தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அமைச்சரவை முழுமையாகப் பதவியேற்றுவிட்டது – முதல்வராகத் தவெகவின் தலைவர் சி. ஜோசப் விஜய் பதவியேற்று இன்றுடன் இரு வாரங்கள்!
காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் அறுதிப் பெரும்பான்மையும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. கம்யூனிஸ்ட்கள் தவிர மற்றவர்கள் ஆட்சியிலும் பங்கு பெற்றிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 1967-ல் ஒரு பெரும் மாற்றம் வந்தது; காங்கிரஸை வீழ்த்தி முதல்வர் அண்ணா தலைமையில் முதன்முதலாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்தது. ஆனால், அந்த மாற்றம் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை.
1949-ல் தொடக்கப்பட்டுத் திராவிடம், தமிழ், மாநில உரிமைகள் மற்றும் எண்ணற்ற சமூகநீதிக் கருத்துகள் என எண்ணற்ற பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாக இடைவிடாமல் செயல்பட்டு இளையதலைமுறையின் ஆதரவுடன், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக வெற்றி பெற்றது.
ஆனால், இப்போது நடித்துக்கொண்டிருந்த விஜய் நடிப்பை விட்டு விலகிக் கட்சி தொடங்கிய சுமார் இரண்டரை ஆண்டுகளில் இந்த அதிரடி மாற்றம் சாத்தியப்பட்டிருக்கிறது. இந்த வெற்றியில், இளைஞர்களை, வாக்காளர்களை அணி திரட்டுவதில் இந்தக் காலத்தின் தவிர்க்க முடியாத சமூக ஊடகம் பெரும் பங்காற்றியிருக்கிறது என்பதை இப்போது எல்லாருமே ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்த வெற்றிக்குப் பெரும்பாலும் இளைஞர்களின் வாக்குகள்தான் காரணம் என நம்பப்படுகிறது. தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாவிட்டாலும்கூட தனிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது தவெக.
திரைப்படங்கள்வழியேதான் ஒட்டுமொத்த மக்களுக்கும் விஜய் அறிமுகம். அரசியல் கட்சி தொடங்கியபோதும் அவர்கள் ரசித்தனர்; ஆதரித்தும் வாக்களித்தும் இருக்கின்றனர்.
ஊழலை ஒழிப்போம், மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று தேர்தல் பிரசாரங்களில் விஜய் குறிப்பிட்டார். அவ்வாறே செய்யுங்கள் என்று பெரும்பான்மையான தொகுதி மக்களும் அவர் நிறுத்திவைத்த வேட்பாளர்களை எல்லாம் வெற்றி பெறச் செய்திருக்கின்றனர் (இந்தத் தேர்தல், வெற்றி, பின்னுள்ள அரசியல் பற்றிய விஷயங்களும் விவாதங்களும் வேறு).
விஜய் நல்லது செய்வார் என்ற எண்ணத்தில்தான் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். தூய சக்தி என்பதற்காக, மாற்றத்தைத் தருவார் என்ற நம்பிக்கையில். எப்படிச் செய்வார், செய்ய முடியுமா? என்ற கவலையெல்லாம் அவர்களில் யாருக்கும் இல்லை; தேவைப்படவுமில்லை.
திரையில் தோன்றிய அவருடைய பிம்பங்கள் யாவும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கிறது. அரசிலும் ஆட்சியிலும் அவரை அவ்வாறே நம்புகின்றனர்; அவ்வாறு இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
தீய சக்திக்கும் தூய சக்திக்கும்தான் போட்டி என்று பிரசாரங்களில் மீண்டும் மீண்டும் நிறுவிவந்திருக்கிறார் விஜய். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், காவல்நிலைய மரணங்கள் மற்றும் ஊழல்கள்தான் உடனடி உதாரணங்கள்.
புதிய அரசு பொறுப்பேற்று இரு வாரங்களாகிவிட்டன. ஊழல் ஒழிப்பை எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது? லஞ்சம் இல்லாத இடம் எது? ஊழல் இல்லாத துறை எது?
