மையம்  அமைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் 7 ஆவது படைவீடாகக் கருதப்படும் மருதமலைக்கு மின் தூக்கி அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மருதமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணபதி சாலையில் டெக்ஸ்டூல் பாலம் முதல் சூரியா மருத்துவமனை வரை ரூ.38 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வீரகேரளம் - சிறுவாணி சாலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொம்மண்ணம்பாளையத்தில் எரியூட்டும் மயானம் அமைக்கப்பட்டுள்ளது.  வடவள்ளியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதைத் தவிர தொகுதி முழுவதிலும் பல்வேறு இடங்களில் பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

தீர்க்கப்படாத மக்களின் பிரச்னைகள்

கோவை வடக்கு தொகுதியைப் பொறுத்தவரை போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, மருதமலை சாலை என முக்கியச் சாலைகள் அனைத்துமே அகலப்படுத்தப்படாமலும், தேவையான இடங்களில் மேம்பாலங்கள் இல்லாமலும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தினசரி பிரச்னையாகி இருக்கிறது.

மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை வாகனங்கள் எளிதில் வந்து செல்லக் கூடிய அளவில் வேறு பெரிய இடத்துக்கு மாற்ற வேண்டும், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இந்தத் தொகுதி வழியாகச் செல்லும் சங்கனூர் பள்ளத்தை தூர்வாரி அதன் மீது வாகன நிறுத்தம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்கின்றனர் தொகுதி மக்கள்.

தொழில் வளர்ச்சியை மேம்படுத்த 10 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைத்துத் தர வேண்டும், மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது இங்குள்ள குறுந்தொழில் முனைவோர்கள் கோரிக்கையாக உள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் பிரச்னைகளுக்கு இறுதித் தீர்வு காணப்படாதது அப்பகுதி விவசாயிகளுக்கு அதிருப்தி அளித்திருக்கிறது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

வடக்கு தொகுதியில் தொடர்ந்து 2 முறை அதிமுக வெற்றி பெற்றிருப்பதால் இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட அதிமுக விரும்புகிறது. தற்போதைய எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார், புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் வாய்ப்பு கேட்டிருக்கின்றனர். அதேநேரம் அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜகவும் இந்தத் தொகுதியை எதிர்பார்க்கிறது.

கட்சியின் மாநிலப் பொருளாளர் ஜி.கே.செல்வகுமார் இந்தத் தொகுதியை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த தேர்தலில் 7 ஆயிரம் வாக்குகளில் வாய்ப்பு தவறிப்போனதால் இந்த முறை வெற்றிபெற வாய்ப்பு இருக்கும் என்பதால் திமுகவிலும் வடக்கு தொகுதிக்கு கடும் போட்டி நடைபெறுகிறது.

கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த மீனா லோகு, சண்முகசுந்தரம், சாய்பாபா காலனி ரவி உள்ளிட்ட 12 பேர்கள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் திமுகவின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலர் கார்த்திகேய சேனாதிபதியும் இருப்பதாகத் தெரிகிறது.

அதேநேரம் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் இருப்பதாலும், வடக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதாலும் அக்கட்சிக்கு விருப்பமானத் தொகுதிகளில் ஒன்றாக கோவை வடக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com