திமுக கூட்டணி தலைவர் கார்கே எடுத்த முடிவு! மாணிக்கம் தாகூர் எம்.பி. சிறப்பு நேர்காணல்
அது எப்போதும் நீர்த்துப் போகாத முழக்கம். காமராஜர் ஆட்சி என்பது ஒரு நியாயமான, நேர்மையான நல்லாட்சி.


மக்களவை காங்கிரஸ் கட்சியின் கொறடாவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுக்கத் தொண்டருமான விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழகத்தின் குறிப்பிடத்தக்க காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். தீர்க்கமான அரசியல் பார்வையும், பரவலாக அறியப்படும் தமிழ்நாடு காங்கிரஸின் முகமுமான அவர் "தினமணி' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து...
காமராஜருக்குப் பிறகு தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கவில்லை. இதனால், "காமராஜர் மாடல்' என்ற முழக்கம் நீர்த்துப் போய்விட்டதா?
அது எப்போதும் நீர்த்துப் போகாத முழக்கம். காமராஜர் ஆட்சி என்பது ஒரு நியாயமான, நேர்மையான நல்லாட்சி. அத்தகைய ஒரு மாடல் மீண்டும் வர வேண்டும் என்பது ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கனவாகும்.
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் பெற்றிருப்பது அதன் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைப் பிரதிபலிக்கவில்லை என கருதுகிறீர்களா?
கூட்டணியில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, இடதுசாரி தோழர்கள் என அனைத்துக் கட்சித் தொண்டர்களின் விருப்பத்தையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 1,200 தொகுதிகளாவது தேவைப்படும். ஆனால், பேரவையில் 234 தொகுதிகள்தான் உள்ளன. எல்லோரையும் சமரசப்படுத்த முடியாது. நாங்கள் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று. இப்போதைக்கு எங்களது பொது எதிரி கோட்சே கொள்கையைத் தாங்கிய ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்ப்பதுதான்.
ஜார்க்கண்ட் ஆட்சிப் பகிர்வு மாடல் தமிழகத்திலும் வேண்டும் என்றீர்களே... அது என்னவாயிற்று?
தமிழகத்தில் திமுக உடனான கூட்டணி என்பது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எடுத்த முடிவு. அது எதுவானாலும் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
அதிகாரப் பகிர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இனி களத்தில் எத்தகைய பிரசாரத்தை முன்னெடுக்கப்போகிறீர்கள்?
அகில இந்தியத் தலைவர் கார்கே எடுத்த முடிவு என்பதால் ஆட்சியில் பங்கு என்பதை தேர்தலுக்கு முன்னர் இனி கேட்க வேண்டியதில்லை. மதச்சார்பற்ற கூட்டணி வெல்ல வேண்டும். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து மீண்டும் முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்ற சிந்தனையில் எங்கள் பணி தொடரும்.
மதுரை, விருதுநகர் பகுதிகளில் கை சின்னத்தை "ஜென் இஸட்' இளம் வாக்காளர்களிடம் எப்படி கொண்டுசெல்லப் போகிறீர்கள்?
தேர்தல் என வரும்போது ஜென் இஸட் பிரிவு வாக்காளர்கள் மட்டும் வாக்களிப்பதில்லை. யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவரே வெற்றி பெறுகிறார். எங்களைப் பொருத்தவரை இந்தக் கூட்டணி பலமானது, மதச்சார்பற்றது. ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 80,000 பேரை வாக்களிக்கச் செய்தோமானால் நாங்கள் ஜெயித்துவிட்டோம் என அர்த்தம்.
புதுச்சேரியில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்கள் பலர் போட்டி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பது வெற்றி வாய்ப்பை பாதிக்காதா?
அங்கு வேட்புமனுக்களைத் திரும்பப் பெறும் நாளில்தான் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையே முடிந்தது. காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் அறிவாலயத்துக்குச் சென்று பேசுவதுபோல புதுச்சேரியில் திமுகவினர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து பேசியிருக்க வேண்டும். தற்போது மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் கட்சியின் வேட்பாளர்களாக 16 பேரை அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் "2031' பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு கூட்டணியை வழிநடத்துமா அல்லது இப்போதுபோலக் கூட்டணிக் கட்சியாகவே தொடருமா?
இப்போதைக்கு எங்கள் கவனம் முழுவதும் வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்பதில்தான் உள்ளது.
திமுக, காங்கிரஸுக்கு பாரம்பரியமாகக் கிடைத்துவந்த சிறுபான்மையினரின் ஆதரவு வாக்குகள் புதிய வரவான தவெகவால் பிரியும் நிலை உள்ளதே...?
ஏற்கெனவே கூறியது போன்று காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் 42-45 சதவீத வாக்குகளைத் தக்க வைக்க வேண்டும். இதைத் தக்கவைத்துக் கொண்டாலே யார் வாக்கு யாருக்கு பிரியும் என்பது தெளிவாகிவிடும். தவெக தொடங்கப்பட்டு முதல் தேர்தலைச் சந்திக்கிறது. அதன் தலைவரை (விஜய்) தமிழகத்தில் பெரிய நடிகர்களுக்கே உரித்தான கவர்ச்சியாகப் பார்ப்பதற்காக மக்கள் கூடுகின்றனர். அவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். எங்கள் வாக்காளர்களும், கூட்டணி வாக்காளர்களும் சிதறுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
காங்கிரஸ் தொகுதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஜோதிமணி எம்.பி. குற்றஞ்சாட்டியது பற்றி...
கடந்த முறை வென்ற 18-இல் 16 இடங்களைப் பெற்றிருக்கிறோம். மீதம் 12 தொகுதிகள் உள்ளன. அவற்றுக்காக இவ்வளவு பெரிய வார்த்தையை ஜோதிமணி பயன்படுத்தியது நியாயமா எனத் தெரியவில்லை. அவருக்கு வருத்தம் இருந்திருக்கலாம். நினைத்த தொகுதி கிடைக்காமல் இருந்திருக்கலாம். தேர்தலில் முன்னோக்கிச் செல்லும் இத்தருணத்தில் இப்படிப்பட்ட மனக்குறைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
ராகுலுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் சகோதரத்துவ பிணைப்பு இருப்பதாக அடிக்கடி குறிப்பிடுவீர்கள். அந்தப் பிணைப்பே தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சிக்கு சுமையாகிவிட்டதா?
அதை நான் சுமை என்று சொல்லமாட்டேன். ராகுல் - ஸ்டாலின் உறவு சகோதரத்துவமானது.
2014-இல் பிரதமர் மோடி அரசு அமைந்த பிறகு, கட்சிகளை எப்படி எல்லாம் பாஜக அழிக்க முற்பட்டது என்ற புள்ளியில் தொடங்கிய அந்த உறவு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மேம்பட்டு வருகிறது. 2019-இல் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தார். 2021-இல் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ராகுல் அறிவித்தார். அந்த உறவு பலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நேர்காணல்: வே.சுந்தரேஸ்வரன்
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...