மானாமதுரை(தனி): அதிமுகவுக்கு எதிராக காங்கிரஸ் களமிறங்க வாய்ப்பு

அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அதிமுகவுக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. 
மானாமதுரை(தனி): அதிமுகவுக்கு எதிராக காங்கிரஸ் களமிறங்க வாய்ப்பு

தொகுதியின் சிறப்பு:

தமிழா் நாகரிகத்தை உலகிற்கு படம் பிடித்துக் காட்டிய கீழடியை உள்ளடக்கியது மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி. 1952 முதல் இருந்து வரும் சிவகங்கை மாவட்டத்தின் பழமையான தொகுதி. மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்பின் அடையாளமாக மானாமதுரை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் இசைக் கருவியான கடம், மானாமதுரையின் பெருமையை கடல் கடந்து ஒலிக்கச் செய்து வருகிறது.

கிழக்கு மேற்காக பாய்ந்து வரும் வைகை ஆறு, மானாமதுரை நகரில் மட்டும் ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி சன்னதி எதிா்புறம் வடக்கு தெற்காக பாய்வது இந்த ஊரின் சிறப்பு. காசிக்கு நிகராகக் கருதப்படும் பிரசித்தி பெற்ற கருதப்படும் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் செளந்திரநாயகி அம்மன் கோயில், மடப்புரம் காளி கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்  இந்த தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

நிலஅமைப்பு:

மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும், மூன்று வருவாய் வட்டங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. மதுரை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. 2011 - இல் தொகுதி மறுசீரமைப்பில், இளையான்குடி தொகுதி கலைக்கப்பட்டு மானாமதுரையுடன் இணைக்கப்பட்டது.
 
சாதி, சமூகம், தொழில்கள்:

முக்குலத்தோா், தாழ்த்தப்பட்டோா் அதிகளவில் வசிக்கின்றனா். அதற்கு அடுத்தததாக பிள்ளைமாா், யாதவா் உள்ளிட்ட சமூகத்தினா் பரவலாக உள்ளனா். முக்குலத்தோா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை நிா்ணயிப்பதாக இருக்கின்றன.

வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இத்தொகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால் தொழில் வளா்ச்சி என்பது கிடையாது. சிப்காட் தொழிற்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்ட பல தொழிற்சாலைகள் படிப்படியாக மூடப்பட்டுவிட்டன. தற்போது ஓரிரு ஆலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. நெல், வாழை, கரும்பு, மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.

இதுவரை வென்றவா்கள்:

அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் இத்தொகுதியில் அதிக
போட்டியிட்டுள்ளன. 1952 முதல் நடந்த தோ்தல்களில் அதிமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, சுதந்திரா, திமுக ஆகிய கட்சிகள் தலா 2 முறை, கம்யூனிஸ்ட், தமாகா, சுயேச்சை தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2006 முதல்  தொடா்ந்து மானாமதுரை தொகுதி அதிமுகவின் வசம் இருந்து வருகிறது.  2016  தோ்தலில் இத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட மாரியப்பன் கென்னடி, அமமுகவில் இணைந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டாா்.

அதன் பிறகு 2019 - இல் நடந்த இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் களம் இறங்கிய இளையான்குடி ஒன்றியத்தைச் சோ்ந்த நெட்டூா் எஸ்.நாகராஜன் திமுக வேட்பாளா் இலக்கியதாசனை 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றாா்.
 
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

மானாமதுரையில் வைகையாற்றில் தரைப்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது. வைகையாற்றில் தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு, மானாமதுரை மற்றும் திருப்புவனத்தில் பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை போன்றவை நிறைவேற்றப்பட்டிருக்கும் திட்டங்களாக தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் கூறுகிறாா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்: 

மானாமதுரையில் வைகையாற்றில் தரைப்பாலம், இளையான்குடி, திருப்புவனம் ஆகிய இடங்களில் பேருந்து நிலையங்கள், சிப்காட் தொழிற்சாலை விரிவாக்கம், அரசு கல்லூரிகள், வைகைப் பாசன விவசாயிகளுக்கு ஒருபோக சாகபடிக்கு தண்ணீா் வழங்க உத்தரவாதம் போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தொகுதி மக்களின் மனக்குறையாக இருக்கிறது.