பெரும்பாலும், மக்கள் நேரடியாக - அடிக்கடி தொடர்புகொள்ளக் கூடிய இடங்கள் அதிகாரத்தின் தொடக்க இடம் காவல் நிலையங்களும் கிராம நிர்வாக அலுவலகங்களும். மேலும் பட்டியலிட்டால் வருவாய்த் துறை, பத்திரப் பதிவுத் துறை தொடக்கம் உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள்.
இன்றைய சூழலில் ஒரேயொரு மின் இணைப்பை அல்லது கட்டட அனுமதியைச் ‘செலவில்லாமல்’ திருவாளர் பொதுஜனத்தால் வாங்கிவிட முடியுமா? எண்ணற்ற விதிகளில் ஏதாவதொன்றைக் காரணமாகக் காட்டி, விதிப்படியே - சட்டப்படியே, இந்த அலுவலர்கள் இழுத்தடித்துவிடுவார்கள் (எல்லாமே சட்டப்படி நடக்க வேண்டும் அல்லவா? என்றும் நக்கலடிக்கவும்கூட செய்வார்கள்). இங்கேதான், இருக்கிற விதிகளும்கூட மக்கள் நலனையே இறுதி இலக்காக எண்ணக் கூடியவையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
எளிமைப்படுத்திச் சொன்னால், எந்தவோர் அரசு அலுவலகமாக இருந்தாலும் ஒவ்வொரு விஷயமும் அல்லது விண்ணப்பமும் குறிப்பிட்ட காலத்தில் - நாள்களில் முடித்துத் தரப்பட வேண்டும், தரப்படும் என்று வெளிப்படையாக உறுதியளிப்பது மட்டுமல்ல; நடைமுறைப்படுத்தவும் வேண்டும். தாமதம் நேரிட்டால் எந்த இடத்தில், ஏன் என்று தெரிவித்துத் தீர்த்துவைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மின்வாரியம், பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், கனிமவளத் துறை போன்ற சில ஏரியாக்கள் எல்லாமும் வேற லெவல். ஊழலை ஒழிப்பதென்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஒப்பந்தங்களில் தொடங்கி எங்கெங்கோ செல்லும் இதன் வேர்களும் கிளைகளும். ஆனால், ஒழித்தாக வேண்டிய தேவையிருக்கிறது.
லஞ்சம் என்றால், எந்தத் துறையாக இருந்தாலும் எந்த இடத்தில் என்றாலும் உடனுக்குடன் புகார் செய்ய, மாநில அளவில் ரகசியம் காக்கும் ஒற்றை வாட்ஸ்ஆப் எண்ணை அறிவித்து, புகாரின் தொடர்ச்சியாக சில மணி நேரங்களில் நடவடிக்கையும் எடுக்கப்படுமானால்... எடுக்கப்படுமானால் எளிதில் லஞ்சங்கள் குறையலாம்.
சமூக ஊடகங்களில் முனைப்பாகச் செயல்படும் தவெக தொண்டர்கள் இருக்கிறார்கள். லஞ்ச – ஊழல் ஒழிப்பில் இவர்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் (நேரடி அதிரடி ஆய்வுகளை எல்லாம் விட்டுவிட்டு!).
திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த மாதிரியான ‘தீய சங்கதிகள்’ எதுவும் தாங்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ள தூய சக்தியின் ஆட்சிக் காலத்தில் நடைபெறக் கூடாது என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.
புதிய அரசின் பெரும் பலம் – மக்கள் அளித்திருக்கும் ஆதரவு, எதையும் எதிர்பாராத தொண்டர்கள், அவர்கள் தந்த வெற்றி; பலவீனம் – மிகச் சிலரைத் தவிர அனைவருமே ஆட்சிக்கும் அரசை நடத்துவதற்கும் புதியவர்கள்.
