நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இரண்டாவது இடத்துக்குத்தான் எதிர்க்கட்சிகள் போட்டி! - முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு நேர்காணல்

முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு நேர்காணல்

News image

செந்தில் பாலாஜி

Updated On :15 ஏப்ரல் 2026, 12:45 am

 கோவை தெற்கு தொகுதியில் நீங்கள் போட்டியிடுவதை, கரூரில் போட்டியிட செந்தில் பாலாஜி பயந்துவிட்டார் என்று விமர்சனம் செய்யப்படுவதற்கு உங்கள் எதிர்வினை என்ன?

எனது வாழ்வில் பயம் என்பதே மனதில் இருந்ததே இல்லை. திமுகவில் சேர்ந்தவுடன், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டேன். 2021 தேர்தலில் கரூரில் போட்டியிட தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இப்போது கோவை தெற்கில் நிற்க அறிவுறுத்தினார். எத்தனையோ தலைவர்கள் தொகுதிவிட்டு தொகுதி மாறுகிறார்கள். அவர்கள் எல்லாம் பயந்துதான் மாறுகிறார்களா?. ஆகவே, விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

 2016 பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் 9-லும், 2021}இல் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதைப் பார்க்கும்போது கட்டமைப்பு ரீதியாக அதிமுக வலுவாக உள்ள கோவையில் திமுக வெற்றி பெற முடியுமா?

அதிமுக வலுவாக இருக்கிறது என்பதை ஏற்க முடியாது. கடந்த முறை ஒரு தொகுதியில் 1,400, மற்றொரு தொகுதியில் 1,700, இன்னொரு தொகுதியில் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக வென்றது. உள்ளாட்சி, மக்களவைத் தேர்தலில் திமுக எளிதில் வெற்றி பெற்றுள்ளது.

 இலவச வாக்குறுதிகளை அதிகப்படுத்தியுள்ள திமுக, நிதியைப் பெருக்குவதற்கான வழியைச் சொல்லவில்லையே?

திமுகவைவிட பல கட்சிகள் அதிக வாக்குறுதிகளை அறிவித்துள்ளன. திமுகவை பொருத்தவரை எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 எந்தக் கட்சியாக இருந்தாலும் இலவசங்கள் அதிகரித்துக்கொண்டே போவது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லதுதானா?

திமுக அறிவிப்பது இலவசங்கள் அல்ல. இல்லாத மக்களுக்குத்தான் கொடுக்கிறோம். கிராமங்களில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். காலை உணவுத் திட்டம் மூலம், வெறும் வயிற்றுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கிறது. அதன்மூலம் மூளை வளர்ச்சி அதிகரித்து குழந்தைகளால் கல்வியில் முழுக் கவனம் செலுத்த முடிகிறது.

 வரி எல்லாமே மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்குப் போனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு எப்படி பணம் வரும்?

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு போதுமான நிதி தரவில்லை. இருப்பினும், நெடுஞ்சாலைத் துறை, நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி , கல்வித் துறை என எந்தத் துறைக்கும் நிதி குறைக்கப்படவில்லை.

 நான்குமுனைப் போட்டியில் திமுக வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்?

200 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக வெற்றி பெறும். 2021 தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை இந்தத் தேர்தலில் பெற முடியாது. முக்கியத் தலைவர்களே பின்னோக்கி போவார்கள்.

 போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்குமா, இல்லை திமுகவுக்கும் தவெகவுக்குமா?

ஆளுமை மிக்க தலைவராக முதல்வர் ஸ்டாலின் தன்னை நிரூபித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படவில்லை. எனவே திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. எங்களுக்குப் போட்டியாளர்களே இல்லை. இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டி உள்ளது.

 இரண்டாவது இடத்துக்கு யாருக்கும், யாருக்கும் போட்டி?

அதற்கான முடிவு மே 4}இல் தெரிந்துவிடும்.

