மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் அரசுக்கும் எதிராகத் தேர்தல் முடிவு வரையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த (கொண்டிருந்ததாக நம்பப்படுகிற) திராவிட முன்னேற்றக் கழகம் தன் நிலையிலிருந்து நழுவி மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் அணிசேரப் போகிறதா?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விஜய்யின் தவெக தனிப் பெரும் கட்சியாக – ஆனால், தனிப் பெரும்பான்மை பெறாத சூழலில் - திமுக ஆதரவுடன் அதிமுகவின் ஆட்சியை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட(தாகக் கூறப்படும்) முயற்சிகளைப் பற்றிய உண்மைகளை இந்தக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு யார், எப்போது விளக்குவார்கள்?
அதிமுகவின் தோற்றமே திமுக எதிர்ப்புதான். இவ்விரு கட்சிகளுக்கும் இடையே சில விஷயங்களில் சில இணக்கங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும்கூட, தொடர்ந்து எதிரெதிராகவே தமிழ்நாட்டில் அரசியல் செய்துவந்திருக்கின்றனர். இரண்டும் ஊழல் கட்சிகள், இவ்விரண்டுக்கும் மாற்று தவெக என்று பிரசாரம் செய்துதான் தேர்தலில் விஜய் வெற்றி பெற்றார்.
108-1 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் விஜய் ஆட்சியமைப்பது தாமதமாகிக் கொண்டிருக்க, ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என்பதற்கும் அப்பாற்பட்ட அதிர்ச்சியாகத் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன – அதுவும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆசிர்வாதத்துடன்!
இத்தகைய முயற்சிகள் பற்றிய தகவல்கள் அரசல்புரசலாக நாளிதழ்களிலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் கசியவிடப்பட்டபோதிலும், இதைப் பற்றிய தகவலை மே 8 ஆம் தேதி இரவு தொலைக்காட்சி நேரலையொன்றில் வெளிப்படையாகத் தெரிவித்தவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் எம்.ஏ. பேபி!
தவெகவை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்றபோது, தனிப் பெரும் கட்சியாக விஜய்யின் தவெகவை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கும் நிலையில், ஆளுநர் மூலமாக மத்தியிலுள்ள பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்ய முயன்றுவரும் நிலையில் நாங்கள் ஆதரிக்க முடிவு செய்தோம் என்றார் பேபி.
திமுக கூட்டணியிலிருந்து ஏன் வெளியேறினீர்கள்? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், காங்கிரஸ் எந்தவித கலந்தாலோசனையும் செய்யாமல் வெளியேறிவிட்டது. நாங்கள் ஸ்டாலினுடன் கலந்துபேசினோம். எங்களுடைய தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர். அப்போது இந்த யோசனை, அதிமுக தலைமையில் அமையும் அரசை திமுக ஆதரிக்கும் என்ற யோசனை கூறப்பட்டது. இந்த மாதிரியான ஏற்பாட்டுக்கு நாங்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று திமுக விரும்பியது. தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. திமுகவும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. திமுக அணியில் நாங்களும் இடம் பெற்றிருக்கிறோம். எனவே, நாங்கள் தோற்றிருக்கிறோம்.
இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் நாங்கள் அரசு அமைக்கவில்லை. தனிப் பெருங்கட்சியை ஆதரிக்கிறோம். ஆனால், தனிப் பெரும் கட்சியை ஆட்சி அமைக்கவிடாமல், முதல்வராக விடாமல், பாரதிய ஜனதாவும் ஆர்எஸ்எஸ்ஸும் தடுக்க முயற்சி செய்கின்றன. இதுவோர் அசாதாரண நிலைமை என்றார் பேபி.