இவற்றைத் தவிர அரசு நிர்வாக ரீதியில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள். ஏற்கெனவே இருப்பனவற்றைத் திருத்த வேண்டியதுடன், புதிதாக உருவாக்க வேண்டியதும் இருக்கும். அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் கண்டிப்பாகத் தொடர் விளைவுகள் இருக்கும். நல்லதாகவும் இருக்கலாம்; மோசமானதாகவும் இருக்கலாம். மோசமோ என முடிவெடுக்காமலும் இருந்துவிட முடியாது.
அமெரிக்கா - ஈரான் போர் உள்பட பல்வேறு காரணங்களால் உலகளாவிய அளவிலும் இந்திய அளவிலும் பெரும் பொருளாதார - நிதிச் சிக்கல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் தமிழ்நாட்டிலும் எதிரொலிப்பது தவிர்க்க இயலாதது.
நிதியைத் திரட்டுவதும், மத்திய அரசிடமிருந்து பெறுவதும், அவற்றைத் திட்டங்களுக்காகப் பிரித்தளிப்பதும் பெரும் பிரச்சினைகளாகவே இருக்கும். தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவது வரை மத்திய அரசைச் சமாளிப்பதே புதிய அரசுக்கு ஒரு பெரிய ‘டாஸ்க்’காக இருக்கும் (இதற்காகத் தனித்துறையேகூட உருவாக்கலாம்!).
1967 அரசியல் மாற்றத்தில் தமிழும் மேடைப் பேச்சுகளும் எழுத்துகளும் திரைப்பட வசனங்களும் பெரும் பங்காற்றின. 2026 மாற்றத்தில் திரை நாயக ரசனையுடன் சமூக ஊடக பிரசாரங்களும் பெரும் பலனை அளித்திருக்கின்றன. 1967 மாற்றம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்திருக்கிறது. தற்போதைய புதிய மாற்றமும் உறுதி செய்ய - நிலைபெறச் செய்ய வேண்டும். மாற்றம் என்பது சும்மா ஒரு பேச்சுக்கு முன்வைக்கப்பட்டதாகிவிடக் கூடாது என்பதில் பெருங்கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
1967 சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றபோது அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருந்த காமராஜர் இவ்வாறு கூறினார்:
“பிறரைப் போலவே எனக்கும் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை விளைவித்துள்ளன. இந்த ராஜ்யத்தில் இத்தகைய படுதோல்வி கிடைத்ததற்கான காரணங்களை துல்லியமாக மதிப்பிடுவது சிரமம்.
“இந்த இருபது ஆண்டுகளாக மக்களுக்காக விசுவாசத்துடன் முழுத் திறமையுடன் காங்கிரஸ் உழைத்து வந்திருக்கிறது. எல்லா துறைகளிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இது உண்மையாயினும் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்கள் ஒரு மாறுதலை விரும்புகிறார்கள் என்பது தெளிவு. வோட்டுப் பதிவாயிருப்பதன் போக்கு இதைக் காட்டுகிறது. அது எவ்வாறாயினும், வோட்டுகளின் தீர்ப்புக்கு மதிப்புத் தர வேண்டியதே. பதவிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் கட்சிக்கு நல்வாழ்த்துக் கூறுகிறேன்.”
பிறகு ஆறு மாதங்கள் வரை அண்ணாவின் திமுக அரசு பற்றி அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள், கொஞ்சம் அவகாசம் வேண்டுமல்லவா? என்று காமராஜர் குறிப்பிட்டதாகவும் சொல்வார்கள். இப்போதும் விஜய்யும் தவெகவினரும் புதிதாகத்தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளான அனைவரும் காமராஜர் பாணியில் ஆறு மாதங்களேனும் பொறுத்திருப்பதே சிறப்பு எனலாம்.
தவெகவைப் பொருத்தவரை, அரசியலில் ஓர் எதிர்க்கட்சியாக நின்று ஆளும் அரசையும் நிர்வாகத்தையும் குறை சொல்வது, குற்றம் சாட்டுவது என்பது வேறு. அதே அரசைக் கைப்பற்றி ஆட்சி செய்வது என்பது வேறு.
