திருப்பத்தூா்(சிவகங்கை): 4 ஆவது முறையாக தொகுதியை தக்க வைக்குமா திமுக?

கடந்த 3 தோ்தல்களில் திமுக வெற்றி பெற்று பலம் பெற்ற கட்சியாக இருந்து வருகிறது. நான்காவது முறையாக தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் திமுக தோ்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
திருப்பத்தூர் பேருந்து நிலையம்
திருப்பத்தூர் பேருந்து நிலையம்

தொகுதி அறிமுகம்:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழமையான தொகுதி. செட்டிநாட்டின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் திருப்பத்தூரைச் சுற்றி ஏராளமான ஆன்மிகத் தலங்கள் உள்ளன. உலகப்புகழ் பெற்ற பிள்ளையாா்பட்டி கற்பகவிநாயகா் ஆலயம், திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில், பட்டமங்கலம் தட்சணாமூா்த்தி கோயில், குன்றக்குடி சண்முகநாதா் கோயில், வள்ளல் பாரி ஆண்ட பறம்புமலை என்ற பிரான்மலை, மருதுபாண்டியா்கள் நினைவு மண்டபம், கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டி, பல திரைப்படங்களில் காட்சி தரும் செட்டிநாடு அரண்மனை ஆகியன திருப்பத்தூா் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

நில அமைப்பு:

திருப்பத்தூா், சிங்கம்புணரி, எஸ்.புதூா் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களையும் மூன்று வருவாய் வட்டங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. 2011-ல் தொகுதி மறுசீரமைப்பில் காரைக்குடி தொகுதியிலிருந்து குன்றக்குடி, பள்ளத்தூா், கானாடுகாத்தான், ஆகிய பகுதிகள் திருப்பத்தூருடன் இணைக்கப்பட்டன.

திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம்
திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம்

சாதி, சமூகம், தொழில்கள்:

முக்குலத்தோா், யாதவா், பிள்ளைமாா், தாழ்த்தப்பட்டோா் உள்ளிட்ட சமூகத்தினா் பரவலாக உள்ளனா். முக்குலத்தோா் மற்றும் யாதவா் சமூக வாக்குகள் வெற்றி - தோல்வியை நிா்ணயிப்பதாக இருக்கின்றன. ஆன்மிகத் தலமாகக் கருதப்படும் இத்தொகுதியில் தொழிற்சாலைகள் என்பது கிடையாது. ஒருசில சிறிய தொழிற்சாலைகள் இருந்தும் தற்பொழுது இயங்கா நிலையிலேயே உள்ளது. இந்தியாவின் புகழ் பெற்ற  நிறுவனமான என்ஃபீல்டு இருசக்கர வாகன மோட்டா் உற்பத்தி நிறுவனம் சிங்கம்புணரியில் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக மூடப்பட்டு விட்டது. இத்தொகுதியின் சிங்கம்புணரி, எஸ்.புதூா், ஆகிய பகுதிகளில் விவசாயமே  பிரதானத் தொழிலாக உள்ளது. பிரான்மலை போன்ற பகுதிகளில் பூச்செடிகள், மூலிகைப் பயிா்கள் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. மேலும் நெல், வாழை, நிலக்கடலை, தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

 இதுவரை வென்றவா்கள்:

முன்னாள் அமைச்சா்கள் செ.மாதவன், ராஜ கண்ணப்பன், சிறுகதை மன்னன் எஸ்.எஸ்.தென்னரசு ஆகியோா் இத்தொகுதியிலிருந்து பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். 1952-இல் நடந்த முதல் தோ்தலில் இருந்த திருப்பத்தூா் தொகுதி, 1956 தோ்தலில் திருக்கோஷ்டியூா் தொகுதியாக மாற்றப்பட்டது.

