

தொகுதியின் சிறப்பு: காவிரி ஆறு கடந்து செல்லும் எடப்பாடி பகுதி தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. காவிரி ஆற்றின் கரையோரப் பகுதி என்பதால் வாழை, தென்னை, கரும்பு, நெல், மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு என பசுமை போர்த்திக் காணப்படுகிறது. வாரத்துக்கு இரு முறை நடைபெறும் கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் 89 ஆண்டுகால வரலாறு உடையது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து பருத்தி விவசாயிகளும், வியாபாரிகளும் இங்கு தான் பருத்தி வணிகம் செய்கின்றனர். நங்கவள்ளி, ஜலகண்டபுரம், எடப்பாடி ஆகிய பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், புடவைகள், துண்டுகள், வேட்டிகள் நெய்யும் தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இருப்பாளி, வனவாசி ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பதநீர் இறக்கி கருப்பட்டி வெல்லம், பனைவெல்லம் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான பூலாம்பட்டி படகுத் துறை இந்தத் தொகுதியில்தான் உள்ளது. இங்குள்ள காவிரி தடுப்பணையில் விசைப்படகு சவாரி செய்வது பிரபலமானதாகும்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் தொகுதி என்பதால் தமிழகமே உற்றுநோக்கும் முதன்மைத் தொகுதியாக எடப்பாடி உருவெடுத்துள்ளது.
வாக்காளர்கள் விவரம்:
ஆண்கள்: 1,44,757
பெண்கள்: 1,39,597
மூன்றாம் பாலினம்: 24
மொத்தம்: 2,84,378
சமூக நிலவரம்:
இத்தொகுதியில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். வெள்ளாளக் கவுண்டர்கள், பட்டியல் இனத்தவர் என பல ஜாதி மக்கள் வசித்து வருகின்றனர். எடப்பாடி தொகுதியில் வன்னியர்கள் ஆதிக்கம் உள்ளதால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.
இதுவரை வென்றவர்கள்:
1951: எஸ்.அர்த்தனாரீசுவர கவுண்டர் (காங்கிரஸ்) 15,368 வெற்றி
எஸ். மாரிமுத்து கவுண்டர் (தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி) 11,280
1967: எ. ஆறுமுகம் (திமுக) 39,935 வெற்றி
கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டர் (காங்கிரஸ்) 30,593
1971: எ. ஆறுமுகம் (திமுக) 35,638 வெற்றி
டி. நடராஜன் (ஸ்தாபன காங்கிரஸ்) 29,485
1977: ஐ.கணேசன் (அதிமுக) 31,063 வெற்றி
டி. நடராஜன் (காங்கிரஸ்) 24,256
1980: ஐ. கணேசன் (அதிமுக) 37,978 வெற்றி
டி. நடராஜன் (சுயேச்சை) 32,159
1984: கோவிந்தசாமி (காங்கிரஸ்) 68,583 வெற்றி
பி. ஆறுமுகம் (திமுக) 27,860
1989: எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக -ஜெ அணி) 30,765 வெற்றி
எல். பழனிசாமி (திமுக) 29,401
1991: எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) 72,379 வெற்றி
பி. கொழந்தா கவுண்டர் (பாமக) 31,113
1996: ஐ.கணேசன் (பாமக) 49,465 வெற்றி
பி.எ.முருகேசன் (திமுக) 40,273
2001: ஐ. கணேசன் (பாமக) 74,375 வெற்றி
எ.கந்தசாமி (திமுக) 43,564
2006: வி.காவேரி (பாமக) 76,027 வெற்றி
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) 69,680
2011: எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக) 1,01,4586 வெற்றி
மு.கார்த்திக் (பாமக) 69,848
2016: எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக) 98,703 வெற்றி
ந.அண்ணாதுரை (பாமக) 56,681.