அதிமுகவுடன் சேர்ந்து திமுக ஆட்சி அமைக்க முயன்றதா? என்ற நேரடியான கேள்விக்கு, “இல்லை. அதிமுக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு ஆதரவாக இருப்பதாக திமுக எங்களிடம் தெரிவித்தது, வேறு விவரங்களை விவாதிக்க வேண்டியதில்லை. நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பது பற்றி நியாயமாகக் கேட்டார்கள். திமுகவின் அணுகுமுறையை நாங்களும் பின்பற்ற வேண்டும் என்று திமுக விரும்பியது. நாங்கள் திமுகவை எதிர்க்க விரும்பவில்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சியுடன் - தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுகவை, ஆதரிக்கும் முடிவை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. பாரதிய ஜனதா விளையாடுகிறது. எனவே, இந்த முடிவை ஸ்டாலினிடம் தெரிவிக்க விரும்பினோம்” என்றார் பேபி.
இந்தத் தகவலின் வழியொற்றியே மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலரான பெ. சண்முகமும் சிலவற்றைத் தெரிவித்திருக்கிறார்.
“அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி இரண்டையும் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இந்த இரண்டு அணிகளுக்கும் எதிராகத்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். தனிப் பெரும் கட்சியாகத் தவெகவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அது வரக் கூடாது; அதைத் தடுக்கிற நோக்கத்தோடு ஒரு முயற்சி நடைபெற்றது என்பது உண்மைதான்; ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது உண்மைதான். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அது மக்களுடைய தீர்ப்புக்கு எதிரானது.
“இரண்டாவது இந்த இரண்டு கட்சிகளும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரும் புதிருமாக, எலியும் பூனையுமாகத்தான் இருந்திருக்கிறார்கள். திடீரென்று இந்தத் தேர்தலில் தோல்வியடைந்ததையொட்டி இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைப்பது அல்லது ஒரு கட்சி ஆட்சி அமைக்க இன்னொரு கட்சி ஆதரிப்பது என்பதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது முற்றிலும் சந்தர்ப்பவாத நிலையாகத்தான் கருதப்படும். அது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது; ஏற்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டோம்” என்றிருக்கிறார் சண்முகம். ஆனால், திருமாவளவனை முதல்வராக முன்னிறுத்தும் யோசனை பற்றிக் கேட்டபோது, தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலரான மு. வீரபாண்டியன், மாற்று ஏற்பாடு என்கிறபோது ஒரு பிழையான அரசியலுக்கு சிபிஎம், சிபிஐ உடன் போகாது என்று தெரிவித்ததுடன், நேற்று வரை பாஜகவுடன் இருந்துவிட்டு வருகிறார்கள். அதை பிரகடனப்படுத்தினால்கூட சரி; இதை நாட்டு மக்களிடம் தெரிவிக்கலாம். இந்த இடத்தைப் பயன்படுத்தி ஆளுநர் விளையாடிவிடக் கூடாது. சில முயற்சிகள் வருகிறபோது பிழை என்றுதான் சொன்னோம். நேரடியாகத்தான் சொன்னோம் என்றிருக்கிறார்.
இதுபற்றி நேர்காணலொன்றில் பேசும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை உள்ளுக்குள்ளேயே பேசப்பட்டது. என்னிடத்தில் சொல்லப்பட்டது என்கிறார். யார்? என்று கேட்கும்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னிடத்தில் சொல்லப்பட்டது என்று மட்டும் குறிப்பிடுகிறார்.
மிகவும் நிதானமானவரான காதர் மொகிதீன், அவர்களுக்கு எதிரான விமர்சனங்களைப் பற்றிக் கேட்கும்போது, மிகவும் கோபத்துடன், எங்களை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. எங்கள் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாதே, எங்கள் சமுதாய வாக்குகள் இல்லாமல் யார் ஜெயித்தது? விமர்சனம் யாராவது செய்தால் முட்டாள்தனமான, புரியாத்தனமான, போக்கிரித்தனமான விஷயம் என்கிறார். இவ்வளவு கோபமாக அவர் பேசுவது மிகவும் அபூர்வம்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், ‘மே 5 ஆம் நாள் சந்தித்தபோது, எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றுதான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்’ என்கிறார்.