திரைப்படங்களாக இருந்தால் கிளைமாக்ஸ் முடிந்ததும் கைதட்டலுடன் திரைக்கு எதிரே இருக்கும் அனைவரும் எழுந்து அவரவர் வீடுகளுக்குச் சென்று அவரவர் பாடுகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இங்கே அரசியலிலோ, தமிழ்நாட்டில் பெரும் வெற்றியை, மாற்றத்தை – திமுக, அதிமுக என இரு திராவிட கட்சிகளையும் தோல்வியுறச் செய்து – புதிய கிளைமாக்ஸை, புதிய தலைவரை உருவாக்கித் தந்திருக்கிறார்கள் மக்கள்.
அரசியலைப் பொருத்தவரை இதுவரை நடந்தவை, பேச்சு, பிரசாரங்கள், எல்லாமும் டிரெய்லர்கள்தான்; உள்ளபடியே இப்போதுதான் மெயின் பிக்சர் தொடங்கியிருக்கிறது. வாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும், வேண்டியவர்களும் வேண்டாதவர்களும் என எல்லாரும் நிஜத்தில் அடுத்தடுத்த நகர்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் – ஏனெனில் எல்லாருக்கும் சேர்த்துதான் முதல்வர் – சி. ஜோசப் விஜய்!
*
பீனிக்ஸ் பறவையும் கரப்பான் பூச்சியும்!
வேலையில்லா இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகளெனக் கருத்துக் கூறிய பின், அந்தப் பொருளில் சொல்லவில்லை என்று மறுத்துவிட்டார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த். கரப்பான் பூச்சிகள் எல்லாம் ஒன்றிணைய, ஒரே வாரத்தில் நிறைய பேரைக் கலக்கியிருக்கிறது கரப்பான் பூச்சி மக்கள் கட்சி. இணையத்தில் இதன் எக்ஸ் பக்கத்தைக் கோடிகளில் பின்தொடரவே அதிகாரம் மிக்கவர்கள் முடக்கிவிட்டனர். கரப்பான் பூச்சியின் பிற சமூக ஊடகப் பக்கங்களுக்கும் அதே கதி. ஆனாலும் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் தோன்றிக் கொண்டேயிருக்கிறது கரப்பான் பூச்சிகள். காவியங்களில்தான் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். நிஜத்திலும் சரி, இணையத்திலும் சரி, கரப்பான் பூச்சிகள்தான் வீறுகொண்டெழுகின்றன.
*
பைசாக் கணக்கு!
பத்து நாள்களில் மூன்று முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மே 15 ஆம் தேதி லிட்டருக்கு ரூ. 3, ஓகே.
மே 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக உயர்த்தியபோது, லிட்டருக்கு பெட்ரோலுக்கு 87 காசுகள், டீசலுக்கு 91 காசுகள்!
மூன்றாவது முறை மே 23 ஆம் தேதி லிட்டருக்கு பெட்ரோலுக்கு 82 காசுகள் உயர்ந்து ரூ. 99.51, டீசலுக்கு 91 காசுகள் உயர்ந்து ரூ. 92.49!
உயர்த்துவதுதான் உயர்த்துகிறீர்கள், அது என்ன இந்த பைசா கணக்கு? எந்தப் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மிச்சம் 49 காசுகளும் 51 காசுகளும் தருகிறார்கள்? கொடுக்கல் வாங்கல் எல்லாமும் இப்போது ரவுண்டாகத்தான். இந்தப் பைசாக்களால் யாருக்கு லாபம்? யாருக்கு மேலும் நஷ்டம்?
Summary
About the expectations of the people that made the TVK win the 2026 Tamil Nadu Assembly elections...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 10 காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுவது ஏன் தெரியுமா?

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!

திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி! திமுக வேட்பாளரை 27,416 வாக்குகளில் வீழ்த்தினாா்

தமிழ்நாடு தேர்தல்! தவெக வெற்றிபெற்றது எப்படி?
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher




