கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்! முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி சிறப்பு நேர்காணல்

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 11:10 pm

அதிமுக அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, தனது பரபரப்பான தேர்தல் பிரசாரத்துக்கு இடையே தினமணி நாளிதழுக்கு அளித்த நேர்காணல்:

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக அரசின் செயல்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன?

திமுக அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக அமையவில்லை. தொழில் முடக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக, போதைப் பொருள் கலாசாரம் தலைவிரித்தாடியதால், திமுக ஆட்சிமீது மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

அப்படியானால் 2024 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதே, அது எப்படி?

அதிமுக அணியும், பாஜக அணியும் தனித்தனியாகப் பிரிந்து நின்றதால் கிடைத்த வெற்றி அது. இப்போது போல, நாங்கள் இணைந்து போட்டியிட்டிருந்தால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கக் கூடும்.

திமுக அரசின் திட்டங்கள், குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணத் திட்டம் போன்றவை பெண்களை கவர்ந்திருப்பதால் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறதே?

திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகை 27 மாதங்களுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வந்தது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும் எனக் கூறிவிட்டு, மூன்று கோடி பேரைக் கழித்துவிட்டு ஒரு கோடி பேருக்கு மட்டுமே வழங்கினர். விலைவாசி உயர்வு மட்டுல்லாமல், வீட்டுவரி, சொத்து வரி, மின் கட்டணம் அனைத்தையும் உயர்த்திவிட்டு வெறும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை வழங்கி மக்களின் கொந்தளிப்பை எதிர்கொள்ளப் பார்க்கிறது திமுக ஆட்சி. அது ஏமாற்றத்தில்தான் முடியும். கூடுதலாக ரூ. 1,000 செலவழிக்கும் நிலைக்கு பெண்களை திமுக அரசு தள்ளியுள்ளது.

தங்களது திட்டங்களையும், தமிழகம் மீதான மத்திய பாஜக அரசின் பாராமுகத்தையும் முன்வைத்து திமுக பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதை அதிமுக- பாஜக கூட்டணி எப்படி முறியடிக்கப் போகிறது?

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில், மத்திய அரசோடு இணக்கமாக இருந்து 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த நினைத்து மத்திய அரசுடன் மோதல் போக்கை ஏற்படுத்தி, மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை எதிர்ப்பது, தமிழகத்துக்குத் தேவையான நிதியைக் கேட்டு பெறாமல் தவிர்ப்பது போன்ற செயல்களால் மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது. தமிழக அரசுக்குத் தரவேண்டிய நிதிப் பகிர்வை மத்திய அரசு தராமல் இல்லை. இணக்கமாக இருந்தால் கூடுதல் திட்டங்களையும், நிதி உதவியையும் கேட்டுப் பெற முடியும். சண்டை போட்டுக் கொண்டிருந்தால், தேடி வந்து உதவுவார்களா? இது கருணாநிதிக்குப் புரிந்திருந்தது. மு.க.ஸ்டாலினுக்குப் புரியவில்லை.

உங்கள் அதிமுக ஆட்சியிலும்தான் கடன் சுமை இருந்தது?

2011-இல் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது ரூ. ஒரு லட்சம் கோடி கடன் இருந்தது. திமுக ஆட்சியில் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். எடப்பாடி கே. பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு கடன் சுமை அதிகரித்ததற்கு கரோனா பெருந்தொற்று ஒரு காரணம். போதிய அளவு வருவாய் இல்லாததால்,

ரூ. 60,000 கோடி கடன் பெறப்பட்டது. அதன்பிறகு, வளர்ச்சி திட்டங்களுக்காக கூடுதலாக கடன் பெற்று, அப்போதைய ஆட்சியில், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சாலைகள், பாலங்கள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

திமுக அரசு கடன் சுமையை அதிகரித்துவிட்டது எனக் கூறுகிறீர்கள். ஆனால், தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்தான் கடன் பெறப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறதே?

திமுக ஆட்சியில் ரூ. 5 லட்சம் கோடி கடன் ஆனது தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் கேட்டால், கடன் சுமை கட்டுக்குள் இருக்கிறது என்கின்றனர். வட்டி மட்டுமே ரூ. 1 லட்சம் கோடி செலுத்த வேண்டும். அரசுக்கான வருவாய் ரூ. 1.36 லட்சம் கோடி மட்டுமே. கடன் தொகையை எந்த வகையில் முதலீடு செய்தீர்கள் என்பதற்கு அவர்களிடம் பதில் இல்லை.

தமிழகம் கடன் சுமையில் இருக்கும்போது திமுகவின் இலவச வாக்குறுதிகளும், அதற்கு இணையாக அதிமுகவும் வாக்குறுதிகளை அறிவிக்கக் காரணம் என்ன?

அதிமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டோம். அப்போது நிர்வாகத் திறன் திறம்பட இருந்தது. திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமை இல்லாததால், கடன் சுமை அதிகரித்துவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், நிர்வாகத் திறமை மூலம் வருவாயைப் பெருக்கி, கடன் சுமை குறைக்கப்படும். இலவசங்கள் என்பது மக்களுக்கான வாழ்வாதாரம் கருதியே வழங்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால், களம் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது?

களத்தில் எத்தனைக் கட்சிகள் இருந்தாலும் போட்டி என்னவோ திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான். பலமுனைப் போட்டியை ஏற்படுத்தி திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று திமுக நினைக்கிறது. ஆனால், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது உறுதி. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியை மக்கள் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டனர். தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

தவெக தலைவர் விஜய் பிரிக்கப் போகும் வாக்குகள் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலைச் சந்திக்கலாம். தமிழக வெற்றிக் கழகத்தால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. திமுகவின் சிறுபான்மையினர் வாக்கு வங்கியிலும், விடுதலைச் சிறுத்தைகளின் தலித் வாக்கு வங்கியிலும் நடிகர் விஜய்யின் தாக்கத்தால் வாக்குகள் பிளவுபட்டு தவெகவுக்கு நகரக்கூடும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைந்திருந்தால், கூட்டணி வெற்றி உறுதிப்பட்டிருக்கும்தானே?

தவெக எங்கள் கூட்டணிக்கு வருவதால் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்காது. ஆரம்பம் முதலே அதற்கான முயற்சியை அதிமுகவோ, பாஜகவோ முன்னெடுக்கவில்லை. ஊடகங்களின் ஊகங்கள்தான் அதுபோன்ற பரப்புரைகள்.

பாஜகவின் அடிமையாக அதிமுக மாறிவிட்டது என, திமுக கூட்டணிக் கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். இது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

குழந்தையிடம் பூச்சாண்டி வருவதாக பயமுறுத்துவது உண்டு. அதுபோல, திமுக கூட்டணிக் கட்சிகள் பாஜக வந்துவிடும் என பூச்சாண்டி காட்டிவருகின்றன. பாஜகவுடன் கூட்டணி அமைத்து 1999 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, மத்திய ஆட்சியிலும் ஐந்தாண்டுகள் பதவி சுகம் அனுபவித்தபோது எங்கே போயிற்று இந்த பூச்சாண்டி பயம்? திமுகவின் கூட்டணியில் இணைந்துதான் பாஜக முதன்முறையாக தமிழக சட்டப்பேரவையில் நுழைந்தது என்பதை ஏன் மறந்துவிட்டார்கள்?

செல்வாக்கு இல்லாத கட்சிகள் தனித்துப் போட்டியிடும்போது, செல்வாக்குமிக்க அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கூட்டணி அமைப்பது ஏன்?

அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், நாங்களும் தனித்துப் போட்டியிடத் தயாராக உள்ளோம். ஒருமித்த கருத்துடைய கட்சியுடனே நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். அம்மாவின் (ஜெயலலிதா) தலைமையில் தனித்துப் போட்டியிட்டு இரண்டு முறை அதிமுக தனது செல்வாக்கை நிரூபித்திருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். அந்தத் துணிவு திமுகவுக்கு இருக்கிறதா? இதுவரையில் திமுக கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில்லை.

திமுக பலமான கூட்டணியை அமைத்திருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அதிக எண்ணிக்கையில் கட்சிகள் கூட்டணியில் இருப்பதாலேயே அது பலமான கூட்டணியாகிவிடாது. திமுக கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் லெட்டர் பேட் கட்சிகள் என்பதுடன் 1%-க்கும் குறைவான வாக்குகள் கொண்டவை. திமுகவின் சிறுபான்மை வாக்குகளையும், தலித் வாக்கு வங்கியையுமேகூட தவெகவின் வரவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக அமைத்திருக்கும் கூட்டணிதான் வலுவான கூட்டணி. நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.

நான்கு தேர்தல்களில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற ரகசியம் என்ன?

அதிமுக என்ற இயக்கம் மக்களுடன் சேர்ந்தே இருக்கிறது. இங்குதான் கிளைச் செயலாளராக இருப்பவரும் உயர் பதவிக்கு வரமுடியும். வம்சாவளி வாரிசு முறை அதிமுகவில் இல்லை. திமுகவினர் போன்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களைச் சந்திப்பதில்லை. அதனால், அதிமுகவுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்கின்றனர். எனது தொகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதும், தலைமைக்கு விசுவாசமாக இருப்பதும்தான் எனது வெற்றி ரகசியம்.

தொங்கு சட்டப்பேரவை ஏற்படலாம் என திமுக கூட்டணிக் கட்சி பேசுவது குறித்து?

தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்!

-நேர்காணல்: எம்.மாரியப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.