அதிமுகவின் கோட்டை:
சேலம் நகரத்தில் இருந்து சுமார் 55 கி.மீ. தொலைவில் எடப்பாடி அருகே காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சிறு கிராமமான சிலுவம்பாளையத்தில் பிறந்தவர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 2021 தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2020 டிச.19-ஆம் தேதி எடப்பாடி தொகுதி, பெரியசோரகையில் சென்றாயப் பெருமாள் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ""எடப்பாடி தொகுதியில் 1977-க்குப் பிறகு 43 ஆண்டுகளாக திமுக ஒருமுறைகூட வெற்றி பெறவில்லை. எடப்பாடி எஃகு கோட்டை; இங்கு அதிமுகவை வீழ்த்த முடியாது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்போம்'' என திமுகவுக்கு சவால் விடுத்தார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த மாவட்டத்தை மையப்படுத்தி திமுக எம்.பி. கனிமொழி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக சார்பில் எடப்பாடி கே.பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 1996, 2006-இல் இத்தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:
மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி தொகுதிகளுக்கு இடையே நங்கவள்ளியில் ரூ. 58 கோடி மதிப்பீட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தங்காயூர் பகுதியில் புதிய அரசு கலைக்கல்லூரி , எட்டிக்குட்டைமேட்டில் புதிய கல்வியியல் கல்லூரி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், தொழில் சிறக்க கொங்கணாபுரம் அருகே சிட்கோ தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் என மூன்று ஒன்றியங்களிலும் மாதிரிப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எடப்பாடியில் ரூ. 4 கோடியில் கூடுதல் மருத்துவமனைக் கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளதோடு, சுமார் ரூ. 4.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் அளித்துள்ளதால், சிறப்பான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாகச் செயல்படுகிறது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைக்கான கோட்ட அலுவலகம் எடப்பாடியில் உருவாக்கப்பட்டுள்ளது. எடப்பாடியில் மாவட்டக் கல்வி அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. மேச்சேரி- நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ. 158 கோடி மதிப்பீட்டில் அரசால் நிறைவேற்றப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்சாரத் துறை தனிக்கோட்டம், புதிய அரசு கருவூலம், கொங்கணாபுரம் பகுதியில் புதிய காவல் நிலையம், புதிய பேருந்து நிலையம், எடப்பாடியில் புதிய நகராட்சி கட்டடம், புதிய உரிமையில் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
எடப்பாடி வாரசந்தை அருகில், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பு, வீடில்லாதோர் பயனடையும் வகையில், ஆலச்சம்பாளைம் பகுதயில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 450 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், வெள்ளரிவெள்ளி பகுதியில், விவசாயிகள் பயனடையும் வகையில் புதிய வேளாண் கிடங்குகள், எடப்பாடி நகராட்சிப் பகுதிக்கென தனி குடிநீர்த் திட்டம், தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு மேம்படுத்தப்பட்ட சாலைகள், புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையங்கள், அம்மா விளையாட்டு பூங்காக்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் கழிவு நீர் அகற்றும் அமைப்புகள் உள்ளிட்ட பல திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
11 கி.மீ. தூரம் கொண்ட எடப்பாடி புறவட்டச் சாலை, சரபங்கா நதியின் மீது கட்டப்பட்ட புதிய மேம்பாலங்கள், எடப்பாடி பேருந்து நிலையம் அருகில், அறநிலைத்துறை சார்பில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம், கோனேரிப்பட்டி, சமுத்திரம், பக்கநாடு உள்ளிட்ட பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் கீழ் ரூ. 565 கோடியில் 100 வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தில் எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட ஏரிகளும் பயன்பெறுகின்றன. வறண்ட ஏரியில் நீர் நிரப்பும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், தொகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிறைவேறாத கோரிக்கைகள்:
மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும்போது பாதுகாப்புக்காக பூலாம்பட்டி- நெரிஞ்சிப்பேட்டை இடையே படகுப் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் அந்தப் பகுதியில் காவிரிக்கரையில் உள்ள 10 கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றித் துண்டிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் கிராம மக்கள் எடப்பாடி, சேலம், ஈரோடு என முக்கிய நகரங்களின் தொடர்பின்றித் தவிக்க வேண்டியுள்ளது. அதற்குத் தீர்வாக காவிரியின் குறுக்கே பூலாம்பட்டி அருகே பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
மேலும் தலைவாசல் பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு காவிரியில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுசெல்ல, பணிகள் இந்தத் தொகுதியில் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்கு விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்க எடப்பாடி தொகுதி மக்கள் ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல, விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய நிறுவனங்களின் எண்ணெய்க் குழாய்கள் அமைக்கவும், உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கவும் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஜவுளிப் பூங்கா அமைத்து விசைத்தறித் தொழிலை மேம்படுத்திட வேண்டும். எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து, அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர், தினக்கூலிகளாக, ஈரோடு, பெருந்துறை, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவரும் நிலையில், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். எடப்பாடி வழியாக, காவிரி ஆற்றைக் கடந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்றுவரும் வகையில் புதிய மாநிலச் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில எதிர்பார்ப்புகள் நிலுவையில் உள்ளன.
அரசியல் நிலவரம்:
எடப்பாடி தொகுதியைப் பொருத்தவரை அதிமுக ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக மூன்று முறையும், திமுக இரண்டு முறையும், காங்கிரஸ் இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் களமிறங்கினார்; 98,703 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவின் வேட்பாளர் அண்ணாதுரை 56,681 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாமிடம் பிடித்தார்.
திமுகவைப் பொருத்த வரையில் சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, எடப்பாடி தொகுதியில் அடித்தட்டு மக்கள் வரை சென்று கட்சியின் செல்வாக்கை உயர்த்தி வருகிறார்.
வரும் தேர்தலிலும் முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதாக அதிமுக அறிவித்துள்ளது. முதல்வரை எதிர்த்துப் போட்டியிடக் கூடிய வேட்பாளரை திமுக கவனமாகத் தேர்வு செய்து வருகிறது. அந்தவகையில், மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தில் ஒருவர் களம் இறக்கப்படலாம் என்றும், டி.எம்.செல்வகணபதியின் மனைவி நிறுத்தப்படலாம் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.
எடப்பாடி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை திறம்படச் செயல்படுத்தியுள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் எம்.எல்.ஏ.வாகி அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை உறுதிப்படுத்துவாரா என்பதை தேர்தல் முடிவுகளில் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.