மே 7 தனித்தனியாக எங்களுக்கு (கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு) அழைப்பு வந்தது. அங்கே இந்தக் கருத்து வைக்கப்பட்டது. நம்ம அணியும் அதிமுக அணியும் சேர்ந்தால் நாமே ஆட்சியமைக்க முடியும். எடப்பாடியை முதல்வராக முன்மொழிகிறார்கள் என்று தெரிவித்தார்கள். ஆனால், இந்த முயற்சி, திமுகவுக்கே சூனியமாகிவிடும் என்று தெரிவித்துவிட்டோம். நாங்கள் யாரும் யீல்ட் ஆகவில்லை என்று குறிப்பிடுகிறார் திருமாவளவன்.
மே 8 சந்தித்தபோது, ‘நீங்கள் முடிவெடுத்திருக்கிறீர்கள், செயல்படுங்கள்’ என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், ஸ்டாலின் சொல்லிவிட்டுப் போன பிறகு, அங்கிருந்தவர்கள் பேசினார்கள். ‘நீங்கள்தான் முதல்வர். நாங்கள் வெளியிலிருந்து ஆதரிப்போம்’ என்று தெரிவித்தனர். ‘இதெல்லாம் சாத்தியப்படுகிற விஷயமா?’ என்று தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆதரவுடன் அதிமுக அரசு அமைக்கும் முயற்சி பற்றி இதுவரை தெரிவித்தவர்கள் அனைவருமே திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள்; திமுகவுடன் இணைந்து போட்டியிட்டவர்கள்; எனினும், தற்போது தவெக அரசை ஆதரிப்பவர்கள்.
இந்த முயற்சி பற்றி விலாவாரியாக செய்தியாளர்களுடன் பேசிய அதிமுக தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், யாருக்குப் பதவி ஆசை? எனக்கும் பிள்ளை இருக்கிறது, உங்களுக்கும் இருக்கிறார். அழைத்து வாருங்கள், சத்தியம் அடித்துச் சொல்கிறேன் என்கிறார்.
நாலாம் தேதி தேர்தல் முடிவு வந்த நாளில், ஊரிலிருந்து சென்னை வரும்போது, 7.30 மணிக்கு செங்கல்பட்டைத் தாண்டும்போது, திமுகவிலிருந்து இரு முன்னாள் அமைச்சர்கள் தொலைபேசியில் அழைத்தார்கள். பார்த்து நல்ல பதவிகளாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.
மறுநாள் காலையில் விஷயம் தெரிய வந்தது. பொதுச் செயலர் சொல்கிறார். நாம் ஆட்சி அமைக்கிறோம். திமுக நமக்கு ஆதரவு தருகிறது. வெளியிலிருந்து ஆதரவு தருகிறார்கள். அமைச்சர்கள் எல்லாரும் நாம்தான். நான் தில்லியில் பேசிவிட்டேன் என்றார். நாங்கள் எல்லாரும் இருந்தோம். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றபோது, எல்லாம் ஏற்றுக் கொள்வார்கள் என்றார் பழனிசாமி என்று சண்முகம் கூறுகிறார். நேர்காணலில் பேசிக்கொண்டிருக்கும்போதே, உடன் இருப்பவர்கள் சண்முகத்தைத் தடுக்க முனைகிறார்கள், அவரோ, யோவ் சொன்னதைத்தானே சொல்கிறேன் என்று தொடருகிறார்.
மேலும், திருமாவளவனை முதலமைச்சராக்குகிறோம் என்று திமுகவால் முன்மொழியப்பட்டது. 33 அமைச்சர்களையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. நாங்கள் ஏற்கலாம் என்று சொன்னோம். ஆனால், இருந்தால் நான் முதலமைச்சர், இல்லையென்றால் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்றிருக்கிறார் சண்முகம்.
ஆனால், இவற்றையெல்லாம் இல்லவே இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியும் திமுகவின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதியும் மறுத்திருக்கின்றனர்.
“அதுதான் இல்லையென்று சொல்லியாச்சே. அதிமுக தோன்றியதே திமுக எதிர்ப்பில்தான். மக்களிடம் தவறான தகவலைச் சொல்லி தவெக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் (சி.வி. சண்முகம் குழுவினர்) இவ்வாறு கூறுகிறார்கள். அதிமுக, கூட்டணி தவிர வேறு யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நூற்றுக்கு நூறு சதவிகிதம் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
தேர்தல் முடிவு வந்த மறுநாளே, திமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும் எனத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். அவர்கள் உடைவதற்கு எங்களைக் காரணம் காட்டுகிறார்கள். சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று மறுத்தார் ஆர்.எஸ். பாரதி.
அதேவேளையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பிறகு, தவெகவை அழைத்து நிரூபிக்காத பட்சத்தில் தேர்தலைத் தவிர்க்க, கட்சியின் நலனை முன்வைத்து, என்ன முடிவு எடுப்பது என்பதற்கான அதிகாரத்தைத் தலைவருக்கு வழங்கி முடிவெடுக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார் பாரதி.
‘இதுவரை அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை. தலைவர் முடிவெடுத்தால் திமுக ஏற்றுக்கொள்ளும். இதுவரை அந்த முடிவு எடுக்கவில்லை; தலைவர் முடிவு எங்கள் முடிவு’ என்று இளைஞரணிக் கூட்டத்துக்குப் பின் தெரிவித்தார் டி.கே.எஸ். இளங்கோவன்.
ஆக, இவர்களில் யார் சொல்வதெல்லாம் உண்மை? எந்த அளவுக்கு உண்மை?
[வரலாற்றில் மத்தியில் ராஜீவ் காந்தி காலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்று, இடையிலேயே திடீரென ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில், நாடாளுமன்றத்தைச் சந்திக்காமலேயே பிரதமர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்து – வரலாற்றில் இடம் பெற்றவர் மாபெரும் விவசாயிகள் தலைவரான சௌத்ரி சரண்சிங் – சும்மா ஒரு தகவலுக்காக!].
இங்கே இப்படியொரு முயற்சி எதற்காக நடைபெற்றது? இத்தகைய முயற்சியில் திமுகவையும் அதிமுகவையும் இணைக்கிற அந்தப் புள்ளிதான் எது? இந்த யோசனைக்கு முன்னதாக – எந்த வகையிலும் உறுதி செய்யப்படாத, உறுதி செய்ய முடியாத ஒரு தகவலும் பரவலாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது – சில திமுக, அதிமுக உயர் தலைவர்களின் இளைய தலைமுறைகள் சந்தித்துப் பேசினர் என்று. கூடவே, விரைவில் பாரதிய ஜனதாவும் திமுகவும் அணி சேரும் என்றொரு தகவலும் இப்போது பரவுகிறது அல்லது பரப்பப்படுகிறது!
1999 ஏப்ரலில் மத்தியில் பிரதமர் வாஜபேயி தலைமையிலான ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டது. அதே ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன், பெரும் விமர்சனத்துக்கு இடையே, திமுக இணைந்துகொண்டது தனிக் கதை. தேர்தலில் வெற்றி பெற்றதுடன் மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றது.
2003 டிசம்பரில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய திமுக, 2004, 2009 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டு வெற்றி பெற்று, 2013 மார்ச் வரையில் மத்தியில் அமைச்சரையிலும் இடம் பெற்றிருந்தது. கடைசி நேரத்தில் திடீரென விலகி, 2014 மக்களவைத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டது. பிறகு மறுபடியும் காங்கிரஸுடன் உறவு. இப்போது பிரிவு.
ஆக, அரசியலில் இவையெல்லாம் சாதாரணம்தான். ஆனாலும், சில நேரங்களில் சாதாரண மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகத்தான் இருக்கின்றன.
என்றால், மக்கள் யாரைத்தான் நம்புவது? எந்த அடிப்படையில்? மிச்சமிருப்பது ஒருவர்தான், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் நினைத்தால் மட்டும்தான் உண்மையை வெளிப்படையாகச் சொல்ல முடியும்!
Summary
About the untold truths regarding the alleged attempts to form an AIADMK government with the support of the DMK in Tamil Nadu...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும் இணைந்த ஜோடி

தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்

அதிமுக தலைமையில் ஆட்சி! ஆதரிக்க முயன்றதா திமுக? சிபிஎம் எம்ஏ பேபி பதில்

திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



