2026 பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில்தான் மதிமுக போட்டியிட வேண்டும் என்ற தங்களது எண்ணம் ஈடேறவில்லையே?
கூட்டணியில் கூடுதல் இயக்கங்கள் சேர்ந்துள்ளன. காங்கிரஸுக்கு கடந்த தேர்தலைவிடக் கூடுதலாக 3 இடங்கள், விசிகவுக்கு கடந்த முறையைவிடக் கூடுதலாக 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சி காரணமாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், மதிமுகவுக்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. எனவே, இரட்டை இலக்கத்தில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போனது.
தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைமை பெரியண்ணன் மனப்பான்மையுடன் நடந்து கொண்டதா?
2021 பேரவைத் தேர்தலில் தனித்து 173 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளை தங்களது சின்னத்தில் நிறுத்தியதையும் சேர்த்து கணக்கிட்டால் 188 இடங்களில் திமுக போட்டியிட்டது. ஆனால், இந்த முறை (2026 தேர்தல்) தனித்து 164 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளை தங்களது சின்னத்தில் நிறுத்தியதையும் சேர்த்து 175 இடங்களில்தான் போட்டியிடுகிறது. எனவே, திமுகவும் தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது.
நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம் என மதிமுக தனது அதிருப்தியை பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறது. இதனால், தேர்தல் களத்தில் தோழமைக் கட்சிகளிடையே பரஸ்பரம் இணக்கம் உள்ளதா?
மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற அனுமதித்துவிடக் கூடாது என்ற ஒற்றைப் புள்ளியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுமே உறுதியாக உள்ளன. தொகுதிகள் எண்ணிக்கை, விரும்பிய தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் கடந்து, இப்போது தீவிரமாக பிரசாரம் செய்ய களத்துக்கு வந்துவிட்டோம். இப்போது, எங்களது முன்பாக உள்ள இலக்கு அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்துவது ஒன்று மட்டுமே.
சீர்காழி தொகுதியில் மட்டும் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்ற முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டதன் பின்னணி என்ன?
ஒரு தொகுதியிலாவது தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாகவும், கட்சியின் விருப்பமாகவும் இருந்தது. எனவேதான், சீர்காழியில் தனிச் சின்னத்தில் போட்டி என அறிவிக்கப்பட்டது. கடந்த முறை திமுக வெற்றி பெற்ற தொகுதிதான் சீர்காழி. இங்கு திமுகவுக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. மதிமுகவைப் பொருத்தமட்டில் சீர்காழியில் கட்டமைப்பு குறைவு. எனவே, இந்தத் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு எதிர
ணிக்கு வாய்ப்பை அளித்துவிடக் கூடாது என்பதால், கூட்டணியின் தலைமையும், மதிமுகவின் தலைமையும், இணைந்து எடுத்த முடிவின்படியே தனிச் சின்னத்தில் போட்டியிடும் முடிவைக் கைவிட்டோம்.
முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என முதன்முதலில் குரல் கொடுத்து அன்றுமுதல் இன்று வரை அவரது கரத்தை வலுப்படுத்தி வருவதாகக் கூறும் மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கவில்லையே?
அதையெல்லாம் கடந்து வந்துவிட்டோம். இயக்கத்தின் நலனா?, தமிழகத்தின் நலனா? என்ற கேள்வி எழும்போதெல்லாம் தமிழகத்தின் நலன் மீதுதான் மதிமுக கவனம் செலுத்தும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியும், அதற்காக களப் பணியாற்ற வேண்டும் என்பதுமே இப்போது எங்களது தலையாய கடமையாக உள்ளது.
கூட்டணிக்கு திடீர் வரவான தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளித்ததுடன், அக் கட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது, பல ஆண்டுகளாக கூட்டணியில் தொடரும் கட்சிகளை கவலைக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளதா?
தொகுதிகள் எண்ணிக்கை குறையும்போது அனைத்துக் கட்சிகளுக்கும் மகிழ்ச்சி இருக்காது. வருத்தம் ஏற்படுவது இயற்கை. பொதுவாக எந்தக் கூட்டணியாக இருந்தாலும் தொகுதிப் பங்கீடு நடைபெறும்போது இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறும். கூட்டணி நலனுக்காக, அதன் தலைமைப் பொறுப்பேற்றுள்ள திமுக உள்பட கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என அனைத்துக் கட்சிகளுமே விட்டுக் கொடுத்துள்ளன. சமரசமும் செய்திருக்கின்றன.
மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற 2026 பேரவைத் தேர்தலை ஒரு வாய்ப்பாக மதிமுக பயன்படுத்தவில்லையா?
மாநிலக் கட்சிக்கான தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கு குறைந்தது 15 இடங்களுக்கு மேல் போட்டியிட வேண்டும். இப்போது, அதற்கான வாய்ப்பும், களமும் மதிமுகவுக்கு கிடைக்கவில்லை. கடந்த முறை விசிகவுக்கு இரு மக்களவைத் தொகுதிகளில் கிடைத்த வெற்றி மூலம் அங்கீகாரம் கிடைத்தது. இதேபோல, மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும்.
கடந்த முறை மதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் சாத்தூர், அரியலூர், வாசுதேவநல்லூர் (தனி) ஆகிய 3 தொகுதிகளை விட்டுக் கொடுத்தது ஏன்?
புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சித் தலைமை எடுத்த முடிவு இது.
திருச்சி மக்களவைத் தொகுதிக்குள் வரும் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெறுவாரா?
மிகப்பெரிய நட்சத்திரம் என்ற வகையில், விஜய்க்கு பின்னால் மிகப்பெரிய இளைஞர் கூட்டம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கட்சித் தலைமை மட்டும் போதாது. வாக்குகளைச் சிதறாமல் வாக்குச்சாவடிக்கு கொண்டுசேர்க்க கட்சிக்கு முழுமையான அளவில் கட்டமைப்பு தேவை. தவெகவில் அத்தகைய கட்டமைப்பு இல்லை. திருச்சி கிழக்கில் திமுகவே மீண்டும் வெற்றி பெறும்.
தமிழகத்தில் புதிதாக தேர்தல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கப் போகும் வாக்குகள் எவை? யாருக்கு பாதிப்பு ஏற்படும்?
தவெக தலைவர் விஜய் வாங்குகிற ஒவ்வொரு வாக்கும் அதிமுக-பாஜக கூட்டணியைப் பெரிதும் பாதிக்கும். ஆளும் கட்சி எதிர்ப்பு நிலை வாக்குகள், விஜய் வருகையால் பிளவுபடுகிறது. ஆளும் கட்சி எதிர்ப்பு நிலை வாக்குகளை அதிமுக கூட்டணி இழக்கிறது. இது, அதிமுகவின் வெற்றியை மிகப் பெரிய அளவில் பாதிக்கும். தேர்தல் முடிவுகளில் அது தெரியவரும்.
நேர்காணல்: ஆர்.முருகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள் நலத்திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

கோவில்பட்டி தொகுதி வளா்ச்சிக்கு மதிமுக துணை நிற்கும்: துரை வைகோ எம்.பி.

4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


