தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல் பற்றி...

News image

அர்ஜுன் சம்பத்

Updated On :5 ஏப்ரல் 2026, 11:42 pm

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி ஆகிய சங்க பரிவார் அமைப்புகளில் பணியாற்றியவர் அர்ஜுன் சம்பத். 1993-இல் இந்து மக்கள் கட்சியைத் தொடங்கி, இந்து சமய உரிமைப் பாதுகாப்பு, சமூக சீர்திருத்தத்துக்காகப் பணியாற்றுவதுடன் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தினமணி நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:

வரும் தேர்தலில் உங்கள் கட்சியின் செயல் திட்டம் என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக - பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்குப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளோம். திமுக ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதற்காகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அழைப்பு விடுத்திருந்தோம். அதில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.

திமுக செல்வாக்கை இழந்து வருவதாக நம்புவதற்கு காரணங்கள் என்னென்ன?

திமுக கொள்கைகள் அண்ணாதுரையால் உருவாக்கப்பட்டு, கருணாநிதியால் மெருகேற்றப்பட்டு ஓரளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் உள்ளன. ஆனால், தற்போது "திராவிட மாடல்' என்ற பெயரில் தேச விரோதம், பிரிவினைவாதம், பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றனர். மத்திய அரசுக்கு எதிராக மோதல் போக்கும், ஹிந்து சமயத்துக்கு எதிராக வெறுப்பு பிரசாரமும் திமுக செல்வாக்கு குறைய காரணமாக உள்ளன.

தமிழகத்தை பல மாநிலங்களாகப் பிரிக்க தொடர்ந்து நீங்கள் வலியுறுத்துவது ஏன்?

நிர்வாகம், வளர்ச்சியின் அடிப்படையில் பிரிக்க வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் சென்னையை மையமாக கொண்டுதான் தற்போது நிர்வாக மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நீதித் துறை உள்பட முக்கியத் துறையை அணுக, அனைத்து மாவட்டத்தினரும் சென்னைக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, நிர்வாக வசதிக்காக 100 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் உருவாக வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்துகிறோம்.

விஜய் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இருந்து அவரது வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது போன்ற அவரது தொண்டர்களின் நடவடிக்கையை சரிசெய்ய விஜய்யோ, அக்கட்சியின் தலைமையோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 3 முதல் 5 சதவீதம் வாக்குகளைப் பிரிக்கலாம், அவ்வளவுதான். கமல்ஹாசன்போல, இந்தத் தேர்தலில் விஜய் உள்ளார். திமுகதான் விஜய்யை இயக்குகிறது.

பெரம்பூர், புதுச்சேரி, திருச்சியில் விஜய்க்குத் திரளாகக் கூடிய மக்கள் வெள்ளத்துக்குப் பிறகுமா அவர் வெறும் 5% வாக்குகள்தான் பெறுவார் என்று உங்களால் கூற முடிகிறது?

அவரைப் பார்க்கக் கூடும் கூட்டம் வாக்களிக்கப் போகும் கூட்டமில்லை. ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவிக்கும், 2016 தேர்தலில் நடிகர் வடிவேலுக்கும் கூடாத கூட்டமா? விஜயகாந்துக்கும்தான் கூட்டம் கூடியது. 2006, 2016 தேர்தல்களில் அவர் தனியாக நின்றபோது எத்தனை இடங்களில் வெற்றி பெற முடிந்தது? எத்தனை சதவீத வாக்குகளைப் பெற முடிந்தது? அதே கதிதான் விஜய்க்கும் தவெகவுக்கும் இந்தத் தேர்தலில் ஏற்படும்.

தமிழக வாக்காளர்களின் மன நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சொத்து வரி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்றவை மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். மேலும், திமுக கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் அக்கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சநாதனத்தை எதிர்ப்பதாக திமுக கூறுகிறதே?

சநாதனத்தில் மேலோர், கீழோர் என்பது கிடையாது. சநாதனத்தை ஜாதி என திமுக தவறாக அடையாளப்படுத்துகிறது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரானதுதான் சநாதனம். எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டும் என்பதையே சநாதனம் வலியுறுத்துகிறது. திராவிட மாடலின் பல பொய்ப் பரப்புரைகளில் இதுவும் ஒன்று. துணிச்சலாக பார்ப்பன எதிர்ப்பு என்று சொல்ல முடியாததால் சநாதன எதிர்ப்பு என்று முழங்குகிறார்கள். சநாதனம் டெங்கு போன்றது என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஏன் இப்போது கோயிலுக்குப் போகிறார்?

இந்து மக்கள் கட்சி பிளவு அரசியலை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு உள்ளதே?

பிளவு அரசியலை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. எல்லாருக்குமான அரசியல்தான் எங்கள் நோக்கம். நாங்கள் மதவாதிகள் அல்ல. முதலில் ஹிந்து என்ற வார்த்தையை மதத்துடன் தொடர்புபடுத்துவது தவறு. ஹிந்து என்பது சநாதன தர்மம். பிளவு அரசியலில் ஈடுபடுவது திமுகதான். மத ரீதியாகவும், ஜாதிய ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிளவுகளை ஏற்படுத்தி அதில் குளிர் காயும் கொள்கைக்குப் பெயர்தான் "திராவிட மாடல்''.

தமிழகத்தில் மதப் பிரிவினையை உண்டாக்க முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது குறித்து?

தமிழகத்தில் மதப் பிரிவினையை உருவாக்குவதே ஸ்டாலின்தான். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் மதப் பிரிவினையை உருவாக்கினார். அதேபோல, இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டு அவர்தான் ஹிந்து சமயத்தை இழிவாகப் பேசினார். திராவிடர் கழகமும், கம்யூனிஸ்டுகளும்தான் மதப் பிரச்னையை உருவாக்குவார்கள்.

இலவசங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக திமுக - அதிமுக அறிவித்துள்ளது குறித்து?

வளர்ச்சித் திட்டங்களுக்குத்தான் நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கிறோம். இலவசங்கள் என்பது கண்துடைப்பு வேலை. இலவசங்கள் சரியல்ல.

விஜய், சீமான் போட்டியால் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறுமா?

தமிழ்நாட்டில் நான்கு முனை, ஐந்து முனைப் போட்டிகள் எடுபடாது. அதிமுக } திமுக இடையேதான் உண்மையான போட்டி. விஜய், சீமான் இருவரும் மறைமுகமாக திமுகவுக்கு உதவி செய்யப் போகிறார்கள். அவர்களின் அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது.

நேர்காணல்: வெ. செல்வகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.