தவெக தலைவர் விஜய்யால் சிறுபான்மையினர், தலித் வாக்குகள் பாதிக்கப்படுமா?

ஒரு தேர்தலையும் சந்திக்காத கட்சி யார் வாக்குகளைப் பெறும் எனக் கணிக்க முடியாது. ஒன்று அல்லது இரு தேர்தல்களை ஒரு கட்சி சந்தித்த பிறகுதான் எந்த வகையான வாக்குகளை அக்கட்சி பெறும், எந்த மாவட்டத்தில் எவ்வளவு வாக்குகளைப் பெறும் என்பது தெரியவரும்.

 விஜய்க்கு தானாக கூட்டம் கூடுகிறதே இது வாக்குகளாக மாறுமா?

ஓரிடத்தில் 30,000 பேர் கூடுகின்றனர். ஒரு தொகுதியில் 2 லட்சம் பேர் என வைத்தால் மாவட்டம் முழுவதும் குறைந்தபட்சம் 8 லட்சம் வாக்காளர்களுக்கு 30,000 பேர் மட்டுமே கூடுகின்றனர். அதுவும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வருகின்றனர். திரைக் கவர்ச்சியால் அவர்கள் கூடுகின்றனர். குறிப்பிட்ட சதவீத வாக்குகள் கிடைக்கலாம், ஆனால், வெற்றிக்கான வாக்குகள் கிடைக்காது.

 கரூர் சம்பவத்தில் உங்களது கவனக்குறைவு இருந்ததா?

கரூர் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. அந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள், பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டுச் சென்றனர். 20 ஆண்டுகளாக கரூரில் அரசியல் பணியில் இருக்கும் நான், மக்கள் பாதிக்கப்படும்போது சும்மா இருக்க முடியாது. எனது மாவட்டத்தில் யார் பாதிக்கப்பட்டாலும் நேரில் சென்று உதவுவது வழக்கம். அதுபோலதான் அங்கும் சென்று உதவினேன்.

 கோவை மாவட்டத்தில் இடதுசாரிகளுக்கு இடம் கிடைக்கவில்லையே என்ற அதிருப்தி நிலவுகிறதே?

திருப்பூர் வடக்கு, பவானிசாகர் தொகுதிகளில் இடதுசாரிகள் போட்டியிடுகின்றனர். யாருக்கு எந்தத் தொகுதி என்பது தலைவர் ஒப்புதலுடன் எடுக்கப்படும் முடிவு. சிங்காநல்லூரில் போட்டியிட திமுகவுக்கு விருப்பம்தான். ஆனால், காங்கிரஸ் போட்டியிடுகிறது.

 உங்கள் மீதான வழக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாதா?

2019}இல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு அது. 18 எம்எல்ஏக்கள் தனியாக பயணித்தபோது இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வந்தது. முதலில் 12 பேர் மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். எனது பெயர் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை ஆகியவற்றில் இல்லை. ஆனால், வேண்டுமென்றே எனது பெயரை முதல் குற்றவாளியாக எடப்பாடி பழனிசாமி சேர்த்துவிட்டார்.

 தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் என்பது ஏற்புடையதா?

யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை தலைமைதான் முடிவு செய்யும். கூட்டணியைப் பலப்படுத்துவதால் வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும். வருவோரை சேர்க்காவிடில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையடைந்து போட்டி கடுமையாகிவிடும்.

 புதுவைக்கு வந்த ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யவில்லையே?, களத்தில் திமுக}காங்கிரஸ் இணைந்து செயல்படுகிறதா?

மேற்கு மண்டலத்தில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இங்கு இணைந்துதான் பணியாற்றுகிறோம். களத்தில் எவ்வித கருத்துவேறுபாடும், முரண்பாடும் இல்லை. 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

 கோவைக்கு என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்?

வியூகத்தை வெளியில் சொல்ல முடியாது. அதைப் பயன்படுத்தும்போதுதான் தெரியவரும்.

நேர்காணல்: பீ.ஜெபலின் ஜான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.