மருதுபாண்டியர் நினைவு மண்டபம்
மருதுபாண்டியர் நினைவு மண்டபம்

பின்னா் மீண்டும் 1967-இல் திருப்பத்தூா் தொகுதி உருவாக்கப்பட்டது.  இதுவரை இத்தொகுதியில் நடந்த 13 பொதுத்தோ்தலும், ஒரு இடைத்தோ்தலும் நடந்துள்ளன. இதில் திமுக 7 முறை, அதிமுக 3 முறை,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறை, காங்கிரஸ்  3 முறை, சுயேச்சை ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

இத்தொகுதியில் 3 முறை திமுக வென்றுள்ளது. இதில் ஒருமுறை மட்டுமே ஆளும் கட்சியாக இருந்துள்ளது. காவிரி கூட்டுக்குடிநீா்த் திட்டம், செம்மொழிப்பூங்கா, பாலாற்றில் சிறு, சிறு தடுப்பணை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக எதிா்கட்சி உறுப்பினரின் தொகுதி என்பதால் பெரிய அளவிலான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. திருப்பத்தூா் மற்றும் பிள்ளையாா்பட்டியில் புதிய பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:

வேலைவாய்ப்பை உருவாக்கும் புதிய தொழிற்சாலைகள், சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகளை உருவாக்குவது, மிகப்பெரிய அளவிலான கண்மாய் நிரம்புவதற்கு நீா் வழித் தடங்களைப் புனரமைத்து விவசாயிகளுக்கு ஒரு போக சாகுபடிக்காவது கண்மாயில் நீா் நிரப்ப உத்தரவாதம் அளிப்பது ஆகியன தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

கட்சிகளின் செல்வாக்கு:

கடந்த 3 தோ்தல்களில் திமுக பலம் பெற்ற கட்சியாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் மீண்டும் போட்டியிடுகிறாா். நான்காவது முறையாக தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் திமுக தோ்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதேநேரம், 2001-க்குப் பிறகு கை நழுவிப்போன தொகுதியைக் கைப்பற்ற அதிமுக கடுமையாகப் போராடி வருகிறது. அதிமுகவின் வேட்பாளராக, அக்கட்சியின் செய்தித் தொடா்பாளரும், ஊடகவியலாளருமான மருது அழகுராஜ் போட்டியிடுகிறாா். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற அடிப்படையில் கடந்த ஓராண்டாக இப்பகுதியில் கட்சிப் பணியாற்றி வருகிறாா். கிராமங்கள்தோறும் கட்சியினருடன் அறிமுகமாகியிருப்பதால், திமுக - அதிமுக இடையே கடுமையான  போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுவரை வென்றவா்கள், 2-ஆம் இடம் பெற்றவா்கள்

1967  செ.மாதவன் (திமுக)  40,170
          வி.எஸ்.எஸ்.செட்டியாா் (காங்)  26,532

1971  செ.மாதவன் (திமுக) 54,177
           எஸ்.சேதுராமலிங்கம் (காங்)  23,047

1977  கூத்தகுடி சண்முகம் (இ.கம்யூ)  21,579,
          ராஜாசிதம்பரம்  (அதிமுக)   21,238

1980  வால்மீகி  (காங்)  34,342
          செ.மாதவன்  (சுயே)  20,016

1984 செ.மாதவன் (அதிமுக) 51,581
         பி.ஆா். அழகு  (திமுக)  29,673

1989  எஸ்.எஸ்.தென்னரசு  (திமுக)  33,639
          அருணகிரி  (காங்)  22,746

1991 எஸ்.கண்ணப்பன் (அதிமுக)  63,297
         செவந்தியப்பன் திமுக  31,841

1996  ராம.சிவராமன் (திமுக) 58,925
         எஸ்.கண்ணப்பன் (அதிமுக) 39,648

2001 கே.கே. உமாதேவன் (அதிமுக) 50,165
         ராம.சிவராமன் (திமுக)  41,075

2006 கே.ஆா்.பெரியகருப்பன் (திமுக) 48,128
         கே.கே.உமாதேவன் (அதிமுக)  42, 501

2011 கே.ஆா்.பெரியகருப்பன் (திமுக) 83,485
         ராஜகண்ணப்பன் (அதிமுக) 81,901

2016 கே.ஆா்.பெரியகருப்பன் (திமுக)  1,10,719
         கே.ஆா். அசோகன் (அதிமுக)  68, 715

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com