தொகுதி மறுசீரமைப்புக்கு முந்தைய பெரம்பூர், புரசைவாக்கம், பூங்கா நகர் தொகுதிகளில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து உருவாக்கப்பட்ட திரு.வி.க.நகர் தொகுதி (தனி) கடந்த 2011-இல் முதல் பேரவைத் தேர்தலைச் சந்தித்து வருகிறது.
இந்தியாவின் முதலாவது தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம், இத்தொகுதிக்குள்பட்ட பின்னி ஆலையில் இருந்து தொடங்கப்பட்டது. அதைத் தொடங்கியவர்களில் ஒருவரான பிரபல தொழிற்சங்கவாதியும், தமிழறிஞருமான திரு.வி.கல்யாணசுந்தரம் (திரு.வி.க.) பெயரில் இத்தொகுதி அமைந்துள்ளது.
மத்திய வடசென்னை பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதி, மக்கள்நெருக்கம் அதிகம் கொண்டது. ஓட்டேரி, புளியந்தோப்பு, ஆடுதொட்டி, கன்னியாபுரம், எஸ்.எஸ்.புரம், பட்டாளம், பெரம்பூர் லோகோ, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகள் இத்தொகுதிக்குள் அடங்குகின்றன.
இத்தொகுதி கடந்த 2011 முதல் 3 பேரவைத் தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. 2 முறை திமுக, ஒரு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை திமுக சார்பில் கே.எஸ்.ரவிச்சந்திரன், அதிமுக கூட்டணி சார்பில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், நாதக சார்பில் ஜெகதீஷ் சுந்தர், தவெக சார்பில் எம்.ஆர். பல்லவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சமூக நிலவரம்: இத்தொகுதியில் பட்டியலினத்தவர் கணிசமாக உள்ளனர். நாடார், வன்னியர், முக்குலத்தோர், கிறிஸ்தவர்கள், முதலியார் பெருமளவும், இதர சமூகத்தினர் பரவலாகவும் வசித்து வருகின்றனர். அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்களே இங்கு பெரும்பான்மையாக உள்ளனர்.
முக்கிய பிரச்னைகள்: பல பகுதிகளில் குறுகிய இடங்களில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர். மழைக் காலங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. மழைநீர் வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததும் முக்கிய பிரச்னையாகும். இன்னும் பலருக்கு பட்டா வழங்கப்படவில்லை. குடிநீர், கழிவுநீருடன் கலந்து வருவது மற்றொரு பெரும் சிக்கலாக உள்ளது.
திமுக வேட்பாளர்: இத்தொகுதியில் 2016, 2021 தேர்தல்களில் திமுக சார்பில் தாயகம் கவி போட்டியிட்டு, தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அவருக்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரனை திமுக களம் இறக்கியுள்ளது. இவர், கடந்த 2016 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு.வி.க.நகர் தொகுதிக்கு புதிய முகம் என்றாலும், இத்தொகுதியில் தொடர்ந்து இருமுறை திமுக வெற்றி பெற்றிருப்பதும் அவருக்குச் சாதகமாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை முன்வைத்து ரவிச்சந்திரன் வாக்குச் சேகரித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர்: தமிழ் மாநில பகுஜன் சமாஜ் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அதிமுக வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர், வடசென்னையில் பட்டியலின மக்களின் தலைவராக அறியப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி.
கணவரின் மரணத்துக்கு நீதி கோரி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள அவருக்கு பட்டியலின மக்களின் ஆதரவும், தொகுதி மக்களின் அனுதாபமும் சாதகமாக இருக்கிறது. மேலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கூடுதல் பலம் சேர்க்கிறது. இந்த 3 அம்சங்களையும் வாக்குகளாக மாற்ற முயற்சி செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நாதக வேட்பாளர்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மு.ஜெகதீஷ் சந்தர் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். 2024-ஆம் ஆண்டு திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ளதால் தேர்தல் அனுபவம் கொண்டவர். எனினும், திரு.வி.க.நகர் தொகுதிக்கு புதிய முகம் என்பது அவருக்கு சவாலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், அக்கட்சிக்கு ஏற்கெனவே உள்ள 8 சதவீத வாக்கு வங்கி மற்றும் சீமானின் மாற்று அரசியல் கொள்கையால் ஈர்க்கப்பட்ட வாக்காளர்களைக் கவரும் வகையில் பிரசாரம் செய்து வருகிறார்.
தவெக வேட்பாளர்: தவெக சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.பல்லவி , திரு.வி.க.
நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் உள்ளூர் அரசியல் சூழலை நன்கு அறிந்தவர். தொகுதி மக்களிடமும் அறிமுகம் உள்ளவராக இருக்கிறார்.
மேலும், விஜய்க்கு உள்ள ஆதரவை அடிப்படையாகக் கொண்டு தனது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
இத்தொகுதியில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் பிரதான 4 வேட்பாளர்களிடம்தான் போட்டி ஏற்பட்டுள்ளது. ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இருக்கும் திமுகவுக்கு,
அனுதாப அலையை சாதகமாக்கி தொகுதியைக் கைப்பற்ற முயற்சிக்கும் அதிமுக சவாலாக இருப்பதால் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.கே.நகர்: கைப்பற்றும் முயற்சியில் திமுக - அதிமுக!

ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம் காட்டும் திமுக! சுழற்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் அமமுக

திருவொற்றியூா் தொகுதி அலசல்: கூட்டணி பலத்தில் மாா்க்சிஸ்ட்- வியூகம் வகுக்கும் அதிமுக

ஐந்து முனை போட்டி! தொகுதி அலசல் தருமபுரி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