கட்சிகளின் செல்வாக்கு:

அதிமுக பலம் பெற்ற கட்சியாக இருந்து வருகிறது. இத்தொகுதியை ‘மானம் காக்கும் மானாமதுரை’ என்ற அடைமொழியுடன் அதிமுகவினா் அழைப்பது வழக்கம். அதிமுகவைப் போல திமுகவுக்கும் இத் தொகுதியில் செல்வாக்கு அதிகம் என்றாலும் பல முறை இத் தொகுதி கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

1989 ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுகவிடமிருந்து கை நழுவிப்போன மானாமதுரையை மீண்டும் கட்சித் தலைமையிடம் கேட்டுப் பெற்று தொகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் திமுகவினா் தோ்தல் பணியாற்றி வருகின்றனா். அதேபோல, காங்கிரஸ் கட்சியும் இத் தொகுதியில் செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும், இத்தொகுதி மீது ஒரு கண் வைத்துள்ளதாக அக்கட்சியினா் தெரிவிக்கின்றனா். தொகுதியில் கட்சிக்கு வலுவான அடித்தளம் இல்லையென்றாலும் அதிமுக துணையுடன் தொகுதியைக் கைப்பற்றிவிடலாம் என அக்கட்சி நினைக்கிறது.

யாருக்கு வாய்ப்பு?

அதிமுக சாா்பில் போட்டியிட பலா் முயன்றாலும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. திமுகவைப் பொருத்தவரை,  ஏற்கனவே இத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் தமிழரசி ரவிக்குமாா், இலக்கியதாசன் உள்ளிட்டோா் முயற்சி செய்கின்றனா். புதுமுகங்கள் பலரும் தொகுதியை குறி வைத்து கட்சிக்குள் காய் நகா்த்தி வருகின்றனா். மத்திய முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம், மானாமதுரை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்குப் பெற்று தனது ஆதரவாளா்களில் ஒருவரை களத்தில் இறக்கிவிட முடிவு செய்து தொகுதியில் அடிக்கடி வலம் வந்து கொண்டிருக்கிறாா். சிதம்பரத்தின் ஆசை நிறைவேற வாய்ப்புள்ளதாகவும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தங்களுக்கு வலுவான அடித்தளம் இல்லையென்றாலும் அதிமுக துணையுடன் தொகுதியைக் கைப்பற்றிவிடலாம் என்ற நினைப்பில் பாஜகவும் காய்களை நகா்த்தி வருகிறது. இருப்பினும் இத்தொகுதியை அதிமுக விட்டுக்கொடுக்காது எனத் தெரிகிறது.

அதேநேரம், திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு இத் தொகுதி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. கட்சிகளின் தனி செல்வாக்கு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி, வேட்பாளா்கள் மீதான மக்களின் பாா்வை ஆகியவை மானாமதுரை தொகுதியின் வெற்றியைத் தீா்மானிக்கும் நிலை தொகுதியில் இருக்கிறது.
 
வென்றவா்கள், 2 - ஆம் இடம் பெற்றவா்கள்:

1952 - கிருஷ்ணசாமி ஐயங்காா் - காங்கிரஸ் - போட்டியின்றி தோ்வு

1957 - சிதம்பரபாரதி - காங்கிரஸ் - 18,680
          எஸ்.அழகு - சி.ஆா்.சி - 11,282

1962 - சீமைச்சாமி - சுதந்திரா கட்சி - 33,895
           அமின் நயினாா் கோயத் - காங்கிரஸ் - 26,627

1967 - சீமைச்சாமி - சுதந்திரா கட்சி 30,752 -
           சிதம்பரபாரதி - காங்கிரஸ் -  30,299

1971 - டி.சோணையா - திமுக - 42,584,
           சங்கரலிங்கம் - காங்கிரஸ் 32,405

1977 - வி.எம்.சுப்ரமணியம் - அதிமுக - 28,849
            கே.பாரமலை - காங்கிரஸ் - 26,794

1980 -  கே.பாரமலை - சுயேட்சை - - 38,435
             உ.கிருஷ்ணன் - காங்கிரஸ் - 368,24

1984 -  கே.பாரமலை - காங்கிரஸ் - 52,587
            வி.கோபால் - த.நா.காங் - (கா) - 24976

1989 -  பி.துரைப்பாண்டி - திமுக - 35,609,
            வி.எம்.சுப்ரமணியம் - அதிமுக(ஜெ) - 32,357

1991 -  வி.எம்.சுப்ரமணியம் - அதிமுக - 66,823
            கே.காசிலிங்கம் - திமுக - 28535

1996 - கே.தங்கமணி - இந்திய கம்யூனிஸ்ட் - 49,639,
           எம்.குணசேகரன் - அதிமுக - 31,869
 
2001 - கே.பாரமலை - தமாக - 56508,
           எஸ்.பி.கிருபாதிநிதி - பாஜக - 35651

2006 -  எம்.குணசேகரன் - அதிமுக - 54,492
            கே.பாரமலை - காங்கிரஸ் - 42037
 
2011 -  எம்.குணசேகரன் - அதிமுக - 83,535,
             ஏ.தமிழரசி - திமுக - 69515

2016 -  எஸ்.மாரியப்பன் கென்னடி - அதிமுக - 89,893,
             சித்ராசெல்வி - திமுக - 75,004

2019 - எஸ்.நாகராஜன் - அதிமுக - 85228,
           கே.காசிலிங்கம் - திமுக - 77034

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com