குன்னூர்: திமுக 9 ஆவது வெற்றியைப் பதிவு செய்யுமா?

படகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குன்னூர் தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 
உதகை - குன்னூர் மலை ரயில்
உதகை - குன்னூர் மலை ரயில்

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள மற்றொரு தொகுதி குன்னூர். மாவட்டத்தின் பொருளாதார முக்கியத்துவம் கொண்டுள்ள பகுதியாக உள்ள குன்னூரில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள், ராணுவப் பயிற்சி மையம் போன்றவை அமைந்துள்ளன.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்

கோத்தகிரி வட்டம், குன்னூர் வட்டம் (பகுதி), எட்டப்பள்ளி, பர்லியார், குன்னூர், மேலூர் கிராமங்கள், அரவங்காடு (டவுன்ஷிப்), வெலிங்கடன் (கண்டோன்மெண்ட் போர்டு), குன்னூர் (நகராட்சி), ஹப்பதலா (சென்சஸ் டவுன்), அதிகரட்டி (பேரூராட்சி), உலிக்கல் (பேரூராட்சி).

சமூக, பொருளாதார நிலவரம்

குன்னூர் தொகுதியில் தேயிலை சாகுபடி முக்கியத் தொழிலாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கொய்மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தத் தொகுதி மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

குன்னூர்
குன்னூர்

எல்லைப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையம், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளிட்டவைகளும் இந்த தொகுதியில்தான் உள்ளன. படகர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் வசிக்கின்றனர்.
 
வாக்காளர் விவரம்

ஆண்கள் - 89,052, பெண்கள் - 97,424, மூன்றாம் பாலினம் - 3, மொத்தம் - 1,86,479.

கடந்த தேர்தல்கள்

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி 1957 ஆம் ஆண்டு உருவானது. இந்தத் தொகுதியில் இதுவரை திமுக 8 முறையும், அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2016 தேர்தலில் அதிமுகவைச் சார்ந்த ஆ.ராமு என்ற சந்திராமு வெற்றி பெற்றார்.   61,650 வாக்குகளை பெற்ற அதிமுக வேட்பாளர் 3,690 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் பா.முபாரக்கைத் தோற்கடித்தார்.

1957 -  ஜெ. மாதே கவுடர் -  காங்கிரஸ்
1962 - ஜெ. மாதே கவுடர் -  காங்கிரஸ்    
1967 - பி. கவுடர் - திமுக     
1971 - ஜெ. கருணைநாதன் - திமுக     
1977 - கே. அரங்கசாமி - திமுக     
1980 - எம்.அரங்கநாதன் - திமுக 
1984 - எம். சிவக்குமார் - அதிமுக 
1989 - என். தங்கவேல் - திமுக 
1991 - எம். கருப்புசாமி - அதிமுக 
1996 - என். தங்கவேல் - திமுக     
2001 - கே. கந்தசாமி - தமாகா     
2006 - எ. சவுந்தரபாண்டியன் - திமுக     
2011 - கா.ராமச்சந்திரன் - திமுக     
2016  - ஏ. ராமு - அதிமுக

குன்னூர் பேருந்து நிலையம்
குன்னூர் பேருந்து நிலையம்

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ரூ. 95 கோடி செலவிலான எமரால்டு கூட்டுக் குடிநீர்த் திட்டம் தாமதமாகி வந்த நிலையில் எம்எல்ஏ ராமுவின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கோத்தகிரியின் முக்கிய குடிநீர் ஆதாரமான அளக்கரை குடிநீர் திட்டத்தை ரூ. 10 கோடியில் நிறைவு பெறச் செய்தது, பிரகாசபுரம், நடுஹட்டி பகுதியில் வீடற்ற ஏழைகளுக்கு சுமார் 500 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது, பக்காசுரன் மலைக்கிராம மக்களின் நூற்றாண்டு கோரிக்கையான சுமார் 3 கிலோ மீட்டர் தூர சாலையை அமைத்துக் கொடுத்தது, தொகுதி முழுவதும் ஏராளமான சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டது உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள். மேலும் அரவேணு பகுதியில் மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு தொட்டி அமைக்க தனக்குச் சொந்தமான 5 சென்ட் இடத்தை வழங்கி உதவியிருக்கிறார் எம்எல்ஏ ராமு. 

தொகுதியின் முக்கிய பிரச்சனைகள்

பல ஆண்டுகளாக குன்னூரில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. குன்னூர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு நூறாண்டுகளைக் கடந்த நிலையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யபடாமல் உள்ளது.

குன்னூரில் படகு சவாரி
குன்னூரில் படகு சவாரி

பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள தீயணைப்புத் துறை கட்டடத்தை வேறு இடத்திற்கு மாற்றி பேருந்து நிலையம் விரிவாக்கப்படும் என கடந்த தேர்தலில் அதிமுக அறிவித்தது. ஆனால், இதுவரை அந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக செய்யப்படாமல் உள்ளது. குன்னூர், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளால் நிலவிவந்த குடிநீர் பிரச்னை தற்போது எமரால்டு 3 ஆவது கூட்டு குடிநீர் திட்டம் காரணமாக சற்று குறைந்து இருந்தாலும் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

படகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். குன்னூரில் வன விலங்குகள் - மனித மோதல்கள் தொடர் கதையாகி இருக்கும் நிலையில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

குன்னூர் தொகுதியில் படகர் இனமக்களுக்கு சமமாக பட்டியலினத்தவரும், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களும் உள்ளனர். தொகுதி மக்களிடம் பெரிதாக அறிமுகமில்லாத நிலையில் வெற்றி பெற்ற அதிமுகவின் ராமு, தற்போது தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருப்பதுடன், நன்கு அறிமுகமானவராகவும் மாறியிருக்கிறார். இதனால் இந்தத் தேர்தலிலும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

அதேநேரம், அதிமுகவின் முன்னாள் மாவட்டச் செயலர் கே.ஆர்.அர்ஜூனன், நகரச் செயலர் டி.சரவணகுமார், ஒன்றியச் செயலர் கோடமலை ஹேம்சந்த் உள்ளிட்டோரும் வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.

திமுகவைப் பொருத்தவரை தற்போதைய மாவட்டச் செயலர் பா.மு.முபாரக், முன்னாள் கதர் வாரியத் துறை அமைச்சர் இளிதுரை க.ராமசந்திரன், எடப்பள்ளி காளிதாஸ், நகரச் செயலர் ராமசாமி, மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலர் இரா.அன்வர்கான், இளைஞரணி நிர்வாகி சசிகுமார் உள்ளிட்டோர் போட்டியிட ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

அதேபோல், பாஜகவில் மாவட்ட பொதுச் செயலர் கே.ஜே.குமார், சிறுபான்மையினர் பிரிவு மாநிலச் செயலர் அன்பரசன், நகரச் செயலர் குங்குமராஜ், மாவட்டச் செயலர் பாப்பண்ணன் உள்ளிட்டோரும் முயற்